Pages

Saturday, November 24, 2012

கடவுளாதல்

சுடுகாடு எங்கே இருக்கிறது
இப்போதே சாக வேண்டும்
கருவறை வழி தெரியுமா
மறுபடி பிறக்க வேண்டும்
விலைமகள் வீடு தெரியுமா
புணர வேண்டும் அவசரமாய்
நல்ல மக்கள் இருந்தால் சொல்லுங்கள்
நான் வாழ வேண்டும்
பாதை ஒன்றை காட்டுங்கள்
வேறொரு பாதையில் செல்ல வேண்டும்
சாதியில்லா மதம் உண்டா
சாதியை உருவாக்க வேண்டும்
கோவில் எங்கேயுள்ளது
கடவுளை திட்ட வேண்டும்
எதுவும் தெரியாவிட்டால்
உங்கள் ஊரில்
டாஸ்மாக் எங்கே உள்ளது
சொல்லுங்கள் இப்போது
நான் கடவுளாக வேண்டும். 

Thursday, October 25, 2012

பெயர் பிரபு, வயது பனிரெண்டு - மீண்டும் காமிக்ஸ் அனுபவம்

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பதிவு. இந்த வலைப்பூவில் அவ்வப்போது எதையாவது எழுதாவிட்டால் பலே பிரபு என்ற "பிரபல பதிவர்" ஒருவர் இருப்பதையே இந்த உலகம் மறந்து விடும், அப்படி எதுவும் அசம்பாவிதம் நிகழ்ந்து விடாமல் இருக்கவே சில சமயம் பதிவு எழுத வேண்டியுள்ளது. 

இந்த முறை பதிவு எழுத காரணம் ப்ளேட் பீடியா கார்த்திக். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அவரை பிடித்து சில தொல்லைகள் செய்ய நண்பர் புண்ணியத்தில் பல வருடங்களுக்கு பிறகு எனக்கும் காமிக்ஸ் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த பதிவில் அந்த காமிக்களின் கதை எதையும் விமர்சிக்க போவதில்லை நான். என்னுடைய அனுபவத்தை மட்டுமே பகிர்கிறேன்.

கார்த்திக் உதவியால் லயன்/முத்து காமிக்ஸ் அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு நான்கு புத்தகங்களை ஆர்டர் செய்தேன். புத்தகம் கைக்கு வந்து சேர்ந்த போது அதை படிக்கும் மன நிலையில் நான் இல்லை. முக்கிய காரணம் நான் சிறு வயதில் படித்தது ராணி காமிக்ஸ். எப்போதோ ஒரு முறை இரும்புக் கை மாயாவியை படித்த ஞாபகம். முகமூடி வீரர் மாயாவி, ஜேம்ஸ்பான்ட் என்று படித்து வந்தவனுக்கு முத்து/லயன் காமிக்ஸ் ஹீரோக்கள் அந்நியமாக தெரிந்தார்கள். 

சரி வாங்கி  விட்டோம் படிக்காமல் விட்டால் சரியாய் இருக்காது என்று முதலில் படிக்கத் தொடங்கியது 'லயன் Come Back ஸ்பெஷல்". இதன் முதல் காமிக், லக்கிலுக்கின் "ஒற்றர்கள் ஓராயிரம்".  சுத்தமாக என்னை ஈர்க்கவே இல்லை. அதே புத்தகத்தின் அடுத்த காமிக் "கானகத்தில் களேபரம்" இதை  முழுதாக படித்தவுடன் புத்தங்களை தூக்கி ஓரமாக வைத்து விட்டேன். 

எப்போதுமே நான் வாங்கிய எந்த புத்தகத்தையும் வீண் என்று நினைத்தது இல்லை. அவற்றில் ஏதோ ஒரு பலன் இருக்கும் என்பது என் எண்ணம். இது பேருந்தில் வாங்கும் பத்து ரூபாய் புத்தகமானாலும் சரி, பேருந்து நிலையத்தில் கிடைக்கும் சரோஜா தேவி புத்தகமானாலும் சரி, எல்லாவற்றுக்கும் பொருந்தும். 

சில நாட்கள் கைவசம் இருந்த மற்ற புத்தகங்களை படித்தேன். அதன் பின்னர் மீண்டும் காமிக் படிக்க வேண்டிய நிலை. முதல் முறை படித்த புத்தகத்தை கொஞ்ச நேரம் பார்த்து கொண்டிருந்தேன். என் தவறு மெல்ல புரிய ஆரம்பித்தது. முதலில் காமிக் படிக்க ஆரம்பித்தது பத்து வயதுக்கு பிறகு தான் அப்போது ஒரு ஹீரோ இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் எதையுமே நான் எதிர்பார்த்தது இல்லை. ஆனால் இந்த திரைப்படங்கள் என்னை கெடுத்து வைத்திருந்தன. நிறைய எதிர்பார்த்து படித்தது தான் முதலாவது பிடிக்காமல் போன காரணம்.

எனவே இந்த முறை Tom & Jerry, Ice Age போன்றவற்றை பார்க்கும் மனநிலையில் படிக்கத் தொடங்கினேன். இந்த முறை படித்தது "Double-Thrill ஸ்பெஷல்" புத்தகத்தில்  "பரலோகப் பாதை பச்சை". இது மிகவும் அசத்தல் என்று என்னால் சொல்ல முடியவில்லை ஆனால் அடுத்ததை உடனே படிக்கும் ஆர்வம் வந்தது அதே புத்தகத்தின் இன்னொரு காமிக் "பனியில் ஒரு பரலோகம்". இது தான் என்னை முழுமையாக காமிக்கின் உள்ளே இழுத்து சென்றது. ஒரு விபத்தில் இறந்து போன(!) ஜிஜானோவ், அதன் பின் நடக்கும் சில கொலைகள் என விறுவிறுப்பாக சென்றது காமிக். இதன் நாயகன் ரிப்போர்ட்டர் ஜானி. இந்த  காமிக்கின் ஒவ்வொரு பக்கத்தையும் ரசித்து ரசித்து படித்தேன்.



அடுத்து நான் படித்தது "லயன் நியூ லுக் ஸ்பெஷல் (28 ஆவது ஆண்டு மலர்)" புத்தகத்தின் காமிக்கான லக்கிலுக்கின் "பனியில் ஒரு கண்ணாமூச்சி", இதை படிக்கும் போது லக்கி அதை செய்ய வேண்டும், இதை செய்ய வேண்டும் என்று எதையும் நான் எதிர்பார்த்திருக்கவில்லை. என் எதிர்பார்ப்பு (!!) பொய்யாகவில்லை. டால்டன் சகோதரர்களை பிடிக்க இவர் செய்ய முயற்சிகள், தப்பிக்க அவர்கள் செய்யும் காமெடி முயற்சிகள் என்னை ரொம்ப ஈர்த்தன. இந்த முறை லக்கியை எனக்கு பிடித்து விட்டது. அதே வேகத்தில் அவரின் "வானவில்லை தேடி"யையும் படித்து முடித்து விட்டேன்.



இதை நான் ஊரில் இருந்த போது படித்த காரணத்தில் இன்னொரு புக் என்னிடம் இல்லை. பெங்களூருவில் இருந்தது. சரி கருப்பு-வெள்ளையில் உள்ள பழைய காமிக்களை படிப்போம் என முதலில் படித்தது "மனித வேட்டை". வண்ணத்தில் இல்லாத அந்த படங்கள் எனக்குள் வண்ண வண்ண எண்ணங்களை எழுப்பி விட்டன. அதன் இன்னொரு காமிக் மரண முரசுவும் எனக்கு பிடித்து இருந்தது. 

கடைசியாக நான் படித்தது "Surprise ஸ்பெஷல்". என்னை கட்டிபோட்ட புத்தகம் இதுதான். "என் பெயர் லார்கோ" & "யாதும் ஊரே ! யாவரும் எதிரிகள் !!" என்ற இந்த புத்தகத்தில் இருந்த இரண்டு காமிக்களுமே தொடர் போல இருந்தது. எனவே முழு மூச்சாக படித்து முடித்தேன். ஒரு நிறுவன தலைவரின் மரணமும் அதன் அடுத்த தலைவராக வரவேண்டிய லார்கோவுக்கு நிகழும் பிரச்சினைகளுமே கதை, அதை மிக அருமையாக படம் காட்டி இருந்தார்கள். இதில் எனக்கு லார்கோவை மிகவும் பிடித்து விட்டது.



நான்கு புத்தகங்களுமே பழைய கருப்பு-வெள்ளை காமிக்களை கொண்டிருந்தன. அவற்றில் முக்கியமாக சொல்ல வேண்டியது "கொலைகார பொம்மை, இரும்புக் கை மாயாவி vs டாக்டர் மாக்னோ" மற்றும் முன்பு சொன்ன மனித வேட்டை. அதிலும் கொலைகார பொம்மை மாஸ். 

மொத்தத்தில் இந்த நான்கு புத்தகங்களும் என்னை ஈர்த்து விட்டன. அவற்றை பனிரெண்டு வயது சிறுவன் ஒருவன் மனநிலையில் படித்த போது மிகவும் பிடித்த எழுத்தாளரின் எழுத்து நம்மை கட்டிபோடும் அளவுக்கு இருந்தது உண்மை.  நான் விரும்பி படிக்கும் புத்தகங்களின் பட்டியலில் காமிக்கையும் இப்போது சேர்த்துள்ளேன். 

எப்போதும் குதூகலமான குழந்தை பருவ நினைவுகளுக்கும் இவை இழுத்து சென்றன. இப்போது புரிகிறது கார்த்திக் எப்படி தன் பதிவுகளை மிக நகைச்சுவையாக எழுகிறார் என்று. 

இந்த புத்தகங்களை பத்திரப்படுத்தி வைத்துள்ளேன், தொடர்ந்து வாங்கவும் முடிவு செய்துள்ளேன். அவற்றையும் பத்திரப்படுத்தி வைக்க விரும்புகிறேன். கண்டிப்பாக வருங்காலத்தில் அவை பயன்படும் என்ற நம்பிக்கை உள்ளது. 

அதோடு உங்களுக்கு ஒரு வேண்டுகோள், உங்களுக்கு குழந்தைகள் இருந்தால் தொலைக்காட்சியில் இருந்து அவர்களின் கவனத்தை மாற்ற இது போன்ற புத்தகங்களை வாங்கி தாருங்கள். இவை அவர்களின் வாசிக்கும் ஆர்வத்தை தூண்டும், ஒரு தோழனாக இருக்கும், பன்முகத் திறமையை வளர்க்க உதவும்.   

குழந்தைகள் இல்லை என்றால் நீங்கள் வாங்கி படிக்க முயற்சி செய்யுங்கள், என்னைப் போல நீங்களும் உங்களை குழந்தையாக உணர்வீர்கள். 

காமிக்ஸ் வாங்க விருப்பம் உள்ளவர்கள்: இந்த படத்தை பார்க்கவும்

சில காமிக் ப்ளாக்ஸ்







ராணி காமிக்ஸ் ரசிகர்களுக்கு - ராணி காமிக்ஸ்

லயன்/முத்து காமிக் ஆசிரியர் விஜயன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் இப்போதைய குழந்தைகளை ஈர்க்க நீங்கள் இப்போதையை நாயகர்களை கொண்ட காமிக்களை வெளியிடலாம், அது அவர்களுக்கு வாங்கும் ஆர்வத்தை அதிகரிக்க செய்யும். குழந்தை என்று சொன்னது என்னை போல இருபதை கடந்தவர்களையும் சேர்த்து.  :-)

படங்கள் - ப்ளேட் பீடியா

Wednesday, October 10, 2012

Coffee Gudda - அருமையான ஒரு சுற்றுலா அனுபவம்

கல்லூரி IV க்கு பிறகு பத்து பேருக்கு மேல் சேர்ந்து சென்ற முதல் ட்ரிப் Coffee Gudda. கர்நாடக மாநிலம், சிக்மங்களூரில் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் Mudigre தாலுகாவில் இருந்த Samse என்றே ஊரில் இருந்த இடம் தான் Coffee Gudaa. நீண்ட நாளாக திட்டமிட்டு இந்த மாத தொடக்கத்தில் சென்று வந்தோம். தனியார் நபர் ஒருவரின் காபி எஸ்டேட் அது. அவர்களே ரெசொர்ட் போன்று அமைத்து அழைத்து செல்கிறார்கள். 

அவர்கள் வெப்சைட் - CoffeeGudda

கடந்த வெள்ளி இரவு ஒரு அருமையான Travels ஒன்றில் கிளம்பினோம். ஆட்டம், பாட்டம் என்ற கனவுகளோடு கிளம்பியவர்களுக்கு பேருந்தில் மியூசிக் சிஸ்டம் இல்லை என்பது முதல் அதிர்ச்சி, கிட்டத்தட்ட இரண்டு மணி நேர பயணத்துக்கு பின் வண்டி ஒரு டோல்கேட்க்கு அருகில் நின்றுவிட்டது இரண்டாவது அதிர்ச்சி. டிரைவர் மீண்டும் போன் செய்து வேறு வண்டி வர மேலும் மூன்று மணி நேரம் ஆகியது. அதுவரை கிட்டத்தட்ட நடுகாட்டில் இருந்தோம். நான் நன்றாக தூங்கிவிட்டிருக்க, அடுத்த வண்டி வந்தபின் தான் விசயமே தெரிந்தது. 

மீண்டும் விடியற்காலை கிளம்பிய பயணம் 11 மணிக்கு மேல் தான் நாங்கள் வந்து சேர வேண்டிய இடத்தில் முடிந்தது. இடையில் இரண்டு இடங்களில் காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு தரக்கூடாது என்று பிரச்சினை செய்தவர்கள் எங்களை தடுத்து வேறு நிறுத்தினார்கள். வண்டியில் இருந்தவர்களில் நான் மட்டுமே தமிழ்நாட்டில் இருந்து வந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.




காலை சென்று குளிக்க எல்லாம் நேரமின்றி பல் மட்டும் துலக்கி விட்டு சாப்பிட அமர்ந்த நொடியில் துவங்கியது எங்கள் ட்ரிப்பின் கொண்டாட்டம். அரசமர இலை போன்ற ஒன்றில் சில இலைகளை கோர்த்து அதில் வடிவம் ஏதும் இல்லாத இட்லி தரப்பட்டது. வெள்ளை வெளேர் என்று இட்லி சாப்பிட்டவர்கள், கிட்டத்தட்ட சாம்பல் நிறத்தில் இருந்த இட்லியை சாப்பிட்டவுடன் எது இட்லி என்று புரிந்தது. உடன் ரைஸ் புலாவும் தந்தனர். சாப்பிட்டு முடித்த பின் அவர்கள் கொடுத்த காபி. அட அட அட அது தாங்க காபி. அசத்தலாய் இருந்தது. அதுவும் காபி, டீ எப்போது வேண்டும் என்றாலும் கிடைக்கும் என்று சொல்லி விட்டனர். பசி என்ற ஒன்று இல்லாவிட்டால் காபி மட்டுமே குடித்து வந்திருப்பேன் நான். 

சாப்பாடு முடிந்த சில நிமிடங்களில் “இளநீர் அருவி” என்ற இடத்தை நோக்கி கிளம்பினோம். ஒரு திறந்த ஜீப்பில் கிளம்பிய சில கிலோமீட்டர்களில் ஆறு அடி நீளமுள்ள ஒரு கருநாக பாம்பு எங்களுக்கு வழிகாட்டி சென்றது. அருவிக்கு அழைத்து செல்ல வந்த ஒருவர் மலை மேல் ஏறும் முன் அட்டை பூச்சி கடிக்காமல் இருக்க டெட்டால் கொடுத்து காலில் பூசிக் கொள்ள சொல்லி அழைத்து சென்றார். ஐநூறு மீட்டர் தொலைவில் மலை மேல் இருந்த அருவிக்கு சென்ற போது புதிய பூமிக்கு வந்தது போல ஒரு உணர்வு. எங்கே, எப்படி குளிக்க வேண்டும் என்று அவர் சொல்ல ஆபத்தான அந்த இடத்தில் எந்த ஆபத்தும் இன்றி குளித்து முடித்தோம். மூலிகை வளம் நிறைந்த அந்த அருவியில் குளித்த பின் எதோ ஒரு புது சக்தி வந்தது போல இருந்தது. அவர் கன்னடத்தில் பேசியதால் அருவியின் பெயர் காரணம் தெரியவில்லை.



இங்கே மின்சாரம் கொடுக்க முடியாத இடங்களுக்கு மலையில் இருந்து விழும் அருவி நீரின் மூலம் மின்சாரம் எடுக்கும் வழியை அரசு அமைத்து தந்துள்ளது. மூன்று வருடங்களாக அதன் மூலம் மட்டுமே அவர்கள் மின்சாரத்தை பெற்று வருகிறார்கள்.

மீண்டும் தங்கி இருந்த இடத்துக்கு வந்த போது மதிய உணவாக சிக்கன், சாதம் என பீஸ்புல் ஆன மதிய உணவு கிடைத்தது. மாலை ஆகிவிட்டதால் அதற்கு மேல் எங்கும் செல்ல முடியவில்லை. சிலர் மட்டும் காபி எஸ்டேட், டீ எஸ்டேட் என்று சுற்றி பார்க்க கிளம்பினர். சிலர் மட்டும் கிரிக்கெட், பேட்மிட்டன், கோல்ப் என மாறி மாறி விளையாடி கொண்டிருந்தோம். 

இரவு ஏழு மணிக்கு அடுத்த விளையாட்டுக்கு தாவி அதை இரவு பதினோரு மணி வரை தொடர்ந்தோம். நீண்ட நாட்களுக்கு பிறகு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் ஒரு இரவு கழிந்தது. இடையில் அதே இடத்துக்கு வந்திருந்த இன்னொரு குரூப்பில் ஒரு சிகரெட்டுக்கு நடந்த பிரச்சினையில்  முழு போதையில் இருந்த ஒருவர் தெளிவாய் இருந்த யாரோ ஒருவரின் காலை உடைத்து விட்டிருந்தார்.

காலை 7 மணிக்கு எழுந்து மறுபடி சாப்பிட வந்தால் காலை உணவாக கடுபு என்று நம்ம ஊர் கொழுக்கட்டை போல ஒன்றை சிறிய உருண்டையாக கொடுத்தனர். இது இனிப்பில்லை என்றாலும் அவர்கள் கொடுத்த குழம்புடன் குழப்பி சாப்பிட்டால் சுவை சொல்வதற்கில்லை. அடுத்து கொடுத்த சாவிகே (நம்ம ஊர் இடியாப்பம், பால்) மிக அசத்தல்.

இந்த முறை கலாசாவுக்கு (Kalasa) அருகில் உள்ள ஒரு மலைக்கு சென்றோம். இரண்டு மணி நேர ஆபத்தான பயணத்துக்கு பிறகு மலை உச்சியை அடைந்த போது சொர்க்கம் என்று சொல்வார்களே, அது இது தானோ என்று சொல்லும் அளவுக்கு ஒரு அருமையான இடத்தில் இருந்தோம். சுற்றிலும் மலை தான். பசுமை பசுமை பசுமை என்று எங்கெங்கும் பசுமை தான். சிலர் அங்கேயும் பீர் பாட்டில்களை குடித்து வீசி இருக்க, நம்ம ஆட்கள் தான் என்றாலும்   இப்படி ஒரு இடத்தில் இதை செய்யலாமா என்று வருந்தினேன்.



நீண்ட நேரத்துக்கு பிறகு மீண்டும் கீழே இறங்கி வந்து நாங்கள் இருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தோம். மணி மாலை மூன்று ஆகிவிட  மதிய சாப்பாடு  வந்தது நெய் சாதம், சிக்கன், பாயசம் என்று அருமையான உணவுடன் ஒரு லெமன் டீ குடித்து எங்கள் பயணத்தை முடித்தோம். அதற்குள் ட்ரிப் முடிந்து விட்ட வருத்தம் இருந்த போதிலும் மிக அருமையான ஒரு இடத்துக்கு வந்தோம் என்ற திருப்தி இருந்தது. அதிலும் இடத்தின் ஓனர் எங்களுடன் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டு, வண்டி வரை எங்கள் பைகளை எடுத்து வந்து வழியனுப்பினார்.



அந்த இரண்டு நாட்களும் இணையம், அலைபேசி [நெட்வொர்க் இல்லை] என்று இரண்டும் இல்லாமல் மிக மிக மகிழ்ச்சியாக இருந்தோம். மீண்டும் பெங்களூருவுக்கு வந்து இறங்கிய காலையில் தொடங்கியது இயந்திரத் தனமான பழைய வாழ்க்கை.......

Wednesday, September 12, 2012

தீராக் காதல்

01

அவிழ்த்துப்போட்ட ஆடைகளும்
சேர்ந்து கிடக்க
ஏற்ற, இறக்கங்கள்
எல்லாம் முடிந்த வேளையில்
மறுபடியும் தொடங்குகிறது
ஒரு யுத்தம்

02

காதுகளுக்குள் புகுந்து
கேட்கிறேன்
எப்போது முடியும்?
எப்போதாவது.....
இப்போதல்ல
என்று சொன்னது
உன் மனம்

03

மிதவேகம்
வேகம்
அதிவேகம்

04

ஈர உடல்களில்
இனிப்பெதுவும் இல்லை
இருப்பினும் சுவைக்கிறோம்
இனிக்க இனிக்க

05

பேசாதே என்றாய்
பேசவில்லை என்று
சொல்லவில்லை நான்

06

பற்றிய நெருப்பில்
ஊற்றிய தண்ணீர்
கொழுந்து விட்டு
எரிய உதவுகிறது

07

கால்களில் ஆரம்பித்து
கால்களில் முடித்தேன்

08

என் முடிவில்
தொடங்குகிறது
உன் ஆரம்பம்

09

நிறுத்திவிட வேண்டாமென
உளறுகிறாய்
நிறுத்திவிட வேண்டுமென
நான் யோசிக்கவே இல்லை

10

முடிந்த மூன்றாம் நிமிடம்
மெல்ல சிரிக்கிறாய்
அர்த்தம் புரிந்தது


 - பிரபு கிருஷ்ணா

Monday, July 2, 2012

காதலிக்கு




அவளைப் பற்றி
கவிதை வேண்டுமாம்
எழுதிக் கொடுத்தேன்
"இன்னும் எழுதாத
கவிதை நீ ♥"
 - பிரபு கிருஷ்ணா

Thursday, June 7, 2012

புரிவதற்கில்லை

ம்க்கும்...
ம்?
ம்... 
ச்சீ
ம்??
ம்ஹூம்
ஹும்
.
.
.
ஹும்ம்ம்
ஹும்ம்ம்
ஹும் 
ம்
ம் !!!
ம்ம் 
இச்

- பிரபு கிருஷ்ணா 

Monday, June 4, 2012

சந்தோசம் என்ன விலை?

நேற்று அண்ணன் வீட்டில் இருந்து திரும்பும் போது, எங்கள் ஊரு பையன் ஒருவனை பேருந்தில் சந்தித்தேன். முதலில் அவனுக்கு என்னை நினைவில் இருக்குமா என்ற தெரியாத காரணத்தால் எதுவும் பேசவில்லை, ஏன் என்றால் இது வரை அவனுடன் அதிகம் பேசியது இல்லை. 

திடீர் என்று என்னை பார்த்து "அண்ணா, நீங்க பிரபு தானே?" என்றான். ஆமாம் நீ நவீன் தானே என்றேன், இல்லை நான் அவன் அண்ணன் மனோஜ் என்றான். 

இப்போ என்ன பண்றீங்க என்று கேட்டான், நானும் பெங்களூருவில் இருப்பதாக  சொன்னேன். அவனிடம் என்ன செய்கிறாய் என்று கேட்ட போதே முகம் மாறிவிட்டது. மிக வருத்தமாய் சொன்னான் "இன்ஜினியரிங்" அண்ணா. இப்போதான் முதல் வருடம் முடித்து உள்ளேன். அடுத்து நிறுத்தி இருந்தால் பரவாயில்லை, அவன் அடுத்தடுத்து கேட்ட கேள்விகள் தான் என்னை அதிர வைத்தன. 

அண்ணா, எப்டின்னா படிச்ச உடனே வேலை கிடைச்சுடுமா? இல்ல நிறைய அலையணுமா? கேம்பஸ்ல என்ன கேப்பாங்க, எத்தன சதவிகிதம் மதிப்பெண் வர வேண்டும், என அடுக்கடுக்காக கேள்விகள் தான் கேட்டுக் கொண்டே இருந்தான். அவன் முகத்தில் ஒரு துளி சந்தோசம் கூட இல்லை. 

நாமக்கல் அருகில் இருக்கும் ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் படிக்கிறான், பனிரெண்டாம் வகுப்பில் 1030 மதிப்பெண்கள். 

இத்தனை மதிப்பெண் எடுத்தவன், எப்போது தன் வாழ்வை கொண்டாடப் போகிறான்? வாழ்க்கை என்பதை ஒரு ஓட்டப் பந்தயமாக ஆக்கி விட்டோம். வழியில் இருக்கும் சந்தோசங்களை பார்க்காதே, ஓடு ஓடு உன் இலக்கை நோக்கி ஓடு என்று சொல்லி பழக்குகிறோம். 

பத்தாம் வகுப்புக்கு முன்னர் பத்தாம் வகுப்பு தான் இலக்கு, அதன் பின்னர் பனிரெண்டாம் வகுப்பு, பின்னர் கல்லூரி, பின்னர் வேலை, பின்னர் குடும்பம்.  இதில் எது அவன் இலக்கு? ஓடச் சொல்லும் உங்களுக்காவது தெரியுமா? இப்படி ஓடிக் கொண்டே இருந்தால் ஒருவன் எங்கே இளைப்பாருவான்? 



உங்கள் மகன்/மகள் பிற்காலத்தில் நன்றாக வாழ வேண்டும் என்றா? அப்படியென்றால் எப்போது அவன் சந்தோசமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? 

சந்தோசம் என்று நிறைய பெற்றோர் நினைப்பது, தன் பிள்ளை நன்றாக படித்து, நல்ல மதிப்பெண் வாங்கி, நல்ல வேலையில் சேர்ந்து, நிறைய சம்பாதிக்க வேண்டும். இது யாருக்கு சந்தோசம். பெற்றோர் ஆகிய உங்களுக்கா?   

ஒரு 17 வயது பையன், தன் எதிர்காலம் எப்படி இருக்க வேண்டும் என்று நினைக்கலாம், ஆனால் அதை நினைத்தே கவலைப் பட வைத்து விட்டோம் நாம்.

நாம் 17-வயதில் கல்லூரியில் இருந்த போது, இரவு கலை நிகழ்ச்சி காணப் போகுதல், ஊருக்கு வந்தால் கிரிக்கெட் விளையாடுதல், கிணற்றில் குளித்தல், கால நிலைக்கு ஏற்ப ஏதேனும் பழம் பொறுக்க செல்லுதல் என்று என் வாழ்க்கையை "வாழ்ந்தேன்." நீங்களும் அப்படியே இருந்திருப்பீர்கள். ஆனால் உங்கள் பிள்ளைகளை ஏன் அதை செய்ய விடாது தடுக்கிறீர்கள்?

இதையே செய்து, இன்று நன்றாக இருக்கும் எத்தனையோ சாதனையாளர்கள் நம்ம ஊரில் உள்ளனர். ஆனால் நாம் அவர்கள் கஷ்டப்பட்டார்கள், முன்னேறினார்கள் என்று கஷ்டபட்டால் தான் வாழக்கையில் ஜெயிக்க முடியும் என்று அவர்கள் மனதில் விதைத்து விட்டோம். அதை தான் பிரதிபலிக்கிறான் நேற்று நான் பார்த்த பையன். ஆனால் எதையும் இஷ்டப்பட்டு செய்தால் கஷ்டமில்லை என்று புரிய வைக்க தெரியவில்லை நமக்கு.

பிள்ளைகளை இயந்திரமாக்கி, பணத்தை அறுவடை செய்ய வேண்டும் என்பதே நிறைய பெற்றோரின் எண்ணமாக உள்ளது. வாழ்க்கையை படிக்க வேண்டியவர்களை, வெறும் புத்தகம் தான் வாழ்க்கை என்று அறியத் தருகிறோம். அதை தாண்டிய கொண்டாட்டங்கள் அவர்கள் உலகில் எப்போதோ நீங்கி விட்டது.

ஒரு கல்லை செதுக்கி கடவுள் என்று சொல்லி, அதற்கு நம் தேவைக்கு படையல் படைத்து, ஆடு வெட்டி எல்லாவற்றையும் நாம் சாப்பிட்டு விடுவோம். நாம் நினைத்தது நடக்காவிட்டால் கடவுளை குறை சொல்வோம். குழந்தைகளும் இது போன்ற கடவுள்களே.

மாணவப் பருவம் என்பது எந்த கவலைகளும் அறியா பருவம் என்று சொல்லிய காலம் உண்டு, ஆனால் இன்று மகிழ்ச்சி அடையாதே, நீ இன்னும் இலக்கை அடையவில்லை என்று விரட்டி, சந்தோசமாக இருக்க கூடாது, என்பதையே சந்தோசம் என்று மாற்றி விட்டோம். 


ஒரு நாளில் எல்லாவற்றையும் விலை கொடுத்து வாங்கிட முடியும் உங்கள் பிள்ளையால், ஆனால் அவனுக்கு வேண்டிய சந்தோசத்தை தவிர. :-(

Saturday, May 12, 2012

இணையத்தில் எண்டமூரி வீரேந்திரநாத் நாவல்கள்

பெரும்பாலான தமிழர்களுக்கு நாவல் என்றால் உடனே நினைவுக்கு வருபவர் ராஜேஷ்குமார். அடுத்து சுபா,இந்திரா சௌந்தர்ராஜன், ரமணிச்சந்திரன் என பலரும் அடுத்த நிலை. 

இதில் நான் அதிகம் படித்தது ராஜேஷ்குமார் நாவல்களை. அடுத்து இந்திரா சௌந்தர்ராஜன் இவரது நாவல்கள் பெரும்பாலும் அமானுஷ்யம் என்ற வகையில் இருக்கும். இந்த நிலையில் நான் புதியதாக ஒன்றை படிக்க நினைத்த போது கண்ணில் பட்ட பெயர் தான் "எண்டமூரி வீரேந்திர நாத்". 



தொடர்ந்து லிங்குசாமி, விஜய் படங்களையே பார்த்தவனுக்கு மணிரத்னம், கமல் படங்களை பார்த்தால் எப்படி இருக்கும்? சும்மா ஜிவ்வுன்னு ஏறும்ல அதான், அதேதான். 

இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர், தெலுங்கில் எழுதப்பட்ட இவரது பெரும்பான்மையான நாவல்கள் மொழி பெயர்க்கப் பட்டுள்ளன. நிறைய மொழிபெயர்ப்பு செய்தவர் கெளரி கிருபானந்தன்

நான் முதலில் படித்த நாவல் "துளசி தளம்", அமானுஷ்யம், அறிவியல் என கலந்து எழுதி இருப்பார், ஒரே நாளில் படித்து விட்டேன், அடுத்து "மீண்டும் துளசி" இது முந்தைய நாவலின் இரண்டாம் பாகம். முதலாவதை விட இது மிகவும் அருமை. 

தொடர்ந்து சாகர சங்கமம், அந்தர் முகம், பணம் மைனஸ் பணம், நிகிதா, 13-14-15, பட்டிக்காட்டு கிருஷ்ணன், பிரளயம், தளபதி, தி பெஸ்ட் ஆஃப் எண்டமூரி வீரேந்திரநாத் (சிறுகதை தொகுப்பு),  தூக்கு தண்டனை,பர்ண சாலை என பல நாவல்களை படித்தேன். ஒரு முறை, இரு முறை அல்ல. குறைந்த பட்சம் மூன்று நான்கு முறை. ஆம் ஒரு படம் போல கொஞ்சம் கூட விறுவிறுப்பு குறையாமல் நகர்த்தி இருப்பார். பல நேரங்களில் படங்கள் கூட இதனை சொதப்பி விடும். 

ஆனால் இவர் மொத்தம் மொத்தம் 50 நாவல்கள் எழுதி இருக்க, நான் அதில் பாதியை கூட படிக்க வில்லை. ஏன் என்றால் எங்கள் ஊர் நூலகத்தில் மட்டுமே கிடைத்தன அவை.  நிறைய இணைய நண்பர்கள் கூட இதே நிலையில் இருந்தனர். 

ஒரு நாள் வலைமனை சுகுமார் சுவாமிநாதன் அவர்களின் எண்டமூரி வீரேந்திரநாத் பற்றிய பதிவை படித்து விட்டு, அவரிடம் இது குறித்து கேட்ட போது நூலகத்தில் தான் அவரும் படித்ததாக கூறினார். ஆனாலும் இணையத்தில் தேடி பார்த்தேன் கிடைக்கவில்லை. 

தொடர்ந்து என் முயற்சிகள் தொடர, திடீரென ஒரு தளத்தில் எண்டமூரி வீரேந்திரநாத் நாவல்களை கண்டேன். கலிங்கபட்டில இருந்தவனுக்கு கலிபோர்னியாவுக்கு இலவச டிக்கெட் கிடைத்தால் எப்படி குதிப்பான், அப்படி தான் குதித்தேன் நானும். 

நான் மட்டும் குதித்தால் போதுமா? எண்டமூரி வீரேந்திரநாத் அவர்களின் அனைத்து ரசிகர்களும் குதிக்க, யாம் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் என நான் கண்டெடுத்த அனைத்தின் இணைப்பும் உங்களுக்கு தருகிறேன். 

இவை அனைத்தையும் Upload செய்த நண்பரும் நூலகத்தில் இருந்தே ஸ்கேன் செய்து இருக்கிறார். இதற்கு Copyright பிரச்சினை இருக்குமா எனத் தெரியவில்லை. இருந்தாலும், மழை நீரை குடிக்க யாரிடம் அனுமதி கேட்க வேண்டும்? என்ஜாய்...... 

அத்தோடு ஒரு முக்கிய விஷயம், இவரது நாவல்களை எங்கேனும் வாங்க முடியும் என்றால் அதை இங்கே தெரிவிக்கவும். இரண்டே நாவல்கள் மட்டுமே  விலைக்கு நான் வாங்கி உள்ளேன். மற்றவை இணையத்தில் வாங்க முடியவில்லை. கொரியர், VPP என்று எதன் மூலம் வாங்க முடியும் என்றாலும் சொல்லுங்கள். என்ன இருந்தாலும் புத்தகத்தில் படிக்கிற சுகமே தனி அல்லவா?

சமீபத்தில் NHM தளத்தில் சில புத்தகங்கள் வந்துள்ளன. வாங்க விரும்புபவர்கள் வாங்கலாம் - எண்டமூரி வீரேந்திரநாத் நாவல்கள்

கார்த்திகை தீபம - http://www.mediafire.com/?gh36hta5jvdogdl

ராஜமுத்திரை - http://www.mediafire.com/?ye4ux49mjz9dukn 

வஜ்ர கவசம் - http://www.mediafire.com/?f0qdbbt9e9c8gq9 

வாழ்க்கைப் படகு - http://www.mediafire.com/?4llft866c8asmfg

காதல் செக் - http://www.mediafire.com/?622vc3f589g8q9m

பதியன் ரோஜா - http://www.mediafire.com/?pcxbbqucfcr44ie

புஷ்பாஞ்சலி - http://www.mediafire.com/?965m3dg54cgqd7q

தளபதி - http://www.mediafire.com/?9u9yyl0b1g5ftfu

வெள்ளை ரோஜா - http://www.mediafire.com/?nv62rg0zy2d1022

காகித பொம்மை - http://www.mediafire.com/?vmxx9kilxlm74t6

பணம் மைனஸ் பணம் - http://www.mediafire.com/?i4i32bfdooe1ob2

காதலிக்கிறாள் சரிதா - http://www.mediafire.com/download.php?3x34tab8iavx3tt

Black Master - http://www.mediafire.com/?q8d6iy3wiw5jzp7

தர்மாத்மா - http://www.mediafire.com/download.php?ubd6fftpa26t2do

நாட்டிய தாரா - http://www.mediafire.com/?1gu86h9lyk53mx2

லேடீஸ் ஹாஸ்டல் - http://www.mediafire.com/download.php?y27z8ykk56ihaqd

Tuesday, May 8, 2012

வழக்கு எண் 18/9 விமர்சனம்

ஒரு படத்துக்கு என்ன தேவை என்பது ஒரு இயக்குனர் தீர்மானிப்பது. அந்த தீர்மானம் எப்படி என்பதை பொறுத்து அந்தப் படத்தின் வெற்றி அமையும். வெற்றி என்பது இங்கே நூறு நாள் ஒடுவதோ இல்லை விருது வாங்குவதோ இல்லை. பார்க்கும் ஒவ்வொரு ரசிகனும், என்ன படம்டா இது என்று எண்ண வைக்கும் ஒன்றே வெற்றிப் படம். அந்த வரிசையில் வருவது தான் பாலாஜி சக்திவேல் அவர்களின் வழக்கு எண் 18/9.



ஒரு பெண்ணின் மீது திராவகம் வீசப்படுகிறது. யார் அதை செய்தது? காரணம் என்ன? . இந்த ஒரு வரி தான் கதை. அதை அவர் எடுத்த விதம் தான் நம்மை பிரம்மிக்க வைக்கிறது. 

ஆரம்பத்தில் வேலு என்ற கதாபாத்திரத்தின் கதையை சொல்லும் படம், இரண்டாம் பாகத்தில் திராவகம் வீசப்பட்ட ஜோதியின் வீட்டு ஓனரின் மகள் பார்வையில் வழக்கை சொல்கிறது. 

முதலாவதில் விளிம்பு நிலை மனிதர்களின் பரிவு, நேர்மை, மானம் குறித்து பேசும் படம், இரண்டாம் பகுதியில் பணக்கார மனிதர்களின் அலட்டல், குழந்தைகள் மீது கவனமின்மை, அதிகார துஸ்பிரயோகம், காமம் என்று விரிகிறது. 

விளிம்பு நிலை மனிதர்கள் வரும் பகுதி முழுக்க மனதை வருடிச் செல்கிறது 
கதை. ரியல் எஸ்டேட்க்கு பலியாகும் கிராமங்கள், வடநாட்டிற்கு விற்கப்படும் சிறுவர்கள், விபச்சார பெண்கள் என்று இன்னும் பல உண்மைகளை சொல்கிறது. சில கதையில் ஒட்டாத போதும், கதைக்கு உறுத்தாத விதத்தில் சேர்த்து இருப்பது இயக்குனரின் திறமை.

பின் பாதியில் பணக்கார பிள்ளைகளின் சல்லாபம், பெற்றோரின் அலட்சியம் என்ற இரண்டையும் மிக அழுத்தமாக பதிந்து இருக்கிறது. மிக அருமையான பார்வை.

இறுதியில் ஆசிட்டால் மாற்றம் அடைந்த முகத்தை பார்த்தும், நான் உனக்காக காத்திருப்பேன் என்று வேலு சொல்லும் காட்சியை பற்றி எழுத வார்த்தைகளே இல்லை.

வேலுவாக நடித்த ஸ்ரீ, சின்னசாமி, அதிகம் பேசாத ஊர்மிளா மகந்தா(ஜோதி) என மூவரின் நடிப்பும் அருமை. மற்ற இரு முக்கிய கதாபாத்திரங்களும் ஏனோ மனதை ஈர்க்கவில்லை. ஒரு வேலை அவர்கள் காதபாத்திர அமைப்பு காரணமாய் இருக்கலாம்.  சில நிமிடம் மட்டுமே வரும் ரீடேக் ஹீரோ நன்றாகவே சிரிக்க வைக்கிறார்.

படத்தின் மிகப்பெரிய பலம் கேமரா தான். கேமராவின் அந்த அசைவுகள், அட அட விஜய் மில்டன் அசத்தி விட்டார். படத்தில் பெரும்பாலான இடங்களில் கேமராவும் ஒரு கதாபாத்திரமாய் இருக்கிறது.

அடுத்து இசை. பிரசன்னாவின் இசை, கதைக்கு எந்த இடைஞ்சலும் இல்லாமல் மென்மையாய் இருக்கிறது.

குறிப்பாக "ஒரு குரல் கேட்குதே" பாடலுக்கு இவரின் உழைப்பு ஆச்சர்யம் கொள்ள வைக்கிறது. இந்த பாடலுக்கு மட்டும் அர்ஜென்டினா பாடகர் சோஃபியா டோசெல்லோ, வெனிசுலாவின் கிட்டாரிஸ்ட் (Cuatro Player) ஜுனாஞ்சோ ஹெரேரா, அமெரிக்க பியானிஸ்ட் விக்டர் குட், அர்ஜென்டினாவின் பேஸிசிஸ்ட் ரோட்மிஸ்ட்ரோவிஸ்கி, ஹங்கேரி நாட்டு பிரன்க் நேமெத் (டிரம்மர்), இந்திய புல்லாங்குழல் கலைஞர் கமலாகர் மற்றும் பிரசன்னா. இத்தனையும் சேர்த்து கார்த்திக்கின் ஒரு குரலில் இந்தப் பாடலை கேட்கும் போது...... அட அட அட. பாட்ட கேளுங்க நீங்க அப்புறம் சொல்லுங்க. (நன்றி - தி ஹிந்து)

ஒரு குரல் கேட்குது

அடுத்து இசையே இல்லாமல் இருக்கும் "வானத்தையே எட்டிப் புடிப்பேன்" மிக அருமை.

அருமையான படத்துக்கு மிக அருமையாக எடிட்டிங் செய்து இருக்கிறார் கோபி கிருஷ்ணா. 

Monday, April 23, 2012

கோடை விடுமுறை



சைக்கிள் பெடல் போட்டோம் -அன்று
டிரைவிங் கிளாஸ்கள் -இன்று
கேணியில் குளித்தோம் -அன்று
ஸ்விம்மிங் ஃபூல்கள் -இன்று
கொய்யாவும் மாங்காயும்
பழுத்து தொங்கின -அன்று
பாட்டிலில் கிடைகின்றன -இன்று
பாட்டி, தாத்தா வீட்டுக்கு செல்ல
கதைகள் பல இருந்தன -அன்று
அவர்கள் காணாமல் போன
கதைகள் இருக்கின்றன -இன்று
மொத்தத்தில்

கோடை விடுமுறையை
கொண்டாட
அத்தை, மாமன்
சித்தப்பா, பெரியப்பா
வீடுகள் இருந்தன - அன்று
கோச்சிங் கிளாஸ்களும்,
கொளுத்தும் வெயிலும் மட்டுமே
இருக்கின்றன - இன்று



Thursday, April 12, 2012

எப்போது சிரிப்பாள் அவளுக்காக?



அப்பாவின் சம்பள உயர்வுக்கு
ஒரு முறை
பெரியவனின் வேலைக்கு
ஒரு முறை
சின்னவனின் பரீட்சை வெற்றிக்கு
பல முறை
மகளின் திருமணத்துக்கு
ஒரு முறை
என்று எப்போவதாவது
சிரிக்கிறாள் என் அம்மா
எப்போது சிரிப்பாள் அவளுக்காக?



Monday, March 19, 2012

இனி சூரியன் போதுமே

சூரிய ஒளியில் மின்சாரத்துக்கு ஆகும் செலவு என்பது மற்றவற்றில் இருந்து இரண்டு மடங்கு என்று சொல்லப்படுகிறது. ஆனால் கிராமப்புற மக்கள் பயன்படுத்துவது இதுதான். அங்கு என்ன அம்பானியா இருக்கிறார்கள்? முன்னதாக தெருக்களில் எல்லாம் கூட இந்த வகை விளக்கை அமைத்தார்கள். இதற்கு ஆகும் முதலீடு மட்டுமே அதிகம்.மற்றபடி இதை பராமரிப்பது எளிது,அத்தோடு அதிக பின் விளைவு இல்லாத ஒன்று இதுவே.



மத்திய அரசே ஒரு திட்டம் அமைத்து இது குறித்த விழிப்புணர்வை ஓரளவிற்கு பரப்பி வருகிறது. இது நாம் காலத்தால் மறந்து விட்ட பொதிகை தொலைக்காட்சியில் கூட முன்னர் ஒளிபரப்பப்பட்டது. அதாவது ஒரு வீட்டுக்கு அடிப்படை மின்சாரத் தேவைகளை பூர்த்தி செய்ய 5 லட்சம் ஆகும். இதில் அரசே மானியமாக இரண்டு லட்சம் வேறு தருகிறது.(30% மானியம்) மீதிக்கு வங்கி மூலம் கடன் பெறலாம். தனியொரு குடும்பத்துக்கு இது அதிகம் என்றாலும் அரசாங்கம் நினைத்தால் இது எளிது.

இது போக பல சாதனங்கள் சூரிய ஒளியில் இயங்கும் வண்ணம் வந்துவிட்டது. பெங்களூரு நகரில் பெரும்பாலும் சூரிய ஒளி மூலம் மட்டுமே வாட்டர் ஹீட்டர்கள் செயல்படுகிறது. இது போக பல இடங்களிலும் சூரிய ஒளியில் இயங்கும் அடுப்புகள் வந்து விட்டன.

Harish Hande என்ற கர்நாடக இளைஞர் செய்த முயற்சி இந்தியாவில் பிற்படுத்த பகுதிகளில் 120,000 வீடுகளில் சூரிய ஒளி மூலம் மின்சாரம் கிடைத்து உள்ளது. இவர் இந்த முயற்சிக்கு பெற்ற விருதுகள் ஏராளம். இவரின் முயற்சிகளை பின் தொடர்ந்தாலே நாம் சூரிய ஒளியில மின்சாரம் மூலம் தன்னிறைவு அடைய முடியும்.



சரியாக கூறுவது என்றால் 60 km x 60 km உள்ள இடத்தில் 1,00,000 MW மின்சாரம் நாம் உற்பத்தி செய்ய முடியும். இது எத்தனை நம் அணு உலைகளை விட பல மடங்கு அதிகம். இந்தியாவில் உள்ள பாலைவனப் பகுதி மட்டும் 2,08,110 km. இதில் மட்டுமே நாம் தேவைக்கு அதிகமாக உற்பத்தி செய்ய இயலும்.கொஞ்சம் யோசித்து பாருங்கள் அணு உலை, அதன் விளைவுகள், கடல் நீர் பிரச்சினை, மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவது என எல்லாவற்றையும் நாம் யோசிக்க வேண்டும்.

நான் முன்னர் கூறியது போல தனியொரு குடும்பம், ஒரு அரசாங்கம் என எவர் வேண்டும் என்றாலும் உற்பத்தி செய்யும் அளவுக்கு வசதி உள்ளது தான் சூரிய ஒளியில் மின்சாரம். கைக்கடிகாரம் தொடங்கி, வாட்டர் ஹீட்டர் வரை வந்து நிற்கும் இந்த வசதி ஏன் வீடுகளுக்கு பயன்படுத்த முடியாது ?. ஒரு அரசு நினைத்தால் இதை நிறைவேற்ற முடியும். கடந்த ஆண்டுகளில் (2000 இல்) இருந்தததை விட Photo Voltaic(PV) cellவிலை இப்போது பாதி ஆகி விட்டது. அத்தோடு இதன் மூலம் மின்சாரத்தை நாம் சேமிக்க உதவும் லித்தியம் பாட்டரிகள் Recycle செய்யும் வண்ணம் இப்போது உருவாக்கப்படுகின்றன.

சூரிய ஒளியில் மின்சாரம் தயாரிக்க செலவு அதிகம் ஆகும் என்றால் அரசு இவ்வளவு முனைப்பு காட்டுவது ஏனோ?

சூரிய ஒளி மின்சார முயற்சியும், வெற்றியும்: 




அணு மின்சாரத்திற்கு ஆரம்பத்தில் எவ்வளவு செலவு செய்கிறோம். அதை பராமரிக்க எவ்வளவு முதலில் அணு மின் கழிவுகளை எங்கு கொண்டு எறிய போகிறோம்? இதை பாதுகாப்பதில் உள்ள சிக்கல்களும் செலவுகளும் எந்தக்கணக்கில் அடங்கும்? என்று அரசாங்கம் கணக்கிட்டால் சூரிய ஒளி மின் உற்பத்தி இதில் பாதி கூட வராது.

அணு உலை அமைக்கும் போது ஒரு குறிப்பிட்ட அளவு உற்பத்தி வேண்டும் என நிர்ணயிக்கும் அரசாங்கம்அதை உற்பத்தி செய்கிறதா? என்றால் இதுவரை இல்லை. ஆனால் செலவு மட்டும் பன்மடங்கு ஆகும்.

நாம் கையேந்தும் அமெரிக்கா கூட இந்த தொழில்நுட்பதுக்கு வந்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. இந்தியாவில் இது பெரும்பாலும் தனியார்கள் கையில் மட்டுமே உள்ளது. நிலக்கரி மூலம் பெறப்படும் அனல்மின்சாரம் ரொம்ப நாள் வராது சூரிய ஒளி ஒன்றும் தீரக்கூடியது இல்லை.

பெங்களூரை சேர்ந்த ஒருவர் தன் வீடு முழுக்க இதை மட்டுமே பயன்படுத்துகிறார். பல்லாயிரம் கோடிகள் கொட்டி அணுமின் நிலையம் அமைப்பதை விட இதன் செலவு மிகவும் குறைவு. தனி மனிதருக்கான பார்வையில் மட்டுமே இதன் விலை அதிகம், ஆனால் ஒரு அரசு என்று வரும் போது இதை மிகக் குறைந்த விலையில் தயாரிக்க முடியும். 

தனியார் நிறுவனங்கள் இந்த தொழில் மூலம் கொழிக்கும் போது ஒரு அரசாங்கம் சப்பை காரணங்களை கூறி சமாளித்து வருகிறது. மக்கள் வாழ்க்கையில் விளையாடும் கூடங்குளம், தாராப்பூர் , கல்பாக்கம் என அத்தனை அணுஉலைகளையும் மூடி விட்டு, சூரியனில் கை வைத்தால் வரும் மின்சாரமே தன்னிறைவை தரும். 

Friday, March 2, 2012

காதலாய் இருப்போம்



நான் உனக்கானவன்
நீ எனக்காகவே ஆனவள் 

♥♥♥

இன்று காதலிப்போம் 
நாளை காதலாய் இருப்போம்

♥♥♥ 

முடிந்த பின்தான்
தொடங்குகிறது காதல் 

♥♥♥

நீ இருக்கும் நேரத்தில் 
உன்னை நினைக்கிறேன் 
நீ இல்லாத நேரத்தில் 
உன்னை மட்டுமே நினைக்கிறேன்

♥♥♥

நீ இல்லாத நான்
நானே இல்லாத நான்

♥♥♥

எப்போது என்னை வெறுப்பாய்
என்றாள்
நீ இறந்த பின்
என்னை விட்டு சென்றதற்காக
என்றேன்

♥♥♥


Thursday, March 1, 2012

குற்றம் பிறக்குமிடம்



உலகில் எல்லோரும்
நல்லவர்களான நாளில்
நான் மட்டும் தனியே
நடக்கிறேன் சாலையில்
ஆளே இல்லாத
சாலையில் எரிந்த
சிவப்பு விளக்கு
அணையக் காத்திருக்கிறது
அந்த கார்
நூறு மீட்டருக்கு
ஒரு குப்பைத் தொட்டி
ஐநூறு மீட்டருக்கு
ஒரு கழிவறையென
தந்திருந்தது அரசு
தூரத்தில் கும்பல்
அருகில் சென்றேன்
விபத்தில் காயமுற்ற
மனிதரைக் காப்பாற்ற
நான் நீயென போட்டி
அப்போதுதான் கவனித்தேன்
காலுக்கடியில் ஒரு பர்ஸ்
காயமடைந்த மனிதனின்
பணமாய் இருக்கலாம்
எடுத்து அதை
மெல்ல மறைக்கிறேன்

Wednesday, February 15, 2012

தோனி - நான் படித்த படம்

சில படங்களை சிறுவர்களுக்கான படம் என்று சொல்வோம். ஆனால் அதை சிறுவர்களை விட பெரியவர்கள் தான் அதிகம் பார்க்க வேண்டி இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்வதே இல்லை. அந்த வகையில் தோனி படம் சிறுவர்களை பற்றிய பெரியவர்களுக்கான படம், இல்லை பாடம் என்றே சொல்லலாம். 

மகேஷ் மஞ்ரேக்கரின் Shikshanachya Aaicha Gho என்ற மராத்தி படத்தின் தமிழ் பதிப்பு தான் தோனி. தமிழில் பிரகாஷ் ராஜ் தானே இயக்கி உள்ளார். தமிழ் சினிமாவுக்கு ஒரு அருமையான புதுமுக இயக்குனர். 

கிரிக்கெட் கிரிக்கெட் என்று கிரிக்கெட் மீதும், தோனி மீதும் மட்டும் விருப்பம் உள்ள ஆகாஷை M.B.A படிக்க வைக்க வேண்டும் என்பது பிரகாஷ் ராஜின் விருப்பம். ஆகாஷ் என்ன ஆனான் என்பது கதை.



மிடில் கிளாஸ் தந்தை ஆகவும், தாயில்லா குழந்தைகளை பராமரிப்பதிலும், பக்கத்து வீட்டு பெண் துணியோடு விழுந்த ஜட்டியை எடுக்க பதறுவதுதும், தன் மகன் குறித்து வருந்துவதுமாக பிரகாஷ் ராஜ் தான் எல்லாமே.இவருடன்  கிடைத்த கேப்பில் சிக்ஸர் அடிக்கிறான் ஆகாஷ். 

ராதிகா ஆப்தே மிக அருமையான புதுவரவு தமிழுக்கு. நடிக்கத் தெரிந்த பொண்ணு. ராதா மோகன் படம் போல ஒவ்வொரு கதாபாத்திரமும் ஈர்க்கிறார்கள். கந்துவட்டி பாய், பள்ளி முதல்வர், பக்கத்து வீட்டு நண்பர்கள் என அனைவரும்.  நாசர் மிக நீண்ட நாளுக்கு நடித்து பார்க்கிறேன். கிரிக்கெட் கோச் ஆக கொஞ்ச நேரமே வந்தாலும் ஈர்க்கிறார்.

ஒரு படத்துக்கு பாடல் எந்த இடத்தில் வர வேண்டும் என்பது ராஜாவுக்கு மட்டுமே தெரியும் போல. மனுஷன் பின்னணியிலும் அசத்தி உள்ளார். 

கிட்டத்தட்ட நண்பன் படம் போன்ற கதை என்றாலும், அதில் இலியானா இடுப்பையும், அஸ்கு லஸ்கா பாட்டையும் பார்த்துவிட்டு ஏன் இலியான இவ்வளவு மெலிந்தார் என்று வருத்தபட்ட ஆட்களில் எத்தனை பேர் படத்தின் ஆழத்தை உணர்ந்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் தோனி, எந்த வித சமரசமும் இன்றி நேரடியாக கல்வி முறையில் மாற்றம் வேண்டும் என்பதை எடுத்துரைக்கிறது. 

ஆனால் வெறும் கல்வி முறை மாற்றம் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்தி விடுமா? என்ற பெரிய கேள்வி எழுகிறது. இப்போது உள்ளதில் சில மாற்றங்கள் செய்தாலும் பெற்றோர் மனம் மாறினால் தானே மாற்றம் நடக்கும். 8 அல்லது 10 வரை இப்போது உள்ளபடியே தொடர்ந்து விட்டு அதன் பிறகு விருப்பத் துறையை மட்டும் படிக்கும் வண்ணம் மாற்றலாம். இப்போது உள்ள 11, 12 முறையை கண்டிப்பாய் மாற்ற வேண்டும். இதை 8-ஆம் வகுப்பில் தொடங்குதல் மிகவும் சிறந்தது. 

தன் பையனை படி படி என்று சொல்லும் பெற்றோர் அவன் ஓய்வு நேரங்களில் என்ன செய்கிறான் எதில் அவனுக்கு விருப்பம் என்று பார்ப்பதே இல்லை. இன்றைய எந்திர வாழ்க்கையில் படிப்பு, மதிப்பெண் இல்லாவிட்டால் வாழ்க்கையே இல்லை என்று நினைப்பவர்களை முகத்தில் அறைந்துள்ளது படம்.

அத்தோடு விளையாட்டு என்றால் பெரும்பாலும் கிரிக்கெட் என்று முன் வைக்கப் படுகிறது. மற்றவை நிறைய பேர் கண்களுக்கு தெரிவதே இல்லை. வெற்றி பெறுபவர்களுக்கும் சரியான அங்கீகாரம் இல்லை. இந்த நிலையில் எப்படி அவர்கள் மற்ற விளையாட்டுகளை விரும்புவார்கள் ? அரசும், மீடியாவும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சச்சினின் நூறாவது சதத்துக்கு காத்திருக்கும் மீடியா, நூறு வெற்றி பெற்ற மற்ற விளையாட்டு வீரர்களை ஒரு பத்தியில் அடைத்து விடுகிறது. ஹாக்கி, கபடி என அனைத்தும் புறக்கணிக்கப் படுகின்றன. இவர்களே மக்களின் எண்ணங்களையும் தீர்மானிக்கின்றனர். இதைதான் மக்கள் விரும்ப வேண்டும், அதை முக்கியப்படுத்தினால் எவரும் பார்க்க மாட்டார்கள் என்று.   ஒரே இலக்கை நிர்ணயிக்க கூடாது. படத்தில் வேறு ஒரு விளையாட்டை பயன்படுத்தி இருக்கலாம். ஒரு கவர்ச்சிக்காக கிரிக்கெட் பயன்படுத்தி உள்ளார்கள் என்று நினைக்கிறன். 

அத்தோடு பிள்ளைகள் விருப்பத்தை மதிப்பது என்பதன் உடனடியாக நடக்கும் விஷயம் அல்ல. இப்போது கிட்டத்தட்ட வயது 30 களில் இருப்பவர்கள் தொடங்க வேண்டிய மாற்றம் இது. தனக்கு பிறக்க போகும்.பிறந்த குழந்தையை என்ன செய்வேன் என்று நினைக்காமல், அவன் விருப்பத்தை அறிய முயற்சிக்க தன்னை தயாராக்க வேண்டும். அநேகமாக எங்களது தலைமுறை மட்டுமே அதை நடத்த முடியும் என்று தோன்றுகிறது. 

இந்தப் படம் இப்போது பிள்ளைகளை படிக்க வைப்பவர்களுக்கு இல்லை, ஏன் என்றால் அவர்களால் இதை புரிந்து கொள்ள இயலாது. அவர்கள் இப்போது பாதி கிணறு தாண்டி விட்டார்கள். அடுத்த தலைமுறையை உருவாக்கப் போகும் நாம் (20 to 35) என்ன செய்யப் போகிறோம்?

படத்தில் ஒரு காட்சியில், குழந்தைகள் சிறு வயதில் கஷ்டபட்டால் தான் பின்னால் சந்தோசமாக இருக்க முடியும் என்று சொல்லும் போது கஷ்டப்படவே தேவை இல்லை என்று பிரகாஷ் சொல்வார். அது தான் உண்மை. சிறு வயதில் இருந்து கஷ்டப்படு, கஷ்டப்படு என்று சொல்லி சொல்லி வாழ்க்கை முழுவதும் கஷ்டத்தில் இருக்க விடுகிறோம். அவ்வளவு பெரிய பணக்காரர் பில்கேட்ஸ் க்கு கவலை இருக்காதா? அம்பானிக்கு கவலை இருக்காதா?  25 வயதுக்கு மேல் கவலை  கொள்ளாவிட்டால் அது பிணமாகத்தான் இருக்க முடியும்.

பால்ய பருவம் மட்டுமே கவலை இல்லாப் பருவம், குழந்தைகள் என்பவர்கள் உங்கள் வீட்டு டிவி அல்ல தேவையான படி சேனல் போல மாற்றிக் கொள்ள. அவர்கள் இந்த உலகின் கடவுள் போல, கதவை அடைக்காமல் கொஞ்சம் திறந்து வையுங்கள் வெளியுலகை சுற்றி வரட்டும். முன்பு ஒரு கட்டுரையில் எழுதியது நினைவுக்கு வருகிறது.


 "என் தந்தை என்னை இப்படி ஆக்கவில்லை எனவே நான் என் பிள்ளையை இப்படி ஆக்கிடுவேன். "கொஞ்சம் மாற்றி யோசித்து பாருங்கள் "என் தந்தையால் என் ஆசையை நிறைவேற்ற இயலவில்லை. ஆனால் நான் என் பிள்ளையின் ஆசையை நிறைவேற்றுவேன்." 

அவ்ளோ தான் நண்பர்களே.

Friday, February 10, 2012

பழுது படாத பாசம் - கவிதை

ஈகரை கவிதைப் போட்டி ஐந்தில் இரண்டாம் பரிசு பெற்ற என் கவிதை. மிகப் பெரிய அங்கீகாரத்தை அளித்த ஈகரைக்கு என் நன்றிகள்.






எட்டணாவுக்கு பத்துதான் என
பதினொரு மிட்டாய் தந்த
பலகாரக் கடை பாட்டி !

அஞ்சு ரூபாய் அதிகம்
அப்புறம் வாங்கிக்கலாம் என
சிரித்த மளிகைக்கடை தாத்தா !

ஒண்ணே கால்கிலோ வருமென
ஒரு கிலோக்கு காசு வாங்கிய
காய்கறி விற்கும் ஆச்சி !

அடுத்தமுறை வருவேன் என
பனிரெண்டுக்கு பத்து வாங்கிய
முடி வெட்டும் பெரியவர்!

தாகத்துக்கு நீர் கேட்டால்
வெயிலுக்கு மோர் தந்த
என் வெள்ளந்தி அப்பாயி !

பழுது படாத பாசம்
பகிர்ந்த தலைமுறை இன்று
படங்களில் மட்டும் சிரிக்கிறது.


Wednesday, February 8, 2012

ஈழம் பாடாத இதயம் - கவிதை

ஈகரை கவிதைப் போட்டிக்கு அனுப்பி பரிசு பெறாத என் கவிதை. 



இருபது வயது பெண்ணின்

நிர்வாணம் என்ன செய்யும்?

லிங்கம் புடைக்கும் உலகமிதில்

அங்கம் புடைக்க அழுதேன்


என் இனப் பெண்களுக்கு

இறந்த பின்னும் இழிவு கிடைக்க,

மரணத்தை ரசிக்கும் ஓநாய்களாய்

ஒரு கூட்டமதை ருசிக்க,


கண்டுகொள் உலகமே என

காணொளியில் காட்டப்பட – அதில்

மறைக்கப்பட்ட கருப்பில் இருந்து

மலர்ந்த பிஞ்சுகள் கதறியழ,


ரத்தம் படிந்த மண்ணில்

புத்தன் புதிதாய் பிறந்திருக்க,

வெடித்த சிரிப்போடு வேதாளம்

ஆட்சிப் பீடத்தில் தொடர்ந்திருக்க,


கேட்ட கேள்விகள் எல்லாம்

கிணற்றில் போட்ட கல்லாக,

திறந்த நிர்வாணத்தில் காண்கிறேன்

மறைந்து கிடைக்கும் மனிதநேயத்தை.

Monday, January 30, 2012

வெங்காயம், உச்சிதனை முகர்ந்தால் - பிழைக்கத் தெரியாதவர்களின் சினிமா

கடந்த வாரத்தில் பார்த்த திரைப்படங்களில் வெங்காயம் மற்றும் உச்சிதனை முகர்ந்தால் ஆகியவற்றை பற்றிய பகிர்வு இது. 

ஒரு சினிமா என்றால் என்ன இருக்க வேண்டும்? என்று சிந்திக்க வைத்தன இரண்டும். இந்த இரண்டிலும் கதை மட்டும் தான் ஹீரோ, ஹீரோயின் எல்லாமே. 

முதலில் "வெங்காயம்" 




சமூகத்தில் புரையோடிக் கிடக்கும் "ஜோசியம்" என்ற ஒரு மிகப் பெரிய மூடநம்பிக்கையை எதிர்த்து எடுக்கப்பட்ட படம். நான்கு ஜோசியர்களால் பாதிக்கப்பட்ட நான்கு சிறுவர்கள் செய்யும் கடத்தல் தான் படத்தின் கதை. நடிப்பு,கேமரா என்பதை தவிர்த்து விட்டு பார்த்தால் உலக சினிமா அடையாளங்கள் தெரியும் ஒரு அருமையான படம். படத்தில் எனக்கு மிகவும் பிடித்தது, 

கடத்தப்பட்ட ஜோசியர் ஒருவரால் தான் பேரனை இழந்த பாட்டி ஒருவர் பைத்தியமாக அழுது கொண்டு இருப்பார் அப்போது ஹீரோ அவருக்கு பணம் கொடுத்து அழாதே என்று சொல்வார், கிளைமாக்ஸில் அதே ஹீரோ அழும்போது பணத்தை கொடுத்து அழாதே என்று சொல்வார் அந்தப் பாட்டி. 

அடுத்து "உச்சிதனை முகர்ந்தால்"




ஈழத்தைப் பற்றிய அருமையான பகிர்வு. ஒரு பதின்மூன்று வயது பெண் ராணுவத்தால் கற்பழிக்கப்பட்டு கருத்தரிக்க, அதை கலைக்க தமிழகம் வருகிறாள் புனிதவதி அதன் பின் நடக்கும் சம்பவங்கள் தான் கதை. புனிதவதி என்ற பெயரில் நடித்து இருக்கும், இல்லை வாழ்ந்து இருக்கும் நீநிகாவின் திறமை அபாரம். 

இதில் ஒரு காட்சி என்று குறிப்பிட்டு சொல்ல முடியாத அளவுக்கு நிறைய காட்சிகள் அருமை.  குறிப்பாக ஒரு காட்சியில் சிங்களக் கருவை சுமக்கும் தன் மகளை கொன்று விட நினைக்கும் தாய், தன் மகள் மாடியில் இருந்து எட்டிப் பார்க்கும் போது தவறி விழுந்து விடுவாளோ என்று பதறுவது தாய்மையின் பாசம் சொல்லுகிறது. 

திரு நங்கைகளை மிக அழகாக காட்டிய ஒரே படம் இது தான் என்று நினைக்கிறேன். (நர்த்தகி இன்னும் பார்க்கவில்லை). ஏழாம் அறிவை தமிழர்களின் பெருமை என்று உளறியவர்கள் இதை ஒரு தரம் பார்க்கலாம்.

கவிஞர் காசி ஆனந்தன் எழுதிய "இருப்பாய் தமிழா நெருப்பாய்" என்ற பாடலில் தெறிக்கிறது தீ.




சரி விசயத்துக்கு வருவோம். இந்த இரண்டு படங்களையும் எந்த கணக்கில் சேர்ப்பது. இன்றைய நிலையில் சினிமா என்பதன் அர்த்தமே மாறிவிட்டது. மூன்று மணி நேரம் என்னை கட்டிப் போட வேண்டும். எதையாவது காட்ட வேண்டும் என்று பிரயத்தனப்படும் இயக்குனர்கள். இது தான் இன்றைய சினிமா. 

குப்பைப் படங்கள் எல்லாம் எடுக்கப்படுவது கூட தவறில்லை. ஆனால் அதை நம் மீது திணிக்க முயலும் மீடியா மீது தான் மிகப் பெரிய வெறுப்பு. வெங்காயம் படத்துக்கு எந்த தொலைக்காட்சியும் ஒரு நிகழ்ச்சி கூட ஒளிபரப்பவில்லை.  

பணம், பணம் பணம் என்று பார்த்து இன்று நாம் சினிமா என்பதை வியாபாரம் என்று ஒரு பார்வையில் மட்டுமே பார்க்கிறோம். சினிமா என்பது நம் கலாச்சாரத்தின் ஒரு அடையாளம். ஐம்பது வருடங்கள் கழித்து ஒஸ்தி, வெடி, மயக்கம் என்ன என்று யாரும் பார்க்கப் போவது இல்லை. (பார்த்தால் காறித் துப்புவார்கள் என்பது வேறு விஷயம்)

இன்னொரு விஷயம் கேவலமான வார்த்தைகள் வரும் தமிழ் படங்கள் நிறைய பார்த்து இருப்போம். அந்த வார்த்தைகள் எல்லாம் சென்சார் போர்டுக்கு தெரியவில்லை. ஆனால் உச்சிதனை முகர்ந்தால் படத்தில் "இலங்கை" என்று வரும் வார்த்தைகள் சென்சார் செய்யப்பட்டு உள்ளன. இவர்களுக்கு சோனம் கபூர் நடு விரலைக் காட்டியதில் தவறே இல்லை. 

ஹாலிவுட், பாலிவுட் என்று இருப்பதை எல்லாம் பார்த்து காப்பி அடிப்பவர்களுக்கு உலக சினிமாவில் எடுக்கப்படும் நல்ல சினிமாக்கள் இருப்பது தெரியவே இல்லை போலும். (தெய்வத் திருமகள், நந்தலாலா எடுத்தவர்கள் அதை ஒத்துக்கொள்ளவில்லை)

கலைக்காக படம் எடுப்பவர்களை இன்று பிழைக்கத் தெரியாதவர்கள் என்று சொல்ல வேண்டும். அந்த வகையில் வருகிறார்கள் வெங்காயம், உச்சிதனை முகர்ந்தால் இயக்குனர்கள். ஆனால் காலம் தாண்டியும் நிற்கப் போவது இந்தப் பிழைக்கத் தெரியாதவர்கள் தான்.

பின் குறிப்பு: இரண்டு படங்களையும் DVD-யில் தான் பார்க்க முடிந்தது. இங்கே எந்த தியேட்டரிலும் ரிலீஸ் ஆகவில்லை என்பது ஒரு வருத்தமான உண்மை. அப்படி பார்த்ததுக்கு இயக்குனர்கள் மன்னிப்பார்களாக. 

Friday, January 20, 2012

நண்பன் திரைப்படம் சில தொழில்நுட்ப தவறுகள்

பொங்கலுக்கு வந்த நண்பன் திரைப்படம் நிறைய பேர் பார்த்து இருப்பீர்கள், விமர்சனமும் படித்து இருப்பீர்கள். இது விமர்சனம் அல்ல. 

தமிழ் சினிமாவில் தொழில்நுட்ப விசயங்களை மிக அற்புதமாக கையாளும்  சங்கர் செய்த சில தொழில் நுட்ப தவறுகளை சொல்வது மட்டுமே இந்தப் பதிவு. 

1. படத்தில் ஒரு காட்சியில் பாடம் நடத்தும் ஆசிரியரின் கரும்பலகையில் தேதி குறிப்பிட்டு இருப்பார்கள். அதில்தான் ஆரம்பிக்கிறது எல்லா பிரச்சினையும் அதில்  உள்ள தேதி 3/6/98. சரி இதற்கு மேல் விஷயத்துக்கு வருவோம். 


பொறியியல் என்பதால் நான்கு ஆண்டு காலம் படிப்பின் கால அளவு.

2. படத்தில் இலியானா பயன்படுத்தும், இரு சக்கர வாகனம் "ஸ்கூட்டி பெப் பிளஸ்" (Scooty Pep+ ) இது 2005 ஆம் ஆண்டுதான் அறிமுகப் படுத்தப்பட்டது.(நான்கு ஆண்டு என்றால் 2002 தானே?)




3. அடுத்து அனுயாவுக்கு பிரசவம் பார்க்கும் போது youtube ஆனது பயன்படுத்தப்படும்(Vacuum Cup Tutorial). youtube ஆனது 2005 இல் இருந்துதான் இயங்குகிறது.


4. அடுத்து படத்தின் காஸ்டியூம். விஜய், இலியானா உடைகள், விஜய் பயன்படுத்தும் bag ஆகியவை அப்போது இந்தியாவில் அறிமுகம் ஆகி இருக்கவில்லை.


5.படத்தில் பயன்படுத்தப்படும் 1100 அலைபேசி(சில இடங்களில் மட்டும் ) ஆனது 2003 இல் தான் அறிமுகப்படுத்தப்பட்டது.

6. ஆசிரியர் தினத்துக்கு சத்யன் வாசிக்கும் கட்டுரையை எடிட் செய்யும் போது கணினியில் Windows 7 OS இருக்கும். 1998 -ல் Windiows 7 ????

7. படத்தில் காட்டப்படும் மருத்துவமனையில் LCD மானிட்டர்கள் இருப்பதாக இருக்கும். அவை சில ஆண்டுகளுக்கு முன்பு தான் அறிமுகம் ஆனது என்பதை கவனிக்க மறந்து விட்டார்கள் போல.

வேறு ஒரு இயக்குனர் என்றால் இவை போகிற போக்கில் மறந்து இருக்கலாம். ஆனால் சங்கர் எனும் போது தான் எனக்கு இது கவனிக்க தோன்றியது.

இவை அனைத்துக்கும் மிக மிக மிக முக்கிய காரணம் முதல் பாயிண்ட், ஆண்டை குறிப்பிட்டது. 3 Idiots படத்தில் இது இருக்காது.

மற்றபடி படம் அருமை. 

Friday, January 6, 2012

கோமாளி செல்வா - என் நகைச்சுவை முயற்சி

இந்தியாவும் பாகிஸ்தானும் இப்படி பிரிந்து கிடைக்கிறதே என்று செல்வாவுக்கு வருத்தம். யார் இந்த செல்வா என்று பார்த்தால், இவர் ஒரு வலைப்பதிவர். அடிக்கடி மொக்கையும், கதைகளும் எழுதுவார் பதிவுலகமே இவரைக் கண்டு பயப்படும் அளவுக்கு. கொஞ்ச நாள் முன்னாடி மூடப்பட்ட பஸ்(Buzz) கூட இவரால் தான் என்று நம்பப்படுகிறது. ஆனா பாவம் இவர்க்கு இது எதுமே தெரியாது. 

சரி இப்போ இந்தியா, பாகிஸ்தான் மேட்டர்க்கு வருவோம். எப்போ பார்த்தாலும் குண்டு வைக்கிறாங்க, சண்டை போடுறாங்களேனு இவர்க்கு வருத்தம். தான் மட்டும் இந்தியா சுதந்திரம் பெறும் முன்பு பிறந்திருந்தால் பாகிஸ்தானை பிரிக்கவே விட்டு இருக்க மாட்டேன் என்று மனத்துக்குள் அடிக்கடி சொல்லி கொள்வார். அப்படித்தான் ஒரு நாள் நினைத்தவர், ஏன் இதை நம் நாட்டின் முக்கிய தலைவர்களிடம் சொல்லக் கூடாது என்று நினைத்தார். அப்படியே கிளம்பினார் சென்னைக்கு.

முதலில் சந்தித்தது முதல்வர் ஜெயலலிதாவை.

செல்வா: அம்மா வணக்கம். 


ஜெ: வாங்க எப்படி நீங்க உள்ள வந்தீங்க? கேட் பூட்டி இருக்குமே. 

செல்வா: வாட்ச்மேன் கிட்ட நான் புதுசா பதவி ஏத்து இருக்கிற அமைச்சர்னு சொன்னேன் விட்டுட்டார். 


 ஜெ: ஆமா நீங்க எந்த துறை?  எவ்ளோ மணி நேரமா அமைச்சரா இருக்கீங்க? கமான் க்விக், உங்க மூஞ்சி எனக்கு பிடிக்கல, மாத்தணும். 


செல்வா:அம்மா நான் அமைச்சர்லாம் இல்ல, இந்தியா,பாகிஸ்தான் ரெண்டையும் சேர்த்து வைக்கணும், அதுக்காக உங்ககிட்ட பேச வந்தேன்.  

ஜெ: எப்போ பிரிச்சாங்க? கருணாநிதி ஆட்சில தானே? சொல்லுங்க சட்டமன்றத்துல ஒரு தீர்மானம் போட்டுடுவோம். 

 இதுக்கு மேல இருந்தா பைத்தியம் பிடித்திடும் என்று அலறி அடித்து வெளியே ஓடிவந்தார்.வேற யார்கிட்ட போலாம் என்று யோசித்தவர், எதிரே சுவரில் போஸ்டர் ஒன்றில் மாடு கூட திங்காத கருணாநிதி படத்தை பார்த்தவர் சரி இவரிடம் பேசலாம் என்று அவர் வீட்டுக்கு சென்றார்.

கருணாநிதி: வாங்க தம்பி. உங்கள் பெயர் என்ன? எந்த ஊர்? 


செல்வா : வணக்கம் ஐயா, என் பெயர் செல்வா, ஊர் கோபி. 


கருணா: அடடே தம்பி மூன்றெழுத்து, செல்வா மூன்றெழுத்து, கோபி, ......... சரி விடுங்க அது ரெண்டு எழுத்துதான் போல. என்ன விஷயம்? 


செல்வா : அது வந்து ஐயா,  இந்தியால இருந்து பாகிஸ்தானை பிரிச்சுட்டாங்க இல்லையா? அதை சேர்த்தால் இந்தியாவுக்கு எந்த பிரச்சினையும் இல்லை அல்லவா? அதனால சேர்க்க வேண்டும்னு சொல்லி உங்ககிட்ட பேச வந்தேன். 


கருணா : ஆமாம் தம்பி, 1947 இல் இந்தியா இரண்டாக பிரிந்த போதே, அதை எதிர்த்து அறிக்கை விட்டவன் நான். (பேப்பரை எடுத்து காட்டுகிறார்). 


செல்வா : அதான் ஐயா உங்ககிட்ட சொல்லி எப்படியாவது ரெண்டு நாட்டையும் சேர்த்து வைக்கலாம்னு வந்தேன். 


கருணா : அப்படியா? அங்க தமிழர்கள் இருந்தா சோனியாஜி கிட்ட சொல்லி ஏதாவது பண்ணலாம். விடுங்க நாளைக்கு பாகிஸ்தான் பிரதமர்க்கு ஒரு கடிதம் அனுப்பிடலாம். அப்படியே கலைஞர் தொலைக்காட்சிக்கும் ஒரு ஜெராக்ஸ் அனுப்பிடலாம். 


இந்த பல்பு ப்யூஸ்போயி பல வருடம் ஆச்சு என்று அப்போது தான் உணர்ந்தார் செல்வா. அப்படியே நன்றி கூறி விடை பெற்றார். 

கருணா : சரிங்க தம்பி, போகும் போது, அப்படியே முரசொலிக்கு ஒரு வருட சந்தா கட்டிட்டு போயிடுங்க. இல்லாட்டி கேட் திறக்க மாட்டாங்க. 

வந்ததுக்கு தண்டசெலவு என்று நினைத்தவர். பணம் கட்டிவிட்டு வெளியே வந்தார். சரி நாம தமிழக காங்கிரஸ் தலைவர்கிட்ட இது பத்தி பேசுவோம் என்று சத்தியமூர்த்தி பவன் வந்தார்.

 அங்கே வாசலில் கோவில்  பொங்கல் சாப்பிட்டவர் போல ஒருவர் உடக்கார்ந்திருக்க, அவரிடம் "ஏங்க காங்கிரஸ் தலைவர் எங்க இருக்கார் ?" அவர் "தம்பி நான் தான் தமிழக காங்கிரஸ் தலைவர்" என்று சொன்னார். இடையில் ஒரு செருப்பு எங்கிருந்தோ பறந்து வந்து அவர் மீது விழுந்தது.  உள்ளே எட்டிப்பார்த்த செல்வா, அங்கே மல்யுத்தமே நடப்பதைக் கண்டு பயந்து போனார். அலறி அடித்து வெளியே ஓடி வந்தார்.

சரி இங்கே எல்லாம் சரிப்படாது என்று டெல்லிக்கு போவோம் அங்கே நம்ம மன்மோகனை சந்திப்போம் என்று அவர் வீட்டுக்குப் போனார்.

வீட்டில் அவரது மனைவி மைதா மாவு பசையை மன்மோகன் வாயில் தடவிக் கொண்டிருக்க

செல்வா : வணக்கம் பிரதமர்ஜி


மன்மோகன் சுற்றும் முற்றும் திரும்பி பார்க்கிறார். உடனே அவரது மனைவி, அட உங்களைத்தான் சொல்றார் என்க மன்மோகன் கண்ணில் நீர் வழிகிறது. 


மன்மோகன் மனைவி : இப்படி சொன்னாலே இவர் அழுதுடுவார். இவர்தான் பிரதமர்னு இவருக்கே தெரியல தம்பி. (சேலைத்தலைப்பில் கண்ணீரைத் துடைக்கிறார்)

இங்கிருந்தால் வேலை நடக்காது என்று புரிந்த செல்வா, சரி சோனியாஜி தான் ஒரே தீர்வு என்று அவரை பார்க்க கிளம்பினார்.

செல்வா : வணக்கம் சோனியா மேடம்

சோனியா : வணக்கம். என்ன விசயம் ?

செல்வா விசயத்தை சொல்லி முடிக்கவும். யோசிக்கிறார் சோனியா.

சோனியா : அவிங்க பொதுமக்களை தானே கொல்லுறாங்க, நாங்க பண்ண வேண்டியத அவிங்களே பண்றாங்க? தம்பி நீங்க கிளம்பலாம்.

ராகுல் : மம்மி மம்மி அடுத்து அஞ்சு மாசத் தேர்தல் வருதே, நான் போகட்டா?

சோனியா : காங்கிரசை ஒழிக்க நீ போதும் ராசா. போ போ

செல்வா (மனத்துக்குள்) : அதைத் தான் நாங்களும் பண்ணனும்.

வெளிறிய முகத்தோடு அடுத்து பாகிஸ்தான் பிரதமரை பார்க்கலாமா என்று யோசிக்கிறார்.
------

பின்குறிப்பு : 

இந்தக் கதையில் நகைச்சுவையே இல்லையே என்பவர்களுக்கு ஒரு நகைச்சுவை 

"நகைச்சுவை" (செல்வா எபக்ட்)



Tuesday, January 3, 2012

விளையாட்டு - சிறுகதை

டேய் யாருடா ராணி?

வினோத்தும் ரமேசும் என பதில் வந்த பின், சரவணன் அடித்த கோலியின் வேகத்தில் இரண்டாய் பிளக்கிறது வினோத்தின் கோலி.

டேய் நீ பெரிய கோலி வச்சுக்கிட்டு சின்னதா இருந்தா உடைக்கிறியா? இரு இரு நான் ஊருல இருந்து வரும் போது நாலு பெரிய கோலி வாங்கிட்டு வரேன். அப்புறம் பாரு என்று வினோத் சீறினான்.

எந்த ஊருடா?

மெட்ராஸ் டா. எங்க அத்த ஊர்ல இருந்து வந்துருக்கு. இன்னிக்கு ராத்திரி நாங்க ரயில்ல போறோமே. அப்புறம் ஆனந்த் இருக்கான் அவன் கூட நிறைய விளையாடுவேனே! அப்புறம் பீச்சுக்கு போவேன். இன்னும் நிறைய இருக்கு தெரியுமா?

முடித்து விட்டு ஒரே மூச்சில் வீட்டுக்கு வந்த வினோத் அத்தையை காணாமல்,

அம்மா, அம்மா

என்னடா?

அத்த எங்க?

ஊருக்கு போயிட்டாங்கடா.

ம் போ, நீ பொய் சொல்ற. சொல்லும் போதே வெளியிலிருந்து வந்த அத்தை,

உன்ன விட்டுட்டு போவேனா வினோத்? துணியெல்லாம் எடுத்து வச்சுக்க சாப்பிட்ட பிறகு போலாம்.

மேலும் படிக்க - அதீதம்


- சூர்யபிரபு


Monday, January 2, 2012

2011 திரைப்படங்களின் ஒரு வரி விமர்சனம்

விதவிதமாக படங்கள் கடந்த வருடத்தில். சில ஏன் இப்படி? சில அட போட வைத்தன. பல பணம் வீண் என்று. 

எனக்கு பிடித்தவை ஆரண்ய காண்டம், அழகர்சாமியின் குதிரை, எங்கேயும் எப்போதும், வாகை சூட வா, மௌன குரு, வானம், பயணம். பார்க்க துடிக்கும் படங்கள் பாலை, நர்த்தகி,வெங்காயம்(இவைகளுக்கு விமர்சனத்தை பார்த்தே என் விமர்சனம்).  

ஆரண்ய காண்டம் இந்த வருட தமிழ் சினிமாவின் திருஷ்டி பொட்டு. கேமரா, திரைக்கதை, எடிட்டிங் இவை எல்லாம் சேர்ந்து ஒரு மிகப்பெரிய படத்தை தந்தன. குமாரராஜா வழக்கமான தமிழ் சினிமாவுக்கு நுழையாமல் அடுத்த நிலைக்கு தமிழ் சினிமாவை கொண்டு செல்ல முயற்சிக்கலாம். 

  1. ஆடுகளம் - தமிழ் சினிமாவுக்கு புதிய களம்
  2. சிறுத்தை - இடுப்பு கறி மட்டும் சாப்பிட்டது
  3. இளைஞன் - ஆவ்வ் ஒன்று 
  4. காவலன் - தளபதியை காப்பாற்றியவன் 
  5. யுத்தம் செய் - இன்னொரு அஞ்சாதே
  6. தூங்கா நகரம் - மற்றும் ஒரு படம் மதுரையிலிருந்து 
  7. பயணம் - புதிய பயணம் 
  8. நடுநிசி நாய்கள் - விபரீத முயற்சி 
  9. சீடன் - சில்லறை முயற்சி
  10. சிங்கம் புலி - சில்மிஷம்
  11. லத்திகா - தமிழ் சினிமாவின் பயங்கரம்
  12. முத்துக்கு முத்தாக - பிள்ளைகளுக்கு
  13. மாப்பிள்ளை - மொக்கை மாப்பிள்ளை
  14. பொன்னர் சங்கர் - ஆவ்வ் இரண்டு 
  15. வானம் - வானவில்
  16. எங்கேயும் காதல் - மொக்கை காதல்
  17. அழகர்சாமியின் குதிரை - பந்தயத்தில் ஜெயிக்க தவறிய குதிரை
  18. நர்த்தகி - அற்புதம்
  19. ஆரண்ய காண்டம் - அற்புதம்
  20. அவன் இவன் - எவன் இவன்?
  21. 180 - ஓகே
  22. வேங்கை - தண்டச் செலவு பார்த்தவருக்கு
  23. தெய்வ திருமகள் - சுட்ட நிலா 
  24. காஞ்சனா - அய்யோ மம்மி
  25. வெப்பம் -சூடு கம்மி 
  26. டூ - காமெடி கும்மி
  27. போட்டா போட்டி - பார்க்கலாம் 
  28. வெங்காயம் - உரித்துப் பார்க்கலாம்
  29. மாங்காத்தா - ஜெயித்த குதிரை
  30. எங்கேயும் எப்போதும் - எப்போதும் எங்கேயும்
  31. வந்தான் வென்றான் -பார்த்தவன் நொந்தான் 
  32. முரண் - வெளியே சொல்லி சுட்டது
  33. வாகை சூட வா - வெற்றிபெறாத வாகை 
  34. வெடி - நமுத்துப்போன வெடி
  35. வேலூர் மாவட்டம் - மற்றுமொரு
  36. சதுரங்கம் - தாமதமான ஆட்டம் 
  37. வர்ணம் - வானவில்
  38.  7ஆம் அறிவு - நாலாவது அறிவுக்கு மேல் தேறல
  39. வேலாயுதம் - பல முறை பயன்படுத்தப்பட்ட ஆயுதம் 
  40. தம்பி வெட்டோத்தி சுந்தரம் - வருடத்தில் சொதப்பியது
  41. பாலை - தமிழர்களின் பசுமை 
  42. வித்தகன் - பலமுறை வித்த கன்
  43. போராளி - போராடவே இல்லை
  44. ஒஸ்தி - பள்ளிச்சிறுவனின் போலீஸ் வேஷம் 
  45. மம்பட்டியான் - பழைய பிரியாணி
  46. மௌன குரு - கலக்கல்