நான் 12ஆம் வகுப்பு படிக்கும் போது (2006) மாவட்ட அளவிலான கவிதைப் போட்டியில் எழுதியது இது. நான் எழுதிய கவிதைகளில் சிறந்த ஒன்றாக நான் கருதுவது. தங்கள் கருத்துக்களை சொல்லிச் செல்லுங்கள்.
யாதுமாகி நின்றாய்
தமிழே நீ
யாதுமாகி நின்றாய்
எல்லாமாய் நின்று
எங்கள் வளர்ச்சிக்கு
உதவிய தமிழே
உன்னை
தெய்வம் என்று
பூஜிக்கின்றனர்
எதையும் உணராத
படமாய் மாற்றி!!
அன்னை என்று
சொன்னர் மூவாயிரம்
ஆண்டு காலமாய்,
இன்றோ நீ
முதியோர் இல்லத்தில் !!
மரங்களிடையே வீசும்
தென்றல் என்று
சொல்லிச் சொல்லி
மரத்தையே வெட்டும்
மறத்தமிழன் ஆனோம் !!
அமுது நீயாம்
அதைக் குடித்தவர்
புகழோடிருக்க
நீ மட்டும்
அழிந்து வருகிறாய் !!
உன்னை கன்னி
என்று அழைத்து
கடைசிவரை நீ
முதிர்கன்னியாகவே
இருந்து விட்டாய்!!
தெய்வம்; அன்னை; கன்னி;
தென்றல்; அமுது; என்று
யாதுமாகி நின்றாய்
இறுதியில்
இழிவுபட்டு நின்றாய் !!
இனியும் ஆடை,
அணிகலன்களோடு
இந்நாட்டினுள் வாராதே;
அதையும் பறித்து
அம்மணமாக்கி விடுவான்
அனைத்தும் மறந்த
மறத்தமிழன் !!
-கி.பி