முதல் இரண்டு படங்களில் நட்பு, காதல் என்று ஜாலியான கதைகளங்களை தெரிவு செய்த வினீத் ஸ்ரீனிவாசன் இந்த முறை எடுத்திருப்பது மனித கடத்தல் பற்றிய திரில்லர் வகையறா படம். ராகேஷ் மண்டோடியின் கதை, திரைக்கதையில் இவர் இயக்கி உள்ளது தான் "திரா" (அலை)
பெண் குழந்தைகளுக்கான ஆதரவு இல்லம் நடத்தும் டாக்டராக வரும் ஷோபனா, மனித கடத்தல் பற்றிய தகவல்களை விசாரித்ததற்காக மர்மமான முறையில் கொல்லப்பட்ட பத்திரிக்கையாளரான தன் கணவரின் இறப்பிற்கு அமைச்சர் ஒருவரிடம் பேசுவதாக படம் ஆரம்பிக்கிறது. அதே இரவில் அவரின் ஆதரவு இல்லத்தில் இருந்து அனைத்து பெண் குழந்தைகளையும் ஒரு கும்பல் கடத்தி சென்று விட அவர்களை தேட தொடங்குகிறார். அதே நகரத்திற்கு மறுநாள் காலை வரும் தியானின் கண் முன்பே அவரின் தங்கை அதே கும்பலால் கடத்தப்படுகிறார். கடத்தல்காரர்களை தனித்தனியாக தேடி செல்லும் போது ஒரு கட்டத்தில் இருவரும் அவர்களிடம் மாட்டிக்கொள்ள, பின்னர் அங்கிருந்து தப்பி இருவரும் இணைந்து கடத்தப்பட்ட குழந்தைகளை எப்படி தேடி மீட்கிறார்கள் என்பது தான் கதை.
படத்தின் ஆரம்பம் முதல் நம்மை ஈர்ப்பது ஷோபனாவின் நடிப்பு, பின்னணி இசை மற்றும் படத்தின் கதை. மிகவும் துணிச்சலாக ஒற்றை ஆளாக பெண் குழந்தைகளை தேடி செல்லும் போதும், பின்னர் ஒவ்வொரு முறையும் தியான் என்ன செய்ய வேண்டும் என்று அவரை இயக்கும் போதும் அற்புதமாக செய்திருக்கிறார் ஷோபனா. தியான், வினீத்தின் தம்பியான இவருக்கு படத்தில் பெரிதாக நடிக்க வாய்ப்பில்லை என்ற போதிலும் தன் கதாபாத்திரத்தை "பயத்துடனேயே" செய்திருக்கிறார். மற்றபடி திருநங்கையாக வரும் தமிழ் நடிகையும் நன்றாக நடித்திருக்கிறார். இவரின் கதாபாத்திரத்தை படம் முழுக்க பயன்படுத்தி இருக்கலாம்.
எப்படி குழந்தைகள் கடத்தப்படுகிறார்கள், யார் எல்லாம் இதில் உள்ளனர் என்பது போன்ற தகவல்கள் கதையை சுவாரஸ்யமாக கொண்டு செல்கின்றன. வசனம் படத்திற்கு இன்னொரு பலம். ரொம்பவே ஈர்த்த ஒன்று "எல்லோருக்கும் கண்கள் உள்ளது, ஆனால் நமக்கு பாதிப்பதை மட்டுமே நாம் கவனிக்கிறோம்". அவ்வபோது வரும் சிறுசிறு நகைச்சுவை வசனங்களும் படத்தை விரும்ப வைக்கின்றன.
அருமையான கதையென்ற போதிலும் திரைக்கதையில் கொஞ்சம் கோட்டை விட்டு விட்டார் ராகேஷ் மன்டோடி. அவ்வளவு பெரிய கடத்தல் கும்பலை ஷோபனாவும், தியானும் பின் தொடர்ந்து செல்லும் இடங்களை சுவாரஸ்யமாக வைக்க தெரிந்தவருக்கு இவர்களிடம் கடத்தல் கும்பல் மாட்டிக் கொள்ளும் இடங்களை எல்லாம் மிக எளிதாக தெரிந்து கொள்ளும் படி வைத்திருக்கிறார். இருவரும் மிக எளிதாக குழந்தைகள் எங்கே கடத்தப்படுகிறார்கள் என்று கண்டுபிடித்து சென்று, மிகப் பெரிய நெட்வொர்க்கிடம் இருந்து ரொம்பவே எளிதாக அவர்களை காப்பாற்றி விடுகிறார்கள்.
இன்னும் கொஞ்சம் திரைக்கதையை சுவாரஸ்யமாக்கி இருந்தால் அலை பெரிதாக இருந்திருக்கும்.