Pages

Thursday, October 25, 2012

பெயர் பிரபு, வயது பனிரெண்டு - மீண்டும் காமிக்ஸ் அனுபவம்

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பதிவு. இந்த வலைப்பூவில் அவ்வப்போது எதையாவது எழுதாவிட்டால் பலே பிரபு என்ற "பிரபல பதிவர்" ஒருவர் இருப்பதையே இந்த உலகம் மறந்து விடும், அப்படி எதுவும் அசம்பாவிதம் நிகழ்ந்து விடாமல் இருக்கவே சில சமயம் பதிவு எழுத வேண்டியுள்ளது. 

இந்த முறை பதிவு எழுத காரணம் ப்ளேட் பீடியா கார்த்திக். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அவரை பிடித்து சில தொல்லைகள் செய்ய நண்பர் புண்ணியத்தில் பல வருடங்களுக்கு பிறகு எனக்கும் காமிக்ஸ் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த பதிவில் அந்த காமிக்களின் கதை எதையும் விமர்சிக்க போவதில்லை நான். என்னுடைய அனுபவத்தை மட்டுமே பகிர்கிறேன்.

கார்த்திக் உதவியால் லயன்/முத்து காமிக்ஸ் அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு நான்கு புத்தகங்களை ஆர்டர் செய்தேன். புத்தகம் கைக்கு வந்து சேர்ந்த போது அதை படிக்கும் மன நிலையில் நான் இல்லை. முக்கிய காரணம் நான் சிறு வயதில் படித்தது ராணி காமிக்ஸ். எப்போதோ ஒரு முறை இரும்புக் கை மாயாவியை படித்த ஞாபகம். முகமூடி வீரர் மாயாவி, ஜேம்ஸ்பான்ட் என்று படித்து வந்தவனுக்கு முத்து/லயன் காமிக்ஸ் ஹீரோக்கள் அந்நியமாக தெரிந்தார்கள். 

சரி வாங்கி  விட்டோம் படிக்காமல் விட்டால் சரியாய் இருக்காது என்று முதலில் படிக்கத் தொடங்கியது 'லயன் Come Back ஸ்பெஷல்". இதன் முதல் காமிக், லக்கிலுக்கின் "ஒற்றர்கள் ஓராயிரம்".  சுத்தமாக என்னை ஈர்க்கவே இல்லை. அதே புத்தகத்தின் அடுத்த காமிக் "கானகத்தில் களேபரம்" இதை  முழுதாக படித்தவுடன் புத்தங்களை தூக்கி ஓரமாக வைத்து விட்டேன். 

எப்போதுமே நான் வாங்கிய எந்த புத்தகத்தையும் வீண் என்று நினைத்தது இல்லை. அவற்றில் ஏதோ ஒரு பலன் இருக்கும் என்பது என் எண்ணம். இது பேருந்தில் வாங்கும் பத்து ரூபாய் புத்தகமானாலும் சரி, பேருந்து நிலையத்தில் கிடைக்கும் சரோஜா தேவி புத்தகமானாலும் சரி, எல்லாவற்றுக்கும் பொருந்தும். 

சில நாட்கள் கைவசம் இருந்த மற்ற புத்தகங்களை படித்தேன். அதன் பின்னர் மீண்டும் காமிக் படிக்க வேண்டிய நிலை. முதல் முறை படித்த புத்தகத்தை கொஞ்ச நேரம் பார்த்து கொண்டிருந்தேன். என் தவறு மெல்ல புரிய ஆரம்பித்தது. முதலில் காமிக் படிக்க ஆரம்பித்தது பத்து வயதுக்கு பிறகு தான் அப்போது ஒரு ஹீரோ இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் எதையுமே நான் எதிர்பார்த்தது இல்லை. ஆனால் இந்த திரைப்படங்கள் என்னை கெடுத்து வைத்திருந்தன. நிறைய எதிர்பார்த்து படித்தது தான் முதலாவது பிடிக்காமல் போன காரணம்.

எனவே இந்த முறை Tom & Jerry, Ice Age போன்றவற்றை பார்க்கும் மனநிலையில் படிக்கத் தொடங்கினேன். இந்த முறை படித்தது "Double-Thrill ஸ்பெஷல்" புத்தகத்தில்  "பரலோகப் பாதை பச்சை". இது மிகவும் அசத்தல் என்று என்னால் சொல்ல முடியவில்லை ஆனால் அடுத்ததை உடனே படிக்கும் ஆர்வம் வந்தது அதே புத்தகத்தின் இன்னொரு காமிக் "பனியில் ஒரு பரலோகம்". இது தான் என்னை முழுமையாக காமிக்கின் உள்ளே இழுத்து சென்றது. ஒரு விபத்தில் இறந்து போன(!) ஜிஜானோவ், அதன் பின் நடக்கும் சில கொலைகள் என விறுவிறுப்பாக சென்றது காமிக். இதன் நாயகன் ரிப்போர்ட்டர் ஜானி. இந்த  காமிக்கின் ஒவ்வொரு பக்கத்தையும் ரசித்து ரசித்து படித்தேன்.



அடுத்து நான் படித்தது "லயன் நியூ லுக் ஸ்பெஷல் (28 ஆவது ஆண்டு மலர்)" புத்தகத்தின் காமிக்கான லக்கிலுக்கின் "பனியில் ஒரு கண்ணாமூச்சி", இதை படிக்கும் போது லக்கி அதை செய்ய வேண்டும், இதை செய்ய வேண்டும் என்று எதையும் நான் எதிர்பார்த்திருக்கவில்லை. என் எதிர்பார்ப்பு (!!) பொய்யாகவில்லை. டால்டன் சகோதரர்களை பிடிக்க இவர் செய்ய முயற்சிகள், தப்பிக்க அவர்கள் செய்யும் காமெடி முயற்சிகள் என்னை ரொம்ப ஈர்த்தன. இந்த முறை லக்கியை எனக்கு பிடித்து விட்டது. அதே வேகத்தில் அவரின் "வானவில்லை தேடி"யையும் படித்து முடித்து விட்டேன்.



இதை நான் ஊரில் இருந்த போது படித்த காரணத்தில் இன்னொரு புக் என்னிடம் இல்லை. பெங்களூருவில் இருந்தது. சரி கருப்பு-வெள்ளையில் உள்ள பழைய காமிக்களை படிப்போம் என முதலில் படித்தது "மனித வேட்டை". வண்ணத்தில் இல்லாத அந்த படங்கள் எனக்குள் வண்ண வண்ண எண்ணங்களை எழுப்பி விட்டன. அதன் இன்னொரு காமிக் மரண முரசுவும் எனக்கு பிடித்து இருந்தது. 

கடைசியாக நான் படித்தது "Surprise ஸ்பெஷல்". என்னை கட்டிபோட்ட புத்தகம் இதுதான். "என் பெயர் லார்கோ" & "யாதும் ஊரே ! யாவரும் எதிரிகள் !!" என்ற இந்த புத்தகத்தில் இருந்த இரண்டு காமிக்களுமே தொடர் போல இருந்தது. எனவே முழு மூச்சாக படித்து முடித்தேன். ஒரு நிறுவன தலைவரின் மரணமும் அதன் அடுத்த தலைவராக வரவேண்டிய லார்கோவுக்கு நிகழும் பிரச்சினைகளுமே கதை, அதை மிக அருமையாக படம் காட்டி இருந்தார்கள். இதில் எனக்கு லார்கோவை மிகவும் பிடித்து விட்டது.



நான்கு புத்தகங்களுமே பழைய கருப்பு-வெள்ளை காமிக்களை கொண்டிருந்தன. அவற்றில் முக்கியமாக சொல்ல வேண்டியது "கொலைகார பொம்மை, இரும்புக் கை மாயாவி vs டாக்டர் மாக்னோ" மற்றும் முன்பு சொன்ன மனித வேட்டை. அதிலும் கொலைகார பொம்மை மாஸ். 

மொத்தத்தில் இந்த நான்கு புத்தகங்களும் என்னை ஈர்த்து விட்டன. அவற்றை பனிரெண்டு வயது சிறுவன் ஒருவன் மனநிலையில் படித்த போது மிகவும் பிடித்த எழுத்தாளரின் எழுத்து நம்மை கட்டிபோடும் அளவுக்கு இருந்தது உண்மை.  நான் விரும்பி படிக்கும் புத்தகங்களின் பட்டியலில் காமிக்கையும் இப்போது சேர்த்துள்ளேன். 

எப்போதும் குதூகலமான குழந்தை பருவ நினைவுகளுக்கும் இவை இழுத்து சென்றன. இப்போது புரிகிறது கார்த்திக் எப்படி தன் பதிவுகளை மிக நகைச்சுவையாக எழுகிறார் என்று. 

இந்த புத்தகங்களை பத்திரப்படுத்தி வைத்துள்ளேன், தொடர்ந்து வாங்கவும் முடிவு செய்துள்ளேன். அவற்றையும் பத்திரப்படுத்தி வைக்க விரும்புகிறேன். கண்டிப்பாக வருங்காலத்தில் அவை பயன்படும் என்ற நம்பிக்கை உள்ளது. 

அதோடு உங்களுக்கு ஒரு வேண்டுகோள், உங்களுக்கு குழந்தைகள் இருந்தால் தொலைக்காட்சியில் இருந்து அவர்களின் கவனத்தை மாற்ற இது போன்ற புத்தகங்களை வாங்கி தாருங்கள். இவை அவர்களின் வாசிக்கும் ஆர்வத்தை தூண்டும், ஒரு தோழனாக இருக்கும், பன்முகத் திறமையை வளர்க்க உதவும்.   

குழந்தைகள் இல்லை என்றால் நீங்கள் வாங்கி படிக்க முயற்சி செய்யுங்கள், என்னைப் போல நீங்களும் உங்களை குழந்தையாக உணர்வீர்கள். 

காமிக்ஸ் வாங்க விருப்பம் உள்ளவர்கள்: இந்த படத்தை பார்க்கவும்

சில காமிக் ப்ளாக்ஸ்







ராணி காமிக்ஸ் ரசிகர்களுக்கு - ராணி காமிக்ஸ்

லயன்/முத்து காமிக் ஆசிரியர் விஜயன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் இப்போதைய குழந்தைகளை ஈர்க்க நீங்கள் இப்போதையை நாயகர்களை கொண்ட காமிக்களை வெளியிடலாம், அது அவர்களுக்கு வாங்கும் ஆர்வத்தை அதிகரிக்க செய்யும். குழந்தை என்று சொன்னது என்னை போல இருபதை கடந்தவர்களையும் சேர்த்து.  :-)

படங்கள் - ப்ளேட் பீடியா

Wednesday, October 10, 2012

Coffee Gudda - அருமையான ஒரு சுற்றுலா அனுபவம்

கல்லூரி IV க்கு பிறகு பத்து பேருக்கு மேல் சேர்ந்து சென்ற முதல் ட்ரிப் Coffee Gudda. கர்நாடக மாநிலம், சிக்மங்களூரில் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் Mudigre தாலுகாவில் இருந்த Samse என்றே ஊரில் இருந்த இடம் தான் Coffee Gudaa. நீண்ட நாளாக திட்டமிட்டு இந்த மாத தொடக்கத்தில் சென்று வந்தோம். தனியார் நபர் ஒருவரின் காபி எஸ்டேட் அது. அவர்களே ரெசொர்ட் போன்று அமைத்து அழைத்து செல்கிறார்கள். 

அவர்கள் வெப்சைட் - CoffeeGudda

கடந்த வெள்ளி இரவு ஒரு அருமையான Travels ஒன்றில் கிளம்பினோம். ஆட்டம், பாட்டம் என்ற கனவுகளோடு கிளம்பியவர்களுக்கு பேருந்தில் மியூசிக் சிஸ்டம் இல்லை என்பது முதல் அதிர்ச்சி, கிட்டத்தட்ட இரண்டு மணி நேர பயணத்துக்கு பின் வண்டி ஒரு டோல்கேட்க்கு அருகில் நின்றுவிட்டது இரண்டாவது அதிர்ச்சி. டிரைவர் மீண்டும் போன் செய்து வேறு வண்டி வர மேலும் மூன்று மணி நேரம் ஆகியது. அதுவரை கிட்டத்தட்ட நடுகாட்டில் இருந்தோம். நான் நன்றாக தூங்கிவிட்டிருக்க, அடுத்த வண்டி வந்தபின் தான் விசயமே தெரிந்தது. 

மீண்டும் விடியற்காலை கிளம்பிய பயணம் 11 மணிக்கு மேல் தான் நாங்கள் வந்து சேர வேண்டிய இடத்தில் முடிந்தது. இடையில் இரண்டு இடங்களில் காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு தரக்கூடாது என்று பிரச்சினை செய்தவர்கள் எங்களை தடுத்து வேறு நிறுத்தினார்கள். வண்டியில் இருந்தவர்களில் நான் மட்டுமே தமிழ்நாட்டில் இருந்து வந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.




காலை சென்று குளிக்க எல்லாம் நேரமின்றி பல் மட்டும் துலக்கி விட்டு சாப்பிட அமர்ந்த நொடியில் துவங்கியது எங்கள் ட்ரிப்பின் கொண்டாட்டம். அரசமர இலை போன்ற ஒன்றில் சில இலைகளை கோர்த்து அதில் வடிவம் ஏதும் இல்லாத இட்லி தரப்பட்டது. வெள்ளை வெளேர் என்று இட்லி சாப்பிட்டவர்கள், கிட்டத்தட்ட சாம்பல் நிறத்தில் இருந்த இட்லியை சாப்பிட்டவுடன் எது இட்லி என்று புரிந்தது. உடன் ரைஸ் புலாவும் தந்தனர். சாப்பிட்டு முடித்த பின் அவர்கள் கொடுத்த காபி. அட அட அட அது தாங்க காபி. அசத்தலாய் இருந்தது. அதுவும் காபி, டீ எப்போது வேண்டும் என்றாலும் கிடைக்கும் என்று சொல்லி விட்டனர். பசி என்ற ஒன்று இல்லாவிட்டால் காபி மட்டுமே குடித்து வந்திருப்பேன் நான். 

சாப்பாடு முடிந்த சில நிமிடங்களில் “இளநீர் அருவி” என்ற இடத்தை நோக்கி கிளம்பினோம். ஒரு திறந்த ஜீப்பில் கிளம்பிய சில கிலோமீட்டர்களில் ஆறு அடி நீளமுள்ள ஒரு கருநாக பாம்பு எங்களுக்கு வழிகாட்டி சென்றது. அருவிக்கு அழைத்து செல்ல வந்த ஒருவர் மலை மேல் ஏறும் முன் அட்டை பூச்சி கடிக்காமல் இருக்க டெட்டால் கொடுத்து காலில் பூசிக் கொள்ள சொல்லி அழைத்து சென்றார். ஐநூறு மீட்டர் தொலைவில் மலை மேல் இருந்த அருவிக்கு சென்ற போது புதிய பூமிக்கு வந்தது போல ஒரு உணர்வு. எங்கே, எப்படி குளிக்க வேண்டும் என்று அவர் சொல்ல ஆபத்தான அந்த இடத்தில் எந்த ஆபத்தும் இன்றி குளித்து முடித்தோம். மூலிகை வளம் நிறைந்த அந்த அருவியில் குளித்த பின் எதோ ஒரு புது சக்தி வந்தது போல இருந்தது. அவர் கன்னடத்தில் பேசியதால் அருவியின் பெயர் காரணம் தெரியவில்லை.



இங்கே மின்சாரம் கொடுக்க முடியாத இடங்களுக்கு மலையில் இருந்து விழும் அருவி நீரின் மூலம் மின்சாரம் எடுக்கும் வழியை அரசு அமைத்து தந்துள்ளது. மூன்று வருடங்களாக அதன் மூலம் மட்டுமே அவர்கள் மின்சாரத்தை பெற்று வருகிறார்கள்.

மீண்டும் தங்கி இருந்த இடத்துக்கு வந்த போது மதிய உணவாக சிக்கன், சாதம் என பீஸ்புல் ஆன மதிய உணவு கிடைத்தது. மாலை ஆகிவிட்டதால் அதற்கு மேல் எங்கும் செல்ல முடியவில்லை. சிலர் மட்டும் காபி எஸ்டேட், டீ எஸ்டேட் என்று சுற்றி பார்க்க கிளம்பினர். சிலர் மட்டும் கிரிக்கெட், பேட்மிட்டன், கோல்ப் என மாறி மாறி விளையாடி கொண்டிருந்தோம். 

இரவு ஏழு மணிக்கு அடுத்த விளையாட்டுக்கு தாவி அதை இரவு பதினோரு மணி வரை தொடர்ந்தோம். நீண்ட நாட்களுக்கு பிறகு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் ஒரு இரவு கழிந்தது. இடையில் அதே இடத்துக்கு வந்திருந்த இன்னொரு குரூப்பில் ஒரு சிகரெட்டுக்கு நடந்த பிரச்சினையில்  முழு போதையில் இருந்த ஒருவர் தெளிவாய் இருந்த யாரோ ஒருவரின் காலை உடைத்து விட்டிருந்தார்.

காலை 7 மணிக்கு எழுந்து மறுபடி சாப்பிட வந்தால் காலை உணவாக கடுபு என்று நம்ம ஊர் கொழுக்கட்டை போல ஒன்றை சிறிய உருண்டையாக கொடுத்தனர். இது இனிப்பில்லை என்றாலும் அவர்கள் கொடுத்த குழம்புடன் குழப்பி சாப்பிட்டால் சுவை சொல்வதற்கில்லை. அடுத்து கொடுத்த சாவிகே (நம்ம ஊர் இடியாப்பம், பால்) மிக அசத்தல்.

இந்த முறை கலாசாவுக்கு (Kalasa) அருகில் உள்ள ஒரு மலைக்கு சென்றோம். இரண்டு மணி நேர ஆபத்தான பயணத்துக்கு பிறகு மலை உச்சியை அடைந்த போது சொர்க்கம் என்று சொல்வார்களே, அது இது தானோ என்று சொல்லும் அளவுக்கு ஒரு அருமையான இடத்தில் இருந்தோம். சுற்றிலும் மலை தான். பசுமை பசுமை பசுமை என்று எங்கெங்கும் பசுமை தான். சிலர் அங்கேயும் பீர் பாட்டில்களை குடித்து வீசி இருக்க, நம்ம ஆட்கள் தான் என்றாலும்   இப்படி ஒரு இடத்தில் இதை செய்யலாமா என்று வருந்தினேன்.



நீண்ட நேரத்துக்கு பிறகு மீண்டும் கீழே இறங்கி வந்து நாங்கள் இருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தோம். மணி மாலை மூன்று ஆகிவிட  மதிய சாப்பாடு  வந்தது நெய் சாதம், சிக்கன், பாயசம் என்று அருமையான உணவுடன் ஒரு லெமன் டீ குடித்து எங்கள் பயணத்தை முடித்தோம். அதற்குள் ட்ரிப் முடிந்து விட்ட வருத்தம் இருந்த போதிலும் மிக அருமையான ஒரு இடத்துக்கு வந்தோம் என்ற திருப்தி இருந்தது. அதிலும் இடத்தின் ஓனர் எங்களுடன் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டு, வண்டி வரை எங்கள் பைகளை எடுத்து வந்து வழியனுப்பினார்.



அந்த இரண்டு நாட்களும் இணையம், அலைபேசி [நெட்வொர்க் இல்லை] என்று இரண்டும் இல்லாமல் மிக மிக மகிழ்ச்சியாக இருந்தோம். மீண்டும் பெங்களூருவுக்கு வந்து இறங்கிய காலையில் தொடங்கியது இயந்திரத் தனமான பழைய வாழ்க்கை.......