Pages

Tuesday, May 8, 2012

வழக்கு எண் 18/9 விமர்சனம்

ஒரு படத்துக்கு என்ன தேவை என்பது ஒரு இயக்குனர் தீர்மானிப்பது. அந்த தீர்மானம் எப்படி என்பதை பொறுத்து அந்தப் படத்தின் வெற்றி அமையும். வெற்றி என்பது இங்கே நூறு நாள் ஒடுவதோ இல்லை விருது வாங்குவதோ இல்லை. பார்க்கும் ஒவ்வொரு ரசிகனும், என்ன படம்டா இது என்று எண்ண வைக்கும் ஒன்றே வெற்றிப் படம். அந்த வரிசையில் வருவது தான் பாலாஜி சக்திவேல் அவர்களின் வழக்கு எண் 18/9.



ஒரு பெண்ணின் மீது திராவகம் வீசப்படுகிறது. யார் அதை செய்தது? காரணம் என்ன? . இந்த ஒரு வரி தான் கதை. அதை அவர் எடுத்த விதம் தான் நம்மை பிரம்மிக்க வைக்கிறது. 

ஆரம்பத்தில் வேலு என்ற கதாபாத்திரத்தின் கதையை சொல்லும் படம், இரண்டாம் பாகத்தில் திராவகம் வீசப்பட்ட ஜோதியின் வீட்டு ஓனரின் மகள் பார்வையில் வழக்கை சொல்கிறது. 

முதலாவதில் விளிம்பு நிலை மனிதர்களின் பரிவு, நேர்மை, மானம் குறித்து பேசும் படம், இரண்டாம் பகுதியில் பணக்கார மனிதர்களின் அலட்டல், குழந்தைகள் மீது கவனமின்மை, அதிகார துஸ்பிரயோகம், காமம் என்று விரிகிறது. 

விளிம்பு நிலை மனிதர்கள் வரும் பகுதி முழுக்க மனதை வருடிச் செல்கிறது 
கதை. ரியல் எஸ்டேட்க்கு பலியாகும் கிராமங்கள், வடநாட்டிற்கு விற்கப்படும் சிறுவர்கள், விபச்சார பெண்கள் என்று இன்னும் பல உண்மைகளை சொல்கிறது. சில கதையில் ஒட்டாத போதும், கதைக்கு உறுத்தாத விதத்தில் சேர்த்து இருப்பது இயக்குனரின் திறமை.

பின் பாதியில் பணக்கார பிள்ளைகளின் சல்லாபம், பெற்றோரின் அலட்சியம் என்ற இரண்டையும் மிக அழுத்தமாக பதிந்து இருக்கிறது. மிக அருமையான பார்வை.

இறுதியில் ஆசிட்டால் மாற்றம் அடைந்த முகத்தை பார்த்தும், நான் உனக்காக காத்திருப்பேன் என்று வேலு சொல்லும் காட்சியை பற்றி எழுத வார்த்தைகளே இல்லை.

வேலுவாக நடித்த ஸ்ரீ, சின்னசாமி, அதிகம் பேசாத ஊர்மிளா மகந்தா(ஜோதி) என மூவரின் நடிப்பும் அருமை. மற்ற இரு முக்கிய கதாபாத்திரங்களும் ஏனோ மனதை ஈர்க்கவில்லை. ஒரு வேலை அவர்கள் காதபாத்திர அமைப்பு காரணமாய் இருக்கலாம்.  சில நிமிடம் மட்டுமே வரும் ரீடேக் ஹீரோ நன்றாகவே சிரிக்க வைக்கிறார்.

படத்தின் மிகப்பெரிய பலம் கேமரா தான். கேமராவின் அந்த அசைவுகள், அட அட விஜய் மில்டன் அசத்தி விட்டார். படத்தில் பெரும்பாலான இடங்களில் கேமராவும் ஒரு கதாபாத்திரமாய் இருக்கிறது.

அடுத்து இசை. பிரசன்னாவின் இசை, கதைக்கு எந்த இடைஞ்சலும் இல்லாமல் மென்மையாய் இருக்கிறது.

குறிப்பாக "ஒரு குரல் கேட்குதே" பாடலுக்கு இவரின் உழைப்பு ஆச்சர்யம் கொள்ள வைக்கிறது. இந்த பாடலுக்கு மட்டும் அர்ஜென்டினா பாடகர் சோஃபியா டோசெல்லோ, வெனிசுலாவின் கிட்டாரிஸ்ட் (Cuatro Player) ஜுனாஞ்சோ ஹெரேரா, அமெரிக்க பியானிஸ்ட் விக்டர் குட், அர்ஜென்டினாவின் பேஸிசிஸ்ட் ரோட்மிஸ்ட்ரோவிஸ்கி, ஹங்கேரி நாட்டு பிரன்க் நேமெத் (டிரம்மர்), இந்திய புல்லாங்குழல் கலைஞர் கமலாகர் மற்றும் பிரசன்னா. இத்தனையும் சேர்த்து கார்த்திக்கின் ஒரு குரலில் இந்தப் பாடலை கேட்கும் போது...... அட அட அட. பாட்ட கேளுங்க நீங்க அப்புறம் சொல்லுங்க. (நன்றி - தி ஹிந்து)

ஒரு குரல் கேட்குது

அடுத்து இசையே இல்லாமல் இருக்கும் "வானத்தையே எட்டிப் புடிப்பேன்" மிக அருமை.

அருமையான படத்துக்கு மிக அருமையாக எடிட்டிங் செய்து இருக்கிறார் கோபி கிருஷ்ணா. 

1 comment:

  1. அன்பின் பிரபு - படத்தினை இரசித்து எழுதப்பட்ட விமர்சனம் அருமை - எடிட்டிங்க், பாடல், இசை, காமெரா, நடிப்பு, கதை, படம் வெற்றி என்றால் என்ன என்பதனை விளக்கும் விமர்சனம் - நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete