Pages

Showing posts with label சமூகம். Show all posts
Showing posts with label சமூகம். Show all posts

Saturday, January 26, 2013

விஸ்வரூபம் - முஸ்லீம்களுக்கு ஹீரோவா? வில்லனா?


விஸ்வரூபம் படம் பார்ப்பதே விஸ்வரூபமாகிவிட்ட நிலையில் இங்கே ரிலீஸ் ஆன முதல் இரண்டாம் காட்சி தான் பார்க்க முடிந்தது. போடுவார்களா மாட்டார்களா என்ற சந்தேகத்துடன் தான் தியேட்டரில் நுழைந்தேன். படத்தின் இடையில் போலீஸ் வந்த போது எங்கே படம் பாதியில் நிறுத்தப்பட்டு விடுமோ என்று கூட எண்ணினேன், ஆனால் எப்படியோ படத்தை முழுமையாக பார்க்க முடிந்தது. 

பேஸ்புக்கில் இதை ''அமெரிக்க கிறிஸ்துவர்களை கொல்ல முயற்சிக்கும் ஆப்கன் முஸ்லீம் சதியை இந்தியாவின் முஸ்லீம் முறியடிக்கும் கதை." என்று சொல்லி இருந்தேன். இதில்  ஆப்கன் முஸ்லீம் என்பது அல்-கொய்தா தீவிரவாதிகள்.படம் பாதிக்கும் மேல் இவர்கள் தாய்நாடான ஆப்கனில் தான் நடக்கிறது. 

ஆப்கனுக்கே சென்று வந்த ஒரு உணர்வை நமக்கு தருவது போல் இருக்கிறது படத்தின் காட்சியமைப்புகள். சில நொடிகள் வரும் சிறுவர்கள் முதல், படம் நெடுக வரும் கமல், ராகுல் போஸ், ஜெய்தீப் என ஒவ்வொருவரின் நடிப்பும் அருமை.  அங்கிருந்து மீண்டும் அமெரிக்காவுக்கு தாவும் போது கதை முழுக்க கமல் முதுகில். இதை இயக்குனர் கமல் உதவியுடன் நடிகர் கமல் மிக அற்புதமாக முடித்துக் கொடுத்திருக்கிறார். 

கிளைமாக்ஸ் கொஞ்சம் மெதுவாக இருப்பதாக தோன்றினாலும் எந்த வித பதட்டமும் இல்லாமல் நாம் பார்க்கும் உணர்வை தான் படத்தில் இருப்பவர்களும் செய்கிறார்கள், ஆம் தீவிரவாதிகள் ஒன்றும் உள்ளூர் தாதாக்கள் இல்லை அல்லவா கத்தி கூப்பாடு போட. 

படத்தின் ஒவ்வொரு விசயமும் மிக கவனமாக கையாளப்பட்டுள்ளன. இசையை பற்றி சொல்வதென்றால் சொல்லிக் கொண்டே இருக்கலாம். படத்தின் ஆரம்பத்தில் வரும் "உன்னை காணாது நான்" என்ற ஒரு பாடல் மற்றும் ஆப்கனில் நடக்கும் காட்சிகளில் வரும் பின்னணி இசை ஆகியவை சாம்பிள். 

கேமரா, இவ்வளவு புதியதாக காட்சியமைப்புகள் இதுவரை பார்த்தே இருக்க முடியாது நாம். மிக அற்புதமாக கையாண்டுள்ளார் சனு வர்கீஸ். அடுத்து கலை இயக்குனர் லால்குடி இளையராஜா, ஆப்கன் தீவிரவாதிகள் இடங்களாக காட்டப்படுபவற்றை மிக அற்புதமாக அமைத்துள்ளார். 

எடிட்டிங், ஒரே ஒரு காட்சி போதும் மகேஷ் நாராயணன் திறமைக்கு, கமல் தன்னையும் மனைவியையும் பிடித்து வைத்திருப்பவர்களை அடித்து வீழ்த்தும் இடம். மிக அற்புதாக வெட்டி, ஒட்டி இருக்கிறார் படம் முழுக்க.

இனி தடை பற்றி பார்ப்போம். படத்திற்கு தடை வேண்டும் என்பவர்கள் சொல்லும் கருத்துகள் கொல்பவன் குரானை படித்து விட்டு கொல்கிறான், பிரார்த்தனை செய்து விட்டு கொல்கிறான், தீவிரவாதிகளுக்கு தமிழகம் புகலிடம் என்று உள்ளது. 

இங்கே நாம் கவனிக்க வேண்டியது படம் முழுக்க முழுக்க தாலிபான், அல்-கொய்தா தீவிரவாதத்தை பற்றியது. இவர்கள் என்ன முஸ்லீம்களில் நாத்திகர்களா? இல்லை தாங்கள் கொலை செய்யும் போது கடவுள் இல்லை என்று சொல்லி கொல்கிறார்களா? எந்த அளவுக்கு கொலை செய்கிறார்களோ அந்த அளவுக்கு பிரார்த்தனையும் செய்கிறார்கள் என்பதை மறுக்க முடியுமா யாராவது? ஏன் முஸ்லீம் மட்டும் தான் அப்படி செய்வதை காட்ட வேண்டும் என்று கேட்பவர்கள் கொஞ்சம் கமலின் முந்தைய படமான அன்பே சிவத்தை பார்க்கவும். 

படத்தின் மிக முக்கிய கதாப்பாத்திரமான உமர், தான் தமிழ் பேச காரணம் கொஞ்ச நாட்கள் தமிழகம், அந்தமான் பகுதிகளில் பதுங்கி இருந்ததாக சொல்வது. இங்கே கமல் கவனமாக பயிற்சி என்பதை தவிர்த்திருக்கிறார், காரணம் தமிழக இஸ்லாமியர்கள் பற்றி அவர் அறிந்திருப்பதால்.

படத்திற்கு தடை என்பதை அரசியல் என்ற கண்ணோட்டத்தில் தான் பார்க்க முடிகிறது. ஒருவேளை கமல் இதில் அமெரிக்கர்களை காப்பாற்றுவதை இவர்கள் விரும்பவில்லையோ என்னவோ. அப்படி என்றாலும் படத்தை ஆப்கனில் கூட தடை செய்ய முடியாது, அந்த அளவுக்கு உண்மைகளை மட்டுமே சொல்கிறது விஸ்வரூபம்.

எப்படி முஸ்லீம்கள் மட்டுமோ மற்றும் எல்லா முஸ்லீம்களுமோ தீவிரவாதிகள் இல்லையோ அதே போல அமெரிக்கர்கள் அனைவரும் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்பதையும் நாம் மறுக்க முடியாது. அங்கேயும் அரசியல் செய்யவே தீவிரவாதம் என்ற பெயர் பயன்படுத்தபடுகிறது.

கமல் ஏன் முஸ்லீம் தீவிரவாதம் பற்றிய படத்தை எடுத்தார்? இஸ்ரேல், அமெரிக்கா, இலங்கை அரசுகள் செய்யும் கொலைகளை படமாக எடுக்க வேண்டியது தானே என்று கேட்பவர்களுக்கு ஒன்று சொல்கிறேன், வாருங்கள் வந்து நீங்கள் எடுங்கள், உண்மையை உலகுக்கு சொல்லுங்கள். 

ஒரு கலைஞனை நீ ஏன் இதை எடுத்தாய், அதை எடுக்கவில்லை என்று கேட்கும் உரிமை எவருக்கும் இல்லை. ஏன் என்றால் கலைஞன் என்பவன் "யாருக்கும் அடிமை இல்லை, யாருக்கும் அரசன் இல்லை". இந்த படத்தை உங்களை பார்க்க சொல்லி திணிக்கவில்லை கமல். அல்-கொய்தா பற்றிய தன் பார்வையை ஒரு படமாக எடுத்துள்ளார். 

28 முஸ்லீம் அமைப்புகள் படத்தை எதிர்க்கின்றன என்று சொல்லும் எண்ணிக்கையே காட்டுகிறது உங்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளை. எங்கே இந்த படத்தை ஆதரித்து பேசினால் தன்னை மதத்திற்கு எதிரானவன் என்று சொல்லி விடுவார்களோ என்ற பயத்தில் தான் நிறைய பேர் எதிர்க்கிறார்கள். ரிசானா விஷயத்திலேயே இது தெரிந்தது. மதத்தை தாண்டி கொஞ்சம் வெளியே வந்து யோசியுங்கள் உங்களுக்குள் இருக்கும் மனிதம் புலப்படும். 

இந்துக்களில் செய்யும் சாதி அரசியலை தான் உங்கள் தலைவர்களும் செய்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டால் பல பிரச்சினைகள் முடிந்து விடும். அப்போது விஸ்வரூபம் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல உங்களுக்கு.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இந்த பதிவின் பின்னூட்டத்தில் டேம் 999, இன்னொசன்ஸ் ஆஃப் முஸ்லிம் போன்றவற்றிற்கு நான் கூறிய கருத்துக்களை ஏடாகூடமாக யாராவது பயன்படுத்த விரும்பினால் அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள், அந்த படங்கள் மீதான தடையும் தவறு என்பதே என் கருத்து :-) 

Monday, June 4, 2012

சந்தோசம் என்ன விலை?

நேற்று அண்ணன் வீட்டில் இருந்து திரும்பும் போது, எங்கள் ஊரு பையன் ஒருவனை பேருந்தில் சந்தித்தேன். முதலில் அவனுக்கு என்னை நினைவில் இருக்குமா என்ற தெரியாத காரணத்தால் எதுவும் பேசவில்லை, ஏன் என்றால் இது வரை அவனுடன் அதிகம் பேசியது இல்லை. 

திடீர் என்று என்னை பார்த்து "அண்ணா, நீங்க பிரபு தானே?" என்றான். ஆமாம் நீ நவீன் தானே என்றேன், இல்லை நான் அவன் அண்ணன் மனோஜ் என்றான். 

இப்போ என்ன பண்றீங்க என்று கேட்டான், நானும் பெங்களூருவில் இருப்பதாக  சொன்னேன். அவனிடம் என்ன செய்கிறாய் என்று கேட்ட போதே முகம் மாறிவிட்டது. மிக வருத்தமாய் சொன்னான் "இன்ஜினியரிங்" அண்ணா. இப்போதான் முதல் வருடம் முடித்து உள்ளேன். அடுத்து நிறுத்தி இருந்தால் பரவாயில்லை, அவன் அடுத்தடுத்து கேட்ட கேள்விகள் தான் என்னை அதிர வைத்தன. 

அண்ணா, எப்டின்னா படிச்ச உடனே வேலை கிடைச்சுடுமா? இல்ல நிறைய அலையணுமா? கேம்பஸ்ல என்ன கேப்பாங்க, எத்தன சதவிகிதம் மதிப்பெண் வர வேண்டும், என அடுக்கடுக்காக கேள்விகள் தான் கேட்டுக் கொண்டே இருந்தான். அவன் முகத்தில் ஒரு துளி சந்தோசம் கூட இல்லை. 

நாமக்கல் அருகில் இருக்கும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கிறான், பனிரெண்டாம் வகுப்பில் 1030 மதிப்பெண்கள். 

இத்தனை மதிப்பெண் எடுத்தவன், எப்போது தன் வாழ்வை கொண்டாடப் போகிறான்? வாழ்க்கை என்பதை ஒரு ஓட்டப் பந்தயமாக ஆக்கி விட்டோம். வழியில் இருக்கும் சந்தோசங்களை பார்க்காதே, ஓடு ஓடு உன் இலக்கை நோக்கி ஓடு என்று சொல்லி பழக்குகிறோம். 

பத்தாம் வகுப்புக்கு முன்னர் பத்தாம் வகுப்பு தான் இலக்கு, அதன் பின்னர் பனிரெண்டாம் வகுப்பு, பின்னர் கல்லூரி, பின்னர் வேலை, பின்னர் குடும்பம்.  இதில் எது அவன் இலக்கு? ஓடச் சொல்லும் உங்களுக்காவது தெரியுமா? இப்படி ஓடிக் கொண்டே இருந்தால் ஒருவன் எங்கே இளைப்பாருவான்? 



உங்கள் மகன்/மகள் பிற்காலத்தில் நன்றாக வாழ வேண்டும் என்றா? அப்படியென்றால் எப்போது அவன் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? 

சந்தோசம் என்று நிறைய பெற்றோர் நினைப்பது, தன் பிள்ளை நன்றாக படித்து, நல்ல மதிப்பெண் வாங்கி, நல்ல வேலையில் சேர்ந்து, நிறைய சம்பாதிக்க வேண்டும். இது யாருக்கு சந்தோசம். பெற்றோர் ஆகிய உங்களுக்கா?   

ஒரு 17 வயது பையன், தன் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கலாம், ஆனால் அதை நினைத்தே கவலைப் பட வைத்து விட்டோம் நாம்.

நாம் 17-வயதில் கல்லூரியில் இருந்த போது, இரவு கலை நிகழ்ச்சி காணப் போகுதல், ஊருக்கு வந்தால் கிரிக்கெட் விளையாடுதல், கிணற்றில் குளித்தல், கால நிலைக்கு ஏற்ப ஏதேனும் பழம் பொறுக்க செல்லுதல் என்று என் வாழ்க்கையை "வாழ்ந்தேன்." நீங்களும் அப்படியே இருந்திருப்பீர்கள். ஆனால் உங்கள் பிள்ளைகளை ஏன் அதை செய்ய விடாது தடுக்கிறீர்கள்?

இதையே செய்து, இன்று நன்றாக இருக்கும் எத்தனையோ சாதனையாளர்கள் நம்ம ஊரில் உள்ளனர். ஆனால் நாம் அவர்கள் கஷ்டப்பட்டார்கள், முன்னேறினார்கள் என்று கஷ்டபட்டால் தான் வாழக்கையில் ஜெயிக்க முடியும் என்று அவர்கள் மனதில் விதைத்து விட்டோம். அதை தான் பிரதிபலிக்கிறான் நேற்று நான் பார்த்த பையன். ஆனால் எதையும் இஷ்டப்பட்டு செய்தால் கஷ்டமில்லை என்று புரிய வைக்க தெரியவில்லை நமக்கு.

பிள்ளைகளை இயந்திரமாக்கி, பணத்தை அறுவடை செய்ய வேண்டும் என்பதே நிறைய பெற்றோரின் எண்ணமாக உள்ளது. வாழ்க்கையை படிக்க வேண்டியவர்களை, வெறும் புத்தகம் தான் வாழ்க்கை என்று அறியத் தருகிறோம். அதை தாண்டிய கொண்டாட்டங்கள் அவர்கள் உலகில் எப்போதோ நீங்கி விட்டது.

ஒரு கல்லை செதுக்கி கடவுள் என்று சொல்லி, அதற்கு நம் தேவைக்கு படையல் படைத்து, ஆடு வெட்டி எல்லாவற்றையும் நாம் சாப்பிட்டு விடுவோம். நாம் நினைத்தது நடக்காவிட்டால் கடவுளை குறை சொல்வோம். குழந்தைகளும் இது போன்ற கடவுள்களே.

மாணவப் பருவம் என்பது எந்த கவலைகளும் அறியா பருவம் என்று சொல்லிய காலம் உண்டு, ஆனால் இன்று மகிழ்ச்சி அடையாதே, நீ இன்னும் இலக்கை அடையவில்லை என்று விரட்டி, சந்தோசமாக இருக்க கூடாது, என்பதையே சந்தோசம் என்று மாற்றி விட்டோம். 


ஒரு நாளில் எல்லாவற்றையும் விலை கொடுத்து வாங்கிட முடியும் உங்கள் பிள்ளையால், ஆனால் அவனுக்கு வேண்டிய சந்தோசத்தை தவிர. :-(

Monday, December 5, 2011

குடிமகன்


வயிறு முட்டக் குடிப்பவன்
வாழைப் பழம் 
இரண்டு ரூபாய் என்றால்
இருபது நிமிடம் 
பேரம் பேசுகிறான்.

Sunday, December 4, 2011

அர்த்தம்

தெருவில் கிடக்கும் 
குடிக்காரனைத் திட்டிவிட்டு
குப்பையை அருகில் 
கொட்டிச் சென்றால்,
இந்த சமுதாயத்தின் 
மேலுனக்கு அக்கறை
என்று அர்த்தம்.

சாலையில் அடிபட்டு 
சாகக் கிடக்கும் 
முதியவரைப் பார்த்து 
"ச்சச்சோ" என்றால்,
நீ இரக்கமுள்ளவன்
என்று அர்த்தம்.

நடிகையின் மார்பை
நன்றாய் காட்டிவிட்டு 
ரசிகனின் பார்வையில் 
தவறென்று சொன்னால்,
நீ கலைஞன் 
என்று அர்த்தம்.



Thursday, September 22, 2011

நானும் இந்தியன்தானே !!


எல்லோரும் அண்ணாவை ஆதரித்தார்கள் 
நானும் ஆதரித்தேன்! 
எல்லோரும் அணு உலையை எதிர்க்கிறார்கள் 
நானும் எதிர்க்கிறேன் ! 
எல்லோருக்கும் மங்காத்தா சூப்பர் 
எனக்கும் சூப்பர் ! 
எல்லோரும் தூக்கு வேணாம்னாங்க 
நானும் வேணாம்னேன் ! 
எல்லோரும் சும்மா இருக்க 
நானும் சும்மா இருக்கேன் ! 
 ஏன் என்ற கேள்வி 
எல்லாம் கிடையாது
என்ன செய்ய 
நானும் இந்தியன்தானே !!

Tuesday, August 16, 2011

இந்தச் சுதந்திரம் இனிப்பாய் இல்லை

கண்ணாடி அணிந்த மனிதர்
காலாற நடக்க ஆரம்பித்தார்
கையில் ஒரு தடி- அங்கத்தில்
உடை ஒரு அடி
ஆம் மகான் காந்தி
          மகாத்மா காந்தி
மறுபடி வந்தார் இங்கு - ஒரு
கையில் மிட்டாய் பையுடன்
மறு கையில் தேசியக் கொடியுடன்
சுதந்திர தினத்துக்கு ............

முதலில் கண்டது
முதுகு முழுவதும் பையுடன்
ஒரு சிறுவன்
who are you old man?
என்றான் தலை நிமிர்ந்து - நான்
காந்தி என்றார் தலை குனிந்து

what is the matter?
why you giving chocolates?
இது சிறுவன்
சுதந்திர தினமின்று - இது காந்தி
Last year we celebrated it on August 13
Why Now August 15th?
அதிர்ந்தார் மகான்

அடுத்தபடியாய் காந்தி கண்டது
நாட்டின் "குடிமகனை"
யார் நீ என்றதற்கு 
தேசத்தின் தந்தை என்றார்
தேசம் ஆணா ? பெண்ணா?
தெளிவாய் கேட்டான் குடிமகன்
கூடவே தேசியக்கொடி கண்டு
எந்தக் கட்சி நீ?
என்பதையும் சேர்த்து
அதிர்ந்து போன காந்தி
தேசியக்கொடியப்பா என்றார்.

ஆமா கையிலென்ன புட்டி
விளக்குக்கு எண்ணெயா ?
யோவ் விளக்கெண்ணெய்
இது எனக்கு எண்ணெய்
அப்படியென்றால் ?- காந்தியிது
பீர்... ம்..... சரக்கு... ஆங் .. மது
அப்போ மதுவிலக்கு ? இதுவும் காந்தி
உம்ம மரணத்தோடவே
அத விலக்கியாச்சு
என்றபடியே எடுத்தான் வாந்தி

அயர்ந்து போன காந்தி
மீண்டு நடக்கலானார்
இந்த முறை கண்டது
வெள்ளுடுப்பு அரசியல்வாதி
குடியரசு தின வாழ்த்துகள் கூறி
லட்டு நீட்டினார்
குற்றுயிரானார் காந்தி

கொளுத்தும் வெயிலில்
கொஞ்சம் அமர இடம்தேடி
அவரது சிலைக்கடியில்
செருப்பு தைக்கும் புனிதன்
அருகில் அமர்ந்து
நாட்டுநடப்பைக் கேட்டார் ...

ஆண்டுக்கு ஐந்து திட்டம்
அதில் ஆயிரம் ஊழல்
இன்றைய அரசியல்வாதி !

குண்டுவெடிப்புக்கு வருந்தாதவன்
இந்தியா-இங்கிலாந்து தொடருக்கு
அழுகின்றான் - இன்றைய இளைஞன் !

20 வயது கற்ப்பழிப்புக்கு
60 வயதில் தீர்ப்புக்கு காத்திருக்கிறான்
இன்றைய இந்தியன்!

முன்னால் சிரிக்கிறான்
முதுகில் குத்துகிறான்
வெளிநாட்டுத் தலைவராம்!

எல்லோரும் வாழ்வது
உமக்காக காந்தி
நீ சிரிக்கும்
நோட்டுக்காக !

முடித்த போது,
தேசியக்கொடி குத்திய
குழந்தையொன்று
மிட்டாய் கொடுத்தது மகானுக்கு
வாயில் போட்ட மிட்டாய்
இனிக்கவே இல்லை
நாம் உணராத
சுதந்திரம் போல

Wednesday, July 13, 2011

மாதத்தின் 32-ஆவது நாள்

பள்ளிக்கூடத்துக்கு போன பையன்
திரும்பிடுவானா? - இல்லை
பழம் பொறுக்கினான்னு
சுட்டுடுவாங்களா? - அம்மா

எம்புள்ளைய எப்புடியாவது
ஒரு லட்சம் செலவு பண்ணி
எல்‌கே‌ஜி சேத்துடணும் - அப்பா

இருக்கிற பணத்துல இன்னும்
ஒரு வாரத்த ஓட்டணும் - பேச்சுலர்

எப்புடியாவது அந்த பஸ்ஸ்டாண்ட்
பொண்ண நாளைக்கு மடக்கிடனும்- ரோமியோ

இந்த ஆடித்தள்ளுபடில நாலு
புடவை எடுக்கணும் -பெண்கள்

இந்த பெட்ரோல், டீசலுக்கு எல்லாம்
தள்ளுபடி இல்லையா? - ஆண்கள்

இந்த டிகிரி படிச்சதுக்கு பேசாம
_______ மேச்சுருக்கலாம் - பட்டதாரி

எப்புடியாவது இதவிட அதிக
சம்பளத்துக்கு மாறிடனும் - ஐ‌டி பணியாளன்

கடவுளே அடுத்த சி‌டியோ, புதையலோ
வெளிவராம பாத்துக்கோ - மாடர்ன் சாமியார்

அம்மா, தாயே வாழ்க்கைல
திகார் ஜெயில் மட்டும் வேணாம் - அரசியல்வாதி

.
.
.
.
.
.
.
ஆக மொத்ததில் எல்லா மனிதர்களும்
கவலையின்றி இருப்பது
வாரத்தின் எட்டாம் நாளும்,
மாதத்தின் 32-ஆவது நாள் மட்டுமே !!!



Friday, March 18, 2011

படிப்புப் பயணம்

பனிரெண்டாம் வகுப்பு:
நாலை ஏழால் 
வகுத்து-அதை 
மூன்றால் கழித்து 
எதையாவது 
செய்து சொன்னேன், 
சரியான விடையை!! 
கல்லூரி:
1+1= ? 
தேடிக்கொண்டிருக்கிறேன் 
கால்குலேட்டரை ....................... !!!!

---------------------------------------------------------------------------


மாணவன் என்று 
மகிழ்ச்சியாய்  நடந்தேன் 
மூன்று நான்கு வருடம்............ 
வருடங்கள் அவை கடந்தபின் 
நான்கு நிமிடம் நடக்கக்கூட 
மனம் இசையவில்லை 
யாராவது கேட்டுவிட்டால்,
"என்ன வேலை செய்ற?"

__ கி.பி


Wednesday, December 29, 2010

எதிரும் புதிரும்

மாபெரும் நகரத்தில்
கால்கள் வலிக்க
அலைந்த பின்னும்
கழிப்பறை எதுவும்
இல்லாத வேளைதனில்,
ரோட்டோரத்தில்
கழிப்பதை தவிர
வேறென்ன செய்வான்
இந்த ஈனத் தமிழன்!!
---------------------------------------------------------------------------------------------------------------------------
இலவசங்கள் எல்லாம்
இளித்து பெறும்
எந்த தமிழனும் 
பயன்படுத்தவில்லை,
பேருந்து நிலையங்களின்
இலவச  கழிப்பிடத்தை!!!
வெளியில் கழிப்பதையே
ஐந்தாம் வேதமென
கொண்டுவிட்டான்!!!
---------------------------------------------------------------------------------------------------------------------------
                                                                                                                   _கி.பி