Pages

Wednesday, April 13, 2011

கல்லூரி & நட்பு

கல்லூரி

நான்கு வருட-இந்த 
கல்லூரி வாழ்க்கையினை-ஒரு 
நான்கு நிமிட பாடலாய் 
நினைந்திடுவேன்! 

நான்கு திசையெங்கும், 
ஒலித்திடும் இந்த பாடல்
நான்கு பேர் என்னைத் 
தூக்கும் வரை தாலாட்டும்!! 

கற்றதும், பெற்றதும் 
பல இங்கு 
எதுவும் மறப்பதற்க்கும் இல்லை 
மறுப்பதற்க்கும் இல்லை !!!

அன்பு; பண்பு; பாசம்; 
துரோகம்;வெற்றி; 
தோல்வி; நட்பு; காதல்; 
இத்தோடு 
பட்டியலிடாத பலவும் 
எனக்கு நீ அளித்தாய்!!!! 
எதற்காக என் மனதில்
பாதரசமாய் தெளித்தாய் ?

என் ஒவ்வொரு 
நிமிடத்தின் நொடிகளிலும்
நீ தந்த உறவுகள்
என் நினைவை தாலாட்டும் !!!!!!!

உன்னில் நான், 
புன்னகைக்காத நாளில்லை
இனி உன் நினைவன்று 
கண்ணிமையில் கொஞ்சம் நீர் 
வரா வேளையில்லை !!!!!!!!


காலத்தின் கட்டாயத்தில் 
பிரிகிறேன்
என் லட்சியங்களுடன் வெற்றி 
இணைய !!!!!!!!!
------------------------------------------------------------------

நட்பு  

நான் அழுவதற்க்கு,
ஆயிரம் காரணம்!
நான் சிரிக்க,
ஒரே காரணம்
என் நட்பு !!
_கி.பி

Friday, April 8, 2011

!! யாதுமாகி நின்றாய் !!

 நான் 12ஆம் வகுப்பு படிக்கும் போது (2006) மாவட்ட அளவிலான கவிதைப் போட்டியில் எழுதியது இது. நான் எழுதிய கவிதைகளில் சிறந்த ஒன்றாக நான் கருதுவது. தங்கள் கருத்துக்களை சொல்லிச் செல்லுங்கள்.  


யாதுமாகி நின்றாய் 
தமிழே நீ 
யாதுமாகி நின்றாய் 

எல்லாமாய் நின்று 
எங்கள் வளர்ச்சிக்கு 
உதவிய தமிழே 

உன்னை
தெய்வம் என்று
பூஜிக்கின்றனர் 
எதையும் உணராத 
படமாய் மாற்றி!!

அன்னை என்று 
சொன்னர் மூவாயிரம் 
ஆண்டு காலமாய்,
இன்றோ  நீ 
முதியோர் இல்லத்தில் !!

மரங்களிடையே வீசும்
தென்றல் என்று 
சொல்லிச் சொல்லி 
 மரத்தையே வெட்டும் 
 மறத்தமிழன் ஆனோம் !!

அமுது நீயாம் 
அதைக் குடித்தவர் 
புகழோடிருக்க 
நீ மட்டும் 
அழிந்து வருகிறாய் !! 

உன்னை கன்னி 
என்று அழைத்து 
கடைசிவரை நீ 
முதிர்கன்னியாகவே 
இருந்து விட்டாய்!! 

தெய்வம்; அன்னை; கன்னி; 
தென்றல்; அமுது; என்று 
யாதுமாகி நின்றாய் 
இறுதியில் 
இழிவுபட்டு நின்றாய் !! 

இனியும் ஆடை,
அணிகலன்களோடு
இந்நாட்டினுள் வாராதே;
அதையும் பறித்து 
அம்மணமாக்கி விடுவான் 
அனைத்தும் மறந்த 
மறத்தமிழன் !!

-கி.பி