Pages

Wednesday, February 15, 2012

தோனி - நான் படித்த படம்

சில படங்களை சிறுவர்களுக்கான படம் என்று சொல்வோம். ஆனால் அதை சிறுவர்களை விட பெரியவர்கள் தான் அதிகம் பார்க்க வேண்டி இருக்கும் என்பதை நாம் புரிந்து கொள்வதே இல்லை. அந்த வகையில் தோனி படம் சிறுவர்களை பற்றிய பெரியவர்களுக்கான படம், இல்லை பாடம் என்றே சொல்லலாம். 

மகேஷ் மஞ்ரேக்கரின் Shikshanachya Aaicha Gho என்ற மராத்தி படத்தின் தமிழ் பதிப்பு தான் தோனி. தமிழில் பிரகாஷ் ராஜ் தானே இயக்கி உள்ளார். தமிழ் சினிமாவுக்கு ஒரு அருமையான புதுமுக இயக்குனர். 

கிரிக்கெட் கிரிக்கெட் என்று கிரிக்கெட் மீதும், தோனி மீதும் மட்டும் விருப்பம் உள்ள ஆகாஷை M.B.A படிக்க வைக்க வேண்டும் என்பது பிரகாஷ் ராஜின் விருப்பம். ஆகாஷ் என்ன ஆனான் என்பது கதை.



மிடில் கிளாஸ் தந்தை ஆகவும், தாயில்லா குழந்தைகளை பராமரிப்பதிலும், பக்கத்து வீட்டு பெண் துணியோடு விழுந்த ஜட்டியை எடுக்க பதறுவதுதும், தன் மகன் குறித்து வருந்துவதுமாக பிரகாஷ் ராஜ் தான் எல்லாமே.இவருடன்  கிடைத்த கேப்பில் சிக்ஸர் அடிக்கிறான் ஆகாஷ். 

ராதிகா ஆப்தே மிக அருமையான புதுவரவு தமிழுக்கு. நடிக்கத் தெரிந்த பொண்ணு. ராதா மோகன் படம் போல ஒவ்வொரு கதாபாத்திரமும் ஈர்க்கிறார்கள். கந்துவட்டி பாய், பள்ளி முதல்வர், பக்கத்து வீட்டு நண்பர்கள் என அனைவரும்.  நாசர் மிக நீண்ட நாளுக்கு நடித்து பார்க்கிறேன். கிரிக்கெட் கோச் ஆக கொஞ்ச நேரமே வந்தாலும் ஈர்க்கிறார்.

ஒரு படத்துக்கு பாடல் எந்த இடத்தில் வர வேண்டும் என்பது ராஜாவுக்கு மட்டுமே தெரியும் போல. மனுஷன் பின்னணியிலும் அசத்தி உள்ளார். 

கிட்டத்தட்ட நண்பன் படம் போன்ற கதை என்றாலும், அதில் இலியானா இடுப்பையும், அஸ்கு லஸ்கா பாட்டையும் பார்த்துவிட்டு ஏன் இலியான இவ்வளவு மெலிந்தார் என்று வருத்தபட்ட ஆட்களில் எத்தனை பேர் படத்தின் ஆழத்தை உணர்ந்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் தோனி, எந்த வித சமரசமும் இன்றி நேரடியாக கல்வி முறையில் மாற்றம் வேண்டும் என்பதை எடுத்துரைக்கிறது. 

ஆனால் வெறும் கல்வி முறை மாற்றம் மட்டும் மாற்றத்தை ஏற்படுத்தி விடுமா? என்ற பெரிய கேள்வி எழுகிறது. இப்போது உள்ளதில் சில மாற்றங்கள் செய்தாலும் பெற்றோர் மனம் மாறினால் தானே மாற்றம் நடக்கும். 8 அல்லது 10 வரை இப்போது உள்ளபடியே தொடர்ந்து விட்டு அதன் பிறகு விருப்பத் துறையை மட்டும் படிக்கும் வண்ணம் மாற்றலாம். இப்போது உள்ள 11, 12 முறையை கண்டிப்பாய் மாற்ற வேண்டும். இதை 8-ஆம் வகுப்பில் தொடங்குதல் மிகவும் சிறந்தது. 

தன் பையனை படி படி என்று சொல்லும் பெற்றோர் அவன் ஓய்வு நேரங்களில் என்ன செய்கிறான் எதில் அவனுக்கு விருப்பம் என்று பார்ப்பதே இல்லை. இன்றைய எந்திர வாழ்க்கையில் படிப்பு, மதிப்பெண் இல்லாவிட்டால் வாழ்க்கையே இல்லை என்று நினைப்பவர்களை முகத்தில் அறைந்துள்ளது படம்.

அத்தோடு விளையாட்டு என்றால் பெரும்பாலும் கிரிக்கெட் என்று முன் வைக்கப் படுகிறது. மற்றவை நிறைய பேர் கண்களுக்கு தெரிவதே இல்லை. வெற்றி பெறுபவர்களுக்கும் சரியான அங்கீகாரம் இல்லை. இந்த நிலையில் எப்படி அவர்கள் மற்ற விளையாட்டுகளை விரும்புவார்கள் ? அரசும், மீடியாவும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. சச்சினின் நூறாவது சதத்துக்கு காத்திருக்கும் மீடியா, நூறு வெற்றி பெற்ற மற்ற விளையாட்டு வீரர்களை ஒரு பத்தியில் அடைத்து விடுகிறது. ஹாக்கி, கபடி என அனைத்தும் புறக்கணிக்கப் படுகின்றன. இவர்களே மக்களின் எண்ணங்களையும் தீர்மானிக்கின்றனர். இதைதான் மக்கள் விரும்ப வேண்டும், அதை முக்கியப்படுத்தினால் எவரும் பார்க்க மாட்டார்கள் என்று.   ஒரே இலக்கை நிர்ணயிக்க கூடாது. படத்தில் வேறு ஒரு விளையாட்டை பயன்படுத்தி இருக்கலாம். ஒரு கவர்ச்சிக்காக கிரிக்கெட் பயன்படுத்தி உள்ளார்கள் என்று நினைக்கிறன். 

அத்தோடு பிள்ளைகள் விருப்பத்தை மதிப்பது என்பதன் உடனடியாக நடக்கும் விஷயம் அல்ல. இப்போது கிட்டத்தட்ட வயது 30 களில் இருப்பவர்கள் தொடங்க வேண்டிய மாற்றம் இது. தனக்கு பிறக்க போகும்.பிறந்த குழந்தையை என்ன செய்வேன் என்று நினைக்காமல், அவன் விருப்பத்தை அறிய முயற்சிக்க தன்னை தயாராக்க வேண்டும். அநேகமாக எங்களது தலைமுறை மட்டுமே அதை நடத்த முடியும் என்று தோன்றுகிறது. 

இந்தப் படம் இப்போது பிள்ளைகளை படிக்க வைப்பவர்களுக்கு இல்லை, ஏன் என்றால் அவர்களால் இதை புரிந்து கொள்ள இயலாது. அவர்கள் இப்போது பாதி கிணறு தாண்டி விட்டார்கள். அடுத்த தலைமுறையை உருவாக்கப் போகும் நாம் (20 to 35) என்ன செய்யப் போகிறோம்?

படத்தில் ஒரு காட்சியில், குழந்தைகள் சிறு வயதில் கஷ்டபட்டால் தான் பின்னால் சந்தோசமாக இருக்க முடியும் என்று சொல்லும் போது கஷ்டப்படவே தேவை இல்லை என்று பிரகாஷ் சொல்வார். அது தான் உண்மை. சிறு வயதில் இருந்து கஷ்டப்படு, கஷ்டப்படு என்று சொல்லி சொல்லி வாழ்க்கை முழுவதும் கஷ்டத்தில் இருக்க விடுகிறோம். அவ்வளவு பெரிய பணக்காரர் பில்கேட்ஸ் க்கு கவலை இருக்காதா? அம்பானிக்கு கவலை இருக்காதா?  25 வயதுக்கு மேல் கவலை  கொள்ளாவிட்டால் அது பிணமாகத்தான் இருக்க முடியும்.

பால்ய பருவம் மட்டுமே கவலை இல்லாப் பருவம், குழந்தைகள் என்பவர்கள் உங்கள் வீட்டு டிவி அல்ல தேவையான படி சேனல் போல மாற்றிக் கொள்ள. அவர்கள் இந்த உலகின் கடவுள் போல, கதவை அடைக்காமல் கொஞ்சம் திறந்து வையுங்கள் வெளியுலகை சுற்றி வரட்டும். முன்பு ஒரு கட்டுரையில் எழுதியது நினைவுக்கு வருகிறது.


 "என் தந்தை என்னை இப்படி ஆக்கவில்லை எனவே நான் என் பிள்ளையை இப்படி ஆக்கிடுவேன். "கொஞ்சம் மாற்றி யோசித்து பாருங்கள் "என் தந்தையால் என் ஆசையை நிறைவேற்ற இயலவில்லை. ஆனால் நான் என் பிள்ளையின் ஆசையை நிறைவேற்றுவேன்." 

அவ்ளோ தான் நண்பர்களே.

Friday, February 10, 2012

பழுது படாத பாசம் - கவிதை

ஈகரை கவிதைப் போட்டி ஐந்தில் இரண்டாம் பரிசு பெற்ற என் கவிதை. மிகப் பெரிய அங்கீகாரத்தை அளித்த ஈகரைக்கு என் நன்றிகள்.






எட்டணாவுக்கு பத்துதான் என
பதினொரு மிட்டாய் தந்த
பலகாரக் கடை பாட்டி !

அஞ்சு ரூபாய் அதிகம்
அப்புறம் வாங்கிக்கலாம் என
சிரித்த மளிகைக்கடை தாத்தா !

ஒண்ணே கால்கிலோ வருமென
ஒரு கிலோக்கு காசு வாங்கிய
காய்கறி விற்கும் ஆச்சி !

அடுத்தமுறை வருவேன் என
பனிரெண்டுக்கு பத்து வாங்கிய
முடி வெட்டும் பெரியவர்!

தாகத்துக்கு நீர் கேட்டால்
வெயிலுக்கு மோர் தந்த
என் வெள்ளந்தி அப்பாயி !

பழுது படாத பாசம்
பகிர்ந்த தலைமுறை இன்று
படங்களில் மட்டும் சிரிக்கிறது.


Wednesday, February 8, 2012

ஈழம் பாடாத இதயம் - கவிதை

ஈகரை கவிதைப் போட்டிக்கு அனுப்பி பரிசு பெறாத என் கவிதை. 



இருபது வயது பெண்ணின்

நிர்வாணம் என்ன செய்யும்?

லிங்கம் புடைக்கும் உலகமிதில்

அங்கம் புடைக்க அழுதேன்


என் இனப் பெண்களுக்கு

இறந்த பின்னும் இழிவு கிடைக்க,

மரணத்தை ரசிக்கும் ஓநாய்களாய்

ஒரு கூட்டமதை ருசிக்க,


கண்டுகொள் உலகமே என

காணொளியில் காட்டப்பட – அதில்

மறைக்கப்பட்ட கருப்பில் இருந்து

மலர்ந்த பிஞ்சுகள் கதறியழ,


ரத்தம் படிந்த மண்ணில்

புத்தன் புதிதாய் பிறந்திருக்க,

வெடித்த சிரிப்போடு வேதாளம்

ஆட்சிப் பீடத்தில் தொடர்ந்திருக்க,


கேட்ட கேள்விகள் எல்லாம்

கிணற்றில் போட்ட கல்லாக,

திறந்த நிர்வாணத்தில் காண்கிறேன்

மறைந்து கிடைக்கும் மனிதநேயத்தை.