நேற்று அண்ணன் வீட்டில் இருந்து திரும்பும் போது, எங்கள் ஊரு பையன் ஒருவனை பேருந்தில் சந்தித்தேன். முதலில் அவனுக்கு என்னை நினைவில் இருக்குமா என்ற தெரியாத காரணத்தால் எதுவும் பேசவில்லை, ஏன் என்றால் இது வரை அவனுடன் அதிகம் பேசியது இல்லை.
திடீர் என்று என்னை பார்த்து "அண்ணா, நீங்க பிரபு தானே?" என்றான். ஆமாம் நீ நவீன் தானே என்றேன், இல்லை நான் அவன் அண்ணன் மனோஜ் என்றான்.
இப்போ என்ன பண்றீங்க என்று கேட்டான், நானும் பெங்களூருவில் இருப்பதாக சொன்னேன். அவனிடம் என்ன செய்கிறாய் என்று கேட்ட போதே முகம் மாறிவிட்டது. மிக வருத்தமாய் சொன்னான் "இன்ஜினியரிங்" அண்ணா. இப்போதான் முதல் வருடம் முடித்து உள்ளேன். அடுத்து நிறுத்தி இருந்தால் பரவாயில்லை, அவன் அடுத்தடுத்து கேட்ட கேள்விகள் தான் என்னை அதிர வைத்தன.
அண்ணா, எப்டின்னா படிச்ச உடனே வேலை கிடைச்சுடுமா? இல்ல நிறைய அலையணுமா? கேம்பஸ்ல என்ன கேப்பாங்க, எத்தன சதவிகிதம் மதிப்பெண் வர வேண்டும், என அடுக்கடுக்காக கேள்விகள் தான் கேட்டுக் கொண்டே இருந்தான். அவன் முகத்தில் ஒரு துளி சந்தோசம் கூட இல்லை.
நாமக்கல் அருகில் இருக்கும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கிறான், பனிரெண்டாம் வகுப்பில் 1030 மதிப்பெண்கள்.
இத்தனை மதிப்பெண் எடுத்தவன், எப்போது தன் வாழ்வை கொண்டாடப் போகிறான்? வாழ்க்கை என்பதை ஒரு ஓட்டப் பந்தயமாக ஆக்கி விட்டோம். வழியில் இருக்கும் சந்தோசங்களை பார்க்காதே, ஓடு ஓடு உன் இலக்கை நோக்கி ஓடு என்று சொல்லி பழக்குகிறோம்.
பத்தாம் வகுப்புக்கு முன்னர் பத்தாம் வகுப்பு தான் இலக்கு, அதன் பின்னர் பனிரெண்டாம் வகுப்பு, பின்னர் கல்லூரி, பின்னர் வேலை, பின்னர் குடும்பம். இதில் எது அவன் இலக்கு? ஓடச் சொல்லும் உங்களுக்காவது தெரியுமா? இப்படி ஓடிக் கொண்டே இருந்தால் ஒருவன் எங்கே இளைப்பாருவான்?
உங்கள் மகன்/மகள் பிற்காலத்தில் நன்றாக வாழ வேண்டும் என்றா? அப்படியென்றால் எப்போது அவன் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
சந்தோசம் என்று நிறைய பெற்றோர் நினைப்பது, தன் பிள்ளை நன்றாக படித்து, நல்ல மதிப்பெண் வாங்கி, நல்ல வேலையில் சேர்ந்து, நிறைய சம்பாதிக்க வேண்டும். இது யாருக்கு சந்தோசம். பெற்றோர் ஆகிய உங்களுக்கா?
நாம் 17-வயதில் கல்லூரியில் இருந்த போது, இரவு கலை நிகழ்ச்சி காணப் போகுதல், ஊருக்கு வந்தால் கிரிக்கெட் விளையாடுதல், கிணற்றில் குளித்தல், கால நிலைக்கு ஏற்ப ஏதேனும் பழம் பொறுக்க செல்லுதல் என்று என் வாழ்க்கையை "வாழ்ந்தேன்." நீங்களும் அப்படியே இருந்திருப்பீர்கள். ஆனால் உங்கள் பிள்ளைகளை ஏன் அதை செய்ய விடாது தடுக்கிறீர்கள்?
இதையே செய்து, இன்று நன்றாக இருக்கும் எத்தனையோ சாதனையாளர்கள் நம்ம ஊரில் உள்ளனர். ஆனால் நாம் அவர்கள் கஷ்டப்பட்டார்கள், முன்னேறினார்கள் என்று கஷ்டபட்டால் தான் வாழக்கையில் ஜெயிக்க முடியும் என்று அவர்கள் மனதில் விதைத்து விட்டோம். அதை தான் பிரதிபலிக்கிறான் நேற்று நான் பார்த்த பையன். ஆனால் எதையும் இஷ்டப்பட்டு செய்தால் கஷ்டமில்லை என்று புரிய வைக்க தெரியவில்லை நமக்கு.
பிள்ளைகளை இயந்திரமாக்கி, பணத்தை அறுவடை செய்ய வேண்டும் என்பதே நிறைய பெற்றோரின் எண்ணமாக உள்ளது. வாழ்க்கையை படிக்க வேண்டியவர்களை, வெறும் புத்தகம் தான் வாழ்க்கை என்று அறியத் தருகிறோம். அதை தாண்டிய கொண்டாட்டங்கள் அவர்கள் உலகில் எப்போதோ நீங்கி விட்டது.
ஒரு கல்லை செதுக்கி கடவுள் என்று சொல்லி, அதற்கு நம் தேவைக்கு படையல் படைத்து, ஆடு வெட்டி எல்லாவற்றையும் நாம் சாப்பிட்டு விடுவோம். நாம் நினைத்தது நடக்காவிட்டால் கடவுளை குறை சொல்வோம். குழந்தைகளும் இது போன்ற கடவுள்களே.
மாணவப் பருவம் என்பது எந்த கவலைகளும் அறியா பருவம் என்று சொல்லிய காலம் உண்டு, ஆனால் இன்று மகிழ்ச்சி அடையாதே, நீ இன்னும் இலக்கை அடையவில்லை என்று விரட்டி, சந்தோசமாக இருக்க கூடாது, என்பதையே சந்தோசம் என்று மாற்றி விட்டோம்.
ஒரு நாளில் எல்லாவற்றையும் விலை கொடுத்து வாங்கிட முடியும் உங்கள் பிள்ளையால், ஆனால் அவனுக்கு வேண்டிய சந்தோசத்தை தவிர. :-(
அனைவருக்குள்ளும் இருக்கும் கவலையை
ReplyDeleteமிக அழகாகப் பதிவு செய்துள்ளீர்கள்
தக்க சமயத்தில் வெளியான பதிவு அருமை
தொடர வாழ்த்துக்கள்
True.
ReplyDeletenagu.
www.tngovernmentjobs.in
"நீ இன்னும் இலக்கை அடையவில்லை என்று விரட்டி, சந்தோசமாக இருக்க கூடாது, என்பதையே சந்தோசம் என்று மாற்றி விட்டோம்"
ReplyDeleteஉண்மைதான். என்னையும் இப்படித்தான் பாடாய் படுத்துகிறார்கள். :((((
அட்டா..அட்டா... சூப்பர் பிரபு.. எத்தனை உன்னதமான வார்த்தைகள்... சந்தோமில்லாததையே சந்தோஷமாக மாற்றவிட்டோம்...! இதில் சந்தோஷம் என்பதற்கு பதிலாக மகிழ்ச்சி என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தால் நம் தமிழும் 'சந்தோஷ'ப்பட்டிருக்கும்...! இல்லையில்லை 'மகிழ்ச்சி' அடைந்திருக்கும்..!!!
ReplyDeletearumayana karuthu
ReplyDeleteசந்தோஷ பதிவு சார் !
ReplyDeleteவலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு முதல் வருகை !
Follower ஆகி விட்டேன். இனி தொடர்வேன். நன்றி !