Pages

Saturday, January 26, 2013

விஸ்வரூபம் - முஸ்லீம்களுக்கு ஹீரோவா? வில்லனா?


விஸ்வரூபம் படம் பார்ப்பதே விஸ்வரூபமாகிவிட்ட நிலையில் இங்கே ரிலீஸ் ஆன முதல் இரண்டாம் காட்சி தான் பார்க்க முடிந்தது. போடுவார்களா மாட்டார்களா என்ற சந்தேகத்துடன் தான் தியேட்டரில் நுழைந்தேன். படத்தின் இடையில் போலீஸ் வந்த போது எங்கே படம் பாதியில் நிறுத்தப்பட்டு விடுமோ என்று கூட எண்ணினேன், ஆனால் எப்படியோ படத்தை முழுமையாக பார்க்க முடிந்தது. 

பேஸ்புக்கில் இதை ''அமெரிக்க கிறிஸ்துவர்களை கொல்ல முயற்சிக்கும் ஆப்கன் முஸ்லீம் சதியை இந்தியாவின் முஸ்லீம் முறியடிக்கும் கதை." என்று சொல்லி இருந்தேன். இதில்  ஆப்கன் முஸ்லீம் என்பது அல்-கொய்தா தீவிரவாதிகள்.படம் பாதிக்கும் மேல் இவர்கள் தாய்நாடான ஆப்கனில் தான் நடக்கிறது. 

ஆப்கனுக்கே சென்று வந்த ஒரு உணர்வை நமக்கு தருவது போல் இருக்கிறது படத்தின் காட்சியமைப்புகள். சில நொடிகள் வரும் சிறுவர்கள் முதல், படம் நெடுக வரும் கமல், ராகுல் போஸ், ஜெய்தீப் என ஒவ்வொருவரின் நடிப்பும் அருமை.  அங்கிருந்து மீண்டும் அமெரிக்காவுக்கு தாவும் போது கதை முழுக்க கமல் முதுகில். இதை இயக்குனர் கமல் உதவியுடன் நடிகர் கமல் மிக அற்புதமாக முடித்துக் கொடுத்திருக்கிறார். 

கிளைமாக்ஸ் கொஞ்சம் மெதுவாக இருப்பதாக தோன்றினாலும் எந்த வித பதட்டமும் இல்லாமல் நாம் பார்க்கும் உணர்வை தான் படத்தில் இருப்பவர்களும் செய்கிறார்கள், ஆம் தீவிரவாதிகள் ஒன்றும் உள்ளூர் தாதாக்கள் இல்லை அல்லவா கத்தி கூப்பாடு போட. 

படத்தின் ஒவ்வொரு விசயமும் மிக கவனமாக கையாளப்பட்டுள்ளன. இசையை பற்றி சொல்வதென்றால் சொல்லிக் கொண்டே இருக்கலாம். படத்தின் ஆரம்பத்தில் வரும் "உன்னை காணாது நான்" என்ற ஒரு பாடல் மற்றும் ஆப்கனில் நடக்கும் காட்சிகளில் வரும் பின்னணி இசை ஆகியவை சாம்பிள். 

கேமரா, இவ்வளவு புதியதாக காட்சியமைப்புகள் இதுவரை பார்த்தே இருக்க முடியாது நாம். மிக அற்புதமாக கையாண்டுள்ளார் சனு வர்கீஸ். அடுத்து கலை இயக்குனர் லால்குடி இளையராஜா, ஆப்கன் தீவிரவாதிகள் இடங்களாக காட்டப்படுபவற்றை மிக அற்புதமாக அமைத்துள்ளார். 

எடிட்டிங், ஒரே ஒரு காட்சி போதும் மகேஷ் நாராயணன் திறமைக்கு, கமல் தன்னையும் மனைவியையும் பிடித்து வைத்திருப்பவர்களை அடித்து வீழ்த்தும் இடம். மிக அற்புதாக வெட்டி, ஒட்டி இருக்கிறார் படம் முழுக்க.

இனி தடை பற்றி பார்ப்போம். படத்திற்கு தடை வேண்டும் என்பவர்கள் சொல்லும் கருத்துகள் கொல்பவன் குரானை படித்து விட்டு கொல்கிறான், பிரார்த்தனை செய்து விட்டு கொல்கிறான், தீவிரவாதிகளுக்கு தமிழகம் புகலிடம் என்று உள்ளது. 

இங்கே நாம் கவனிக்க வேண்டியது படம் முழுக்க முழுக்க தாலிபான், அல்-கொய்தா தீவிரவாதத்தை பற்றியது. இவர்கள் என்ன முஸ்லீம்களில் நாத்திகர்களா? இல்லை தாங்கள் கொலை செய்யும் போது கடவுள் இல்லை என்று சொல்லி கொல்கிறார்களா? எந்த அளவுக்கு கொலை செய்கிறார்களோ அந்த அளவுக்கு பிரார்த்தனையும் செய்கிறார்கள் என்பதை மறுக்க முடியுமா யாராவது? ஏன் முஸ்லீம் மட்டும் தான் அப்படி செய்வதை காட்ட வேண்டும் என்று கேட்பவர்கள் கொஞ்சம் கமலின் முந்தைய படமான அன்பே சிவத்தை பார்க்கவும். 

படத்தின் மிக முக்கிய கதாப்பாத்திரமான உமர், தான் தமிழ் பேச காரணம் கொஞ்ச நாட்கள் தமிழகம், அந்தமான் பகுதிகளில் பதுங்கி இருந்ததாக சொல்வது. இங்கே கமல் கவனமாக பயிற்சி என்பதை தவிர்த்திருக்கிறார், காரணம் தமிழக இஸ்லாமியர்கள் பற்றி அவர் அறிந்திருப்பதால்.

படத்திற்கு தடை என்பதை அரசியல் என்ற கண்ணோட்டத்தில் தான் பார்க்க முடிகிறது. ஒருவேளை கமல் இதில் அமெரிக்கர்களை காப்பாற்றுவதை இவர்கள் விரும்பவில்லையோ என்னவோ. அப்படி என்றாலும் படத்தை ஆப்கனில் கூட தடை செய்ய முடியாது, அந்த அளவுக்கு உண்மைகளை மட்டுமே சொல்கிறது விஸ்வரூபம்.

எப்படி முஸ்லீம்கள் மட்டுமோ மற்றும் எல்லா முஸ்லீம்களுமோ தீவிரவாதிகள் இல்லையோ அதே போல அமெரிக்கர்கள் அனைவரும் இஸ்லாமியர்களுக்கு எதிரானவர்கள் இல்லை என்பதையும் நாம் மறுக்க முடியாது. அங்கேயும் அரசியல் செய்யவே தீவிரவாதம் என்ற பெயர் பயன்படுத்தபடுகிறது.

கமல் ஏன் முஸ்லீம் தீவிரவாதம் பற்றிய படத்தை எடுத்தார்? இஸ்ரேல், அமெரிக்கா, இலங்கை அரசுகள் செய்யும் கொலைகளை படமாக எடுக்க வேண்டியது தானே என்று கேட்பவர்களுக்கு ஒன்று சொல்கிறேன், வாருங்கள் வந்து நீங்கள் எடுங்கள், உண்மையை உலகுக்கு சொல்லுங்கள். 

ஒரு கலைஞனை நீ ஏன் இதை எடுத்தாய், அதை எடுக்கவில்லை என்று கேட்கும் உரிமை எவருக்கும் இல்லை. ஏன் என்றால் கலைஞன் என்பவன் "யாருக்கும் அடிமை இல்லை, யாருக்கும் அரசன் இல்லை". இந்த படத்தை உங்களை பார்க்க சொல்லி திணிக்கவில்லை கமல். அல்-கொய்தா பற்றிய தன் பார்வையை ஒரு படமாக எடுத்துள்ளார். 

28 முஸ்லீம் அமைப்புகள் படத்தை எதிர்க்கின்றன என்று சொல்லும் எண்ணிக்கையே காட்டுகிறது உங்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளை. எங்கே இந்த படத்தை ஆதரித்து பேசினால் தன்னை மதத்திற்கு எதிரானவன் என்று சொல்லி விடுவார்களோ என்ற பயத்தில் தான் நிறைய பேர் எதிர்க்கிறார்கள். ரிசானா விஷயத்திலேயே இது தெரிந்தது. மதத்தை தாண்டி கொஞ்சம் வெளியே வந்து யோசியுங்கள் உங்களுக்குள் இருக்கும் மனிதம் புலப்படும். 

இந்துக்களில் செய்யும் சாதி அரசியலை தான் உங்கள் தலைவர்களும் செய்கிறார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொண்டால் பல பிரச்சினைகள் முடிந்து விடும். அப்போது விஸ்வரூபம் எல்லாம் ஒரு பொருட்டே அல்ல உங்களுக்கு.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~

இந்த பதிவின் பின்னூட்டத்தில் டேம் 999, இன்னொசன்ஸ் ஆஃப் முஸ்லிம் போன்றவற்றிற்கு நான் கூறிய கருத்துக்களை ஏடாகூடமாக யாராவது பயன்படுத்த விரும்பினால் அவர்களுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள், அந்த படங்கள் மீதான தடையும் தவறு என்பதே என் கருத்து :-) 

Monday, January 21, 2013

கிளைகளின் கதை

நெடுஞ்சாலையில் ஐம்பது வருடங்களாக
நின்றிருந்து இன்று
வெட்டப்பட்ட அந்த புளியமரத்தின்
கிளைகள் ஒவ்வொன்றும்
தன் நினைவுகளை
பகிர ஆரம்பித்தன 
தன்னை கடித்த ஆடு 
கல்லெறிந்த கார்த்திக் சிறுவன் 
காதல் பேசிய சரவணன் துர்கா 
அழுது தீர்த்த செல்லம்மா 
திருடியதை புதைத்த கதிரவன் 
பிள்ளை பெற்ற லட்சுமி 
என எல்லா கிளைகளும் 
தங்கள் நினைவுகளை சொன்ன பிறகு 
மிச்சமிருந்த 
கடைசி கிளை 
எதுவும் சொல்லவில்லை 
அநேகமாய் அது 
வெட்டியவனின் பெயரை அறிந்திருக்கும்

20/01/2013 திண்ணை இதழில் வெளியானது

Thursday, January 3, 2013

மனக்குதிரை






எங்கும் தேட வேண்டாம் என்னை
உங்களுக்குள் தான் இருக்கிறேன்
உண்மையாகவும், பொய்யாகவும்
நிஜமாகவும், நிழலாகவும்
அன்பாகவும், வெறுப்பாகவும்
இன்பமாகவும், துன்பமாகவும்
நம்பிக்கையாகவும், துரோகமாகவும்
என்னை நான் என்றே
நீங்கள் அறிவீர்கள்