Pages

Monday, January 30, 2012

வெங்காயம், உச்சிதனை முகர்ந்தால் - பிழைக்கத் தெரியாதவர்களின் சினிமா

கடந்த வாரத்தில் பார்த்த திரைப்படங்களில் வெங்காயம் மற்றும் உச்சிதனை முகர்ந்தால் ஆகியவற்றை பற்றிய பகிர்வு இது. 

ஒரு சினிமா என்றால் என்ன இருக்க வேண்டும்? என்று சிந்திக்க வைத்தன இரண்டும். இந்த இரண்டிலும் கதை மட்டும் தான் ஹீரோ, ஹீரோயின் எல்லாமே. 

முதலில் "வெங்காயம்" 




சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் "ஜோசியம்" என்ற ஒரு மிகப் பெரிய மூடநம்பிக்கையை எதிர்த்து எடுக்கப்பட்ட படம். நான்கு ஜோசியர்களால் பாதிக்கப்பட்ட நான்கு சிறுவர்கள் செய்யும் கடத்தல் தான் படத்தின் கதை. நடிப்பு,கேமரா என்பதை தவிர்த்து விட்டு பார்த்தால் உலக சினிமா அடையாளங்கள் தெரியும் ஒரு அருமையான படம். படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது, 

கடத்தப்பட்ட ஜோசியர் ஒருவரால் தான் பேரனை இழந்த பாட்டி ஒருவர் பைத்தியமாக அழுது கொண்டு இருப்பார் அப்போது ஹீரோ அவருக்கு பணம் கொடுத்து அழாதே என்று சொல்வார், கிளைமாக்ஸில் அதே ஹீரோ அழும்போது பணத்தை கொடுத்து அழாதே என்று சொல்வார் அந்தப் பாட்டி. 

அடுத்து "உச்சிதனை முகர்ந்தால்"




ஈழத்தைப் பற்றிய அருமையான பகிர்வு. ஒரு பதின்மூன்று வயது பெண் ராணுவத்தால் கற்பழிக்கப்பட்டு கருத்தரிக்க, அதை கலைக்க தமிழகம் வருகிறாள் புனிதவதி அதன் பின் நடக்கும் சம்பவங்கள் தான் கதை. புனிதவதி என்ற பெயரில் நடித்து இருக்கும், இல்லை வாழ்ந்து இருக்கும் நீநிகாவின் திறமை அபாரம். 

இதில் ஒரு காட்சி என்று குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவுக்கு நிறைய காட்சிகள் அருமை.  குறிப்பாக ஒரு காட்சியில் சிங்களக் கருவை சுமக்கும் தன் மகளை கொன்று விட நினைக்கும் தாய், தன் மகள் மாடியில் இருந்து எட்டிப் பார்க்கும் போது தவறி விழுந்து விடுவாளோ என்று பதறுவது தாய்மையின் பாசம் சொல்லுகிறது. 

திரு நங்கைகளை மிக அழகாக காட்டிய ஒரே படம் இது தான் என்று நினைக்கிறேன். (நர்த்தகி இன்னும் பார்க்கவில்லை). ஏழாம் அறிவை தமிழர்களின் பெருமை என்று உளறியவர்கள் இதை ஒரு தரம் பார்க்கலாம்.

கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய "இருப்பாய் தமிழா நெருப்பாய்" என்ற பாடலில் தெறிக்கிறது தீ.




சரி விசயத்துக்கு வருவோம். இந்த இரண்டு படங்களையும் எந்த கணக்கில் சேர்ப்பது. இன்றைய நிலையில் சினிமா என்பதன் அர்த்தமே மாறிவிட்டது. மூன்று மணி நேரம் என்னை கட்டிப் போட வேண்டும். எதையாவது காட்ட வேண்டும் என்று பிரயத்தனப்படும் இயக்குனர்கள். இது தான் இன்றைய சினிமா. 

குப்பைப் படங்கள் எல்லாம் எடுக்கப்படுவது கூட தவறில்லை. ஆனால் அதை நம் மீது திணிக்க முயலும் மீடியா மீது தான் மிகப் பெரிய வெறுப்பு. வெங்காயம் படத்துக்கு எந்த தொலைக்காட்சியும் ஒரு நிகழ்ச்சி கூட ஒளிபரப்பவில்லை.  

பணம், பணம் பணம் என்று பார்த்து இன்று நாம் சினிமா என்பதை வியாபாரம் என்று ஒரு பார்வையில் மட்டுமே பார்க்கிறோம். சினிமா என்பது நம் கலாச்சாரத்தின் ஒரு அடையாளம். ஐம்பது வருடங்கள் கழித்து ஒஸ்தி, வெடி, மயக்கம் என்ன என்று யாரும் பார்க்கப் போவது இல்லை. (பார்த்தால் காறித் துப்புவார்கள் என்பது வேறு விஷயம்)

இன்னொரு விஷயம் கேவலமான வார்த்தைகள் வரும் தமிழ் படங்கள் நிறைய பார்த்து இருப்போம். அந்த வார்த்தைகள் எல்லாம் சென்சார் போர்டுக்கு தெரியவில்லை. ஆனால் உச்சிதனை முகர்ந்தால் படத்தில் "இலங்கை" என்று வரும் வார்த்தைகள் சென்சார் செய்யப்பட்டு உள்ளன. இவர்களுக்கு சோனம் கபூர் நடு விரலைக் காட்டியதில் தவறே இல்லை. 

ஹாலிவுட், பாலிவுட் என்று இருப்பதை எல்லாம் பார்த்து காப்பி அடிப்பவர்களுக்கு உலக சினிமாவில் எடுக்கப்படும் நல்ல சினிமாக்கள் இருப்பது தெரியவே இல்லை போலும். (தெய்வத் திருமகள், நந்தலாலா எடுத்தவர்கள் அதை ஒத்துக்கொள்ளவில்லை)

கலைக்காக படம் எடுப்பவர்களை இன்று பிழைக்கத் தெரியாதவர்கள் என்று சொல்ல வேண்டும். அந்த வகையில் வருகிறார்கள் வெங்காயம், உச்சிதனை முகர்ந்தால் இயக்குனர்கள். ஆனால் காலம் தாண்டியும் நிற்கப் போவது இந்தப் பிழைக்கத் தெரியாதவர்கள் தான்.

பின் குறிப்பு: இரண்டு படங்களையும் DVD-யில் தான் பார்க்க முடிந்தது. இங்கே எந்த தியேட்டரிலும் ரிலீஸ் ஆகவில்லை என்பது ஒரு வருத்தமான உண்மை. அப்படி பார்த்ததுக்கு இயக்குனர்கள் மன்னிப்பார்களாக. 

Friday, January 20, 2012

நண்பன் திரைப்படம் சில தொழில்நுட்ப தவறுகள்

பொங்கலுக்கு வந்த நண்பன் திரைப்படம் நிறைய பேர் பார்த்து இருப்பீர்கள், விமர்சனமும் படித்து இருப்பீர்கள். இது விமர்சனம் அல்ல. 

தமிழ் சினிமாவில் தொழில்நுட்ப விசயங்களை மிக அற்புதமாக கையாளும்  சங்கர் செய்த சில தொழில் நுட்ப தவறுகளை சொல்வது மட்டுமே இந்தப் பதிவு. 

1. படத்தில் ஒரு காட்சியில் பாடம் நடத்தும் ஆசிரியரின் கரும்பலகையில் தேதி குறிப்பிட்டு இருப்பார்கள். அதில்தான் ஆரம்பிக்கிறது எல்லா பிரச்சினையும் அதில்  உள்ள தேதி 3/6/98. சரி இதற்கு மேல் விஷயத்துக்கு வருவோம். 


பொறியியல் என்பதால் நான்கு ஆண்டு காலம் படிப்பின் கால அளவு.

2. படத்தில் இலியானா பயன்படுத்தும், இரு சக்கர வாகனம் "ஸ்கூட்டி பெப் பிளஸ்" (Scooty Pep+ ) இது 2005 ஆம் ஆண்டுதான் அறிமுகப் படுத்தப்பட்டது.(நான்கு ஆண்டு என்றால் 2002 தானே?)




3. அடுத்து அனுயாவுக்கு பிரசவம் பார்க்கும் போது youtube ஆனது பயன்படுத்தப்படும்(Vacuum Cup Tutorial). youtube ஆனது 2005 இல் இருந்துதான் இயங்குகிறது.


4. அடுத்து படத்தின் காஸ்டியூம். விஜய், இலியானா உடைகள், விஜய் பயன்படுத்தும் bag ஆகியவை அப்போது இந்தியாவில் அறிமுகம் ஆகி இருக்கவில்லை.


5.படத்தில் பயன்படுத்தப்படும் 1100 அலைபேசி(சில இடங்களில் மட்டும் ) ஆனது 2003 இல் தான் அறிமுகப்படுத்தப்பட்டது.

6. ஆசிரியர் தினத்துக்கு சத்யன் வாசிக்கும் கட்டுரையை எடிட் செய்யும் போது கணினியில் Windows 7 OS இருக்கும். 1998 -ல் Windiows 7 ????

7. படத்தில் காட்டப்படும் மருத்துவமனையில் LCD மானிட்டர்கள் இருப்பதாக இருக்கும். அவை சில ஆண்டுகளுக்கு முன்பு தான் அறிமுகம் ஆனது என்பதை கவனிக்க மறந்து விட்டார்கள் போல.

வேறு ஒரு இயக்குனர் என்றால் இவை போகிற போக்கில் மறந்து இருக்கலாம். ஆனால் சங்கர் எனும் போது தான் எனக்கு இது கவனிக்க தோன்றியது.

இவை அனைத்துக்கும் மிக மிக மிக முக்கிய காரணம் முதல் பாயிண்ட், ஆண்டை குறிப்பிட்டது. 3 Idiots படத்தில் இது இருக்காது.

மற்றபடி படம் அருமை. 

Friday, January 6, 2012

கோமாளி செல்வா - என் நகைச்சுவை முயற்சி

இந்தியாவும் பாகிஸ்தானும் இப்படி பிரிந்து கிடைக்கிறதே என்று செல்வாவுக்கு வருத்தம். யார் இந்த செல்வா என்று பார்த்தால், இவர் ஒரு வலைப்பதிவர். அடிக்கடி மொக்கையும், கதைகளும் எழுதுவார் பதிவுலகமே இவரைக் கண்டு பயப்படும் அளவுக்கு. கொஞ்ச நாள் முன்னாடி மூடப்பட்ட பஸ்(Buzz) கூட இவரால் தான் என்று நம்பப்படுகிறது. ஆனா பாவம் இவர்க்கு இது எதுமே தெரியாது. 

சரி இப்போ இந்தியா, பாகிஸ்தான் மேட்டர்க்கு வருவோம். எப்போ பார்த்தாலும் குண்டு வைக்கிறாங்க, சண்டை போடுறாங்களேனு இவர்க்கு வருத்தம். தான் மட்டும் இந்தியா சுதந்திரம் பெறும் முன்பு பிறந்திருந்தால் பாகிஸ்தானை பிரிக்கவே விட்டு இருக்க மாட்டேன் என்று மனத்துக்குள் அடிக்கடி சொல்லி கொள்வார். அப்படித்தான் ஒரு நாள் நினைத்தவர், ஏன் இதை நம் நாட்டின் முக்கிய தலைவர்களிடம் சொல்லக் கூடாது என்று நினைத்தார். அப்படியே கிளம்பினார் சென்னைக்கு.

முதலில் சந்தித்தது முதல்வர் ஜெயலலிதாவை.

செல்வா: அம்மா வணக்கம். 


ஜெ: வாங்க எப்படி நீங்க உள்ள வந்தீங்க? கேட் பூட்டி இருக்குமே. 

செல்வா: வாட்ச்மேன் கிட்ட நான் புதுசா பதவி ஏத்து இருக்கிற அமைச்சர்னு சொன்னேன் விட்டுட்டார். 


 ஜெ: ஆமா நீங்க எந்த துறை?  எவ்ளோ மணி நேரமா அமைச்சரா இருக்கீங்க? கமான் க்விக், உங்க மூஞ்சி எனக்கு பிடிக்கல, மாத்தணும். 


செல்வா:அம்மா நான் அமைச்சர்லாம் இல்ல, இந்தியா,பாகிஸ்தான் ரெண்டையும் சேர்த்து வைக்கணும், அதுக்காக உங்ககிட்ட பேச வந்தேன்.  

ஜெ: எப்போ பிரிச்சாங்க? கருணாநிதி ஆட்சில தானே? சொல்லுங்க சட்டமன்றத்துல ஒரு தீர்மானம் போட்டுடுவோம். 

 இதுக்கு மேல இருந்தா பைத்தியம் பிடித்திடும் என்று அலறி அடித்து வெளியே ஓடிவந்தார்.வேற யார்கிட்ட போலாம் என்று யோசித்தவர், எதிரே சுவரில் போஸ்டர் ஒன்றில் மாடு கூட திங்காத கருணாநிதி படத்தை பார்த்தவர் சரி இவரிடம் பேசலாம் என்று அவர் வீட்டுக்கு சென்றார்.

கருணாநிதி: வாங்க தம்பி. உங்கள் பெயர் என்ன? எந்த ஊர்? 


செல்வா : வணக்கம் ஐயா, என் பெயர் செல்வா, ஊர் கோபி. 


கருணா: அடடே தம்பி மூன்றெழுத்து, செல்வா மூன்றெழுத்து, கோபி, ......... சரி விடுங்க அது ரெண்டு எழுத்துதான் போல. என்ன விஷயம்? 


செல்வா : அது வந்து ஐயா,  இந்தியால இருந்து பாகிஸ்தானை பிரிச்சுட்டாங்க இல்லையா? அதை சேர்த்தால் இந்தியாவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை அல்லவா? அதனால சேர்க்க வேண்டும்னு சொல்லி உங்ககிட்ட பேச வந்தேன். 


கருணா : ஆமாம் தம்பி, 1947 இல் இந்தியா இரண்டாக பிரிந்த போதே, அதை எதிர்த்து அறிக்கை விட்டவன் நான். (பேப்பரை எடுத்து காட்டுகிறார்). 


செல்வா : அதான் ஐயா உங்ககிட்ட சொல்லி எப்படியாவது ரெண்டு நாட்டையும் சேர்த்து வைக்கலாம்னு வந்தேன். 


கருணா : அப்படியா? அங்க தமிழர்கள் இருந்தா சோனியாஜி கிட்ட சொல்லி ஏதாவது பண்ணலாம். விடுங்க நாளைக்கு பாகிஸ்தான் பிரதமர்க்கு ஒரு கடிதம் அனுப்பிடலாம். அப்படியே கலைஞர் தொலைக்காட்சிக்கும் ஒரு ஜெராக்ஸ் அனுப்பிடலாம். 


இந்த பல்பு ப்யூஸ்போயி பல வருடம் ஆச்சு என்று அப்போது தான் உணர்ந்தார் செல்வா. அப்படியே நன்றி கூறி விடை பெற்றார். 

கருணா : சரிங்க தம்பி, போகும் போது, அப்படியே முரசொலிக்கு ஒரு வருட சந்தா கட்டிட்டு போயிடுங்க. இல்லாட்டி கேட் திறக்க மாட்டாங்க. 

வந்ததுக்கு தண்டசெலவு என்று நினைத்தவர். பணம் கட்டிவிட்டு வெளியே வந்தார். சரி நாம தமிழக காங்கிரஸ் தலைவர்கிட்ட இது பத்தி பேசுவோம் என்று சத்தியமூர்த்தி பவன் வந்தார்.

 அங்கே வாசலில் கோவில்  பொங்கல் சாப்பிட்டவர் போல ஒருவர் உடக்கார்ந்திருக்க, அவரிடம் "ஏங்க காங்கிரஸ் தலைவர் எங்க இருக்கார் ?" அவர் "தம்பி நான் தான் தமிழக காங்கிரஸ் தலைவர்" என்று சொன்னார். இடையில் ஒரு செருப்பு எங்கிருந்தோ பறந்து வந்து அவர் மீது விழுந்தது.  உள்ளே எட்டிப்பார்த்த செல்வா, அங்கே மல்யுத்தமே நடப்பதைக் கண்டு பயந்து போனார். அலறி அடித்து வெளியே ஓடி வந்தார்.

சரி இங்கே எல்லாம் சரிப்படாது என்று டெல்லிக்கு போவோம் அங்கே நம்ம மன்மோகனை சந்திப்போம் என்று அவர் வீட்டுக்குப் போனார்.

வீட்டில் அவரது மனைவி மைதா மாவு பசையை மன்மோகன் வாயில் தடவிக் கொண்டிருக்க

செல்வா : வணக்கம் பிரதமர்ஜி


மன்மோகன் சுற்றும் முற்றும் திரும்பி பார்க்கிறார். உடனே அவரது மனைவி, அட உங்களைத்தான் சொல்றார் என்க மன்மோகன் கண்ணில் நீர் வழிகிறது. 


மன்மோகன் மனைவி : இப்படி சொன்னாலே இவர் அழுதுடுவார். இவர்தான் பிரதமர்னு இவருக்கே தெரியல தம்பி. (சேலைத்தலைப்பில் கண்ணீரைத் துடைக்கிறார்)

இங்கிருந்தால் வேலை நடக்காது என்று புரிந்த செல்வா, சரி சோனியாஜி தான் ஒரே தீர்வு என்று அவரை பார்க்க கிளம்பினார்.

செல்வா : வணக்கம் சோனியா மேடம்

சோனியா : வணக்கம். என்ன விசயம் ?

செல்வா விசயத்தை சொல்லி முடிக்கவும். யோசிக்கிறார் சோனியா.

சோனியா : அவிங்க பொதுமக்களை தானே கொல்லுறாங்க, நாங்க பண்ண வேண்டியத அவிங்களே பண்றாங்க? தம்பி நீங்க கிளம்பலாம்.

ராகுல் : மம்மி மம்மி அடுத்து அஞ்சு மாசத் தேர்தல் வருதே, நான் போகட்டா?

சோனியா : காங்கிரசை ஒழிக்க நீ போதும் ராசா. போ போ

செல்வா (மனத்துக்குள்) : அதைத் தான் நாங்களும் பண்ணனும்.

வெளிறிய முகத்தோடு அடுத்து பாகிஸ்தான் பிரதமரை பார்க்கலாமா என்று யோசிக்கிறார்.
------

பின்குறிப்பு : 

இந்தக் கதையில் நகைச்சுவையே இல்லையே என்பவர்களுக்கு ஒரு நகைச்சுவை 

"நகைச்சுவை" (செல்வா எபக்ட்)



Tuesday, January 3, 2012

விளையாட்டு - சிறுகதை

டேய் யாருடா ராணி?

வினோத்தும் ரமேசும் என பதில் வந்த பின், சரவணன் அடித்த கோலியின் வேகத்தில் இரண்டாய் பிளக்கிறது வினோத்தின் கோலி.

டேய் நீ பெரிய கோலி வச்சுக்கிட்டு சின்னதா இருந்தா உடைக்கிறியா? இரு இரு நான் ஊருல இருந்து வரும் போது நாலு பெரிய கோலி வாங்கிட்டு வரேன். அப்புறம் பாரு என்று வினோத் சீறினான்.

எந்த ஊருடா?

மெட்ராஸ் டா. எங்க அத்த ஊர்ல இருந்து வந்துருக்கு. இன்னிக்கு ராத்திரி நாங்க ரயில்ல போறோமே. அப்புறம் ஆனந்த் இருக்கான் அவன் கூட நிறைய விளையாடுவேனே! அப்புறம் பீச்சுக்கு போவேன். இன்னும் நிறைய இருக்கு தெரியுமா?

முடித்து விட்டு ஒரே மூச்சில் வீட்டுக்கு வந்த வினோத் அத்தையை காணாமல்,

அம்மா, அம்மா

என்னடா?

அத்த எங்க?

ஊருக்கு போயிட்டாங்கடா.

ம் போ, நீ பொய் சொல்ற. சொல்லும் போதே வெளியிலிருந்து வந்த அத்தை,

உன்ன விட்டுட்டு போவேனா வினோத்? துணியெல்லாம் எடுத்து வச்சுக்க சாப்பிட்ட பிறகு போலாம்.

மேலும் படிக்க - அதீதம்


- சூர்யபிரபு


Monday, January 2, 2012

2011 திரைப்படங்களின் ஒரு வரி விமர்சனம்

விதவிதமாக படங்கள் கடந்த வருடத்தில். சில ஏன் இப்படி? சில அட போட வைத்தன. பல பணம் வீண் என்று. 

எனக்கு பிடித்தவை ஆரண்ய காண்டம், அழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும், வாகை சூட வா, மௌன குரு, வானம், பயணம். பார்க்க துடிக்கும் படங்கள் பாலை, நர்த்தகி,வெங்காயம்(இவைகளுக்கு விமர்சனத்தை பார்த்தே என் விமர்சனம்).  

ஆரண்ய காண்டம் இந்த வருட தமிழ் சினிமாவின் திருஷ்டி பொட்டு. கேமரா, திரைக்கதை, எடிட்டிங் இவை எல்லாம் சேர்ந்து ஒரு மிகப்பெரிய படத்தை தந்தன. குமாரராஜா வழக்கமான தமிழ் சினிமாவுக்கு நுழையாமல் அடுத்த நிலைக்கு தமிழ் சினிமாவை கொண்டு செல்ல முயற்சிக்கலாம். 

  1. ஆடுகளம் - தமிழ் சினிமாவுக்கு புதிய களம்
  2. சிறுத்தை - இடுப்பு கறி மட்டும் சாப்பிட்டது
  3. இளைஞன் - ஆவ்வ் ஒன்று 
  4. காவலன் - தளபதியை காப்பாற்றியவன் 
  5. யுத்தம் செய் - இன்னொரு அஞ்சாதே
  6. தூங்கா நகரம் - மற்றும் ஒரு படம் மதுரையிலிருந்து 
  7. பயணம் - புதிய பயணம் 
  8. நடுநிசி நாய்கள் - விபரீத முயற்சி 
  9. சீடன் - சில்லறை முயற்சி
  10. சிங்கம் புலி - சில்மிஷம்
  11. லத்திகா - தமிழ் சினிமாவின் பயங்கரம்
  12. முத்துக்கு முத்தாக - பிள்ளைகளுக்கு
  13. மாப்பிள்ளை - மொக்கை மாப்பிள்ளை
  14. பொன்னர் சங்கர் - ஆவ்வ் இரண்டு 
  15. வானம் - வானவில்
  16. எங்கேயும் காதல் - மொக்கை காதல்
  17. அழகர்சாமியின் குதிரை - பந்தயத்தில் ஜெயிக்க தவறிய குதிரை
  18. நர்த்தகி - அற்புதம்
  19. ஆரண்ய காண்டம் - அற்புதம்
  20. அவன் இவன் - எவன் இவன்?
  21. 180 - ஓகே
  22. வேங்கை - தண்டச் செலவு பார்த்தவருக்கு
  23. தெய்வ திருமகள் - சுட்ட நிலா 
  24. காஞ்சனா - அய்யோ மம்மி
  25. வெப்பம் -சூடு கம்மி 
  26. டூ - காமெடி கும்மி
  27. போட்டா போட்டி - பார்க்கலாம் 
  28. வெங்காயம் - உரித்துப் பார்க்கலாம்
  29. மாங்காத்தா - ஜெயித்த குதிரை
  30. எங்கேயும் எப்போதும் - எப்போதும் எங்கேயும்
  31. வந்தான் வென்றான் -பார்த்தவன் நொந்தான் 
  32. முரண் - வெளியே சொல்லி சுட்டது
  33. வாகை சூட வா - வெற்றிபெறாத வாகை 
  34. வெடி - நமுத்துப்போன வெடி
  35. வேலூர் மாவட்டம் - மற்றுமொரு
  36. சதுரங்கம் - தாமதமான ஆட்டம் 
  37. வர்ணம் - வானவில்
  38.  7ஆம் அறிவு - நாலாவது அறிவுக்கு மேல் தேறல
  39. வேலாயுதம் - பல முறை பயன்படுத்தப்பட்ட ஆயுதம் 
  40. தம்பி வெட்டோத்தி சுந்தரம் - வருடத்தில் சொதப்பியது
  41. பாலை - தமிழர்களின் பசுமை 
  42. வித்தகன் - பலமுறை வித்த கன்
  43. போராளி - போராடவே இல்லை
  44. ஒஸ்தி - பள்ளிச்சிறுவனின் போலீஸ் வேஷம் 
  45. மம்பட்டியான் - பழைய பிரியாணி
  46. மௌன குரு - கலக்கல்