Pages

Thursday, October 25, 2012

பெயர் பிரபு, வயது பனிரெண்டு - மீண்டும் காமிக்ஸ் அனுபவம்

நீண்ட நாட்களுக்கு பிறகு ஒரு பதிவு. இந்த வலைப்பூவில் அவ்வப்போது எதையாவது எழுதாவிட்டால் பலே பிரபு என்ற "பிரபல பதிவர்" ஒருவர் இருப்பதையே இந்த உலகம் மறந்து விடும், அப்படி எதுவும் அசம்பாவிதம் நிகழ்ந்து விடாமல் இருக்கவே சில சமயம் பதிவு எழுத வேண்டியுள்ளது. 

இந்த முறை பதிவு எழுத காரணம் ப்ளேட் பீடியா கார்த்திக். கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அவரை பிடித்து சில தொல்லைகள் செய்ய நண்பர் புண்ணியத்தில் பல வருடங்களுக்கு பிறகு எனக்கும் காமிக்ஸ் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த பதிவில் அந்த காமிக்களின் கதை எதையும் விமர்சிக்க போவதில்லை நான். என்னுடைய அனுபவத்தை மட்டுமே பகிர்கிறேன்.

கார்த்திக் உதவியால் லயன்/முத்து காமிக்ஸ் அலுவலகத்துக்கு தொடர்பு கொண்டு நான்கு புத்தகங்களை ஆர்டர் செய்தேன். புத்தகம் கைக்கு வந்து சேர்ந்த போது அதை படிக்கும் மன நிலையில் நான் இல்லை. முக்கிய காரணம் நான் சிறு வயதில் படித்தது ராணி காமிக்ஸ். எப்போதோ ஒரு முறை இரும்புக் கை மாயாவியை படித்த ஞாபகம். முகமூடி வீரர் மாயாவி, ஜேம்ஸ்பான்ட் என்று படித்து வந்தவனுக்கு முத்து/லயன் காமிக்ஸ் ஹீரோக்கள் அந்நியமாக தெரிந்தார்கள். 

சரி வாங்கி  விட்டோம் படிக்காமல் விட்டால் சரியாய் இருக்காது என்று முதலில் படிக்கத் தொடங்கியது 'லயன் Come Back ஸ்பெஷல்". இதன் முதல் காமிக், லக்கிலுக்கின் "ஒற்றர்கள் ஓராயிரம்".  சுத்தமாக என்னை ஈர்க்கவே இல்லை. அதே புத்தகத்தின் அடுத்த காமிக் "கானகத்தில் களேபரம்" இதை  முழுதாக படித்தவுடன் புத்தங்களை தூக்கி ஓரமாக வைத்து விட்டேன். 

எப்போதுமே நான் வாங்கிய எந்த புத்தகத்தையும் வீண் என்று நினைத்தது இல்லை. அவற்றில் ஏதோ ஒரு பலன் இருக்கும் என்பது என் எண்ணம். இது பேருந்தில் வாங்கும் பத்து ரூபாய் புத்தகமானாலும் சரி, பேருந்து நிலையத்தில் கிடைக்கும் சரோஜா தேவி புத்தகமானாலும் சரி, எல்லாவற்றுக்கும் பொருந்தும். 

சில நாட்கள் கைவசம் இருந்த மற்ற புத்தகங்களை படித்தேன். அதன் பின்னர் மீண்டும் காமிக் படிக்க வேண்டிய நிலை. முதல் முறை படித்த புத்தகத்தை கொஞ்ச நேரம் பார்த்து கொண்டிருந்தேன். என் தவறு மெல்ல புரிய ஆரம்பித்தது. முதலில் காமிக் படிக்க ஆரம்பித்தது பத்து வயதுக்கு பிறகு தான் அப்போது ஒரு ஹீரோ இப்படி இருக்க வேண்டும், அப்படி இருக்க வேண்டும் எதையுமே நான் எதிர்பார்த்தது இல்லை. ஆனால் இந்த திரைப்படங்கள் என்னை கெடுத்து வைத்திருந்தன. நிறைய எதிர்பார்த்து படித்தது தான் முதலாவது பிடிக்காமல் போன காரணம்.

எனவே இந்த முறை Tom & Jerry, Ice Age போன்றவற்றை பார்க்கும் மனநிலையில் படிக்கத் தொடங்கினேன். இந்த முறை படித்தது "Double-Thrill ஸ்பெஷல்" புத்தகத்தில்  "பரலோகப் பாதை பச்சை". இது மிகவும் அசத்தல் என்று என்னால் சொல்ல முடியவில்லை ஆனால் அடுத்ததை உடனே படிக்கும் ஆர்வம் வந்தது அதே புத்தகத்தின் இன்னொரு காமிக் "பனியில் ஒரு பரலோகம்". இது தான் என்னை முழுமையாக காமிக்கின் உள்ளே இழுத்து சென்றது. ஒரு விபத்தில் இறந்து போன(!) ஜிஜானோவ், அதன் பின் நடக்கும் சில கொலைகள் என விறுவிறுப்பாக சென்றது காமிக். இதன் நாயகன் ரிப்போர்ட்டர் ஜானி. இந்த  காமிக்கின் ஒவ்வொரு பக்கத்தையும் ரசித்து ரசித்து படித்தேன்.அடுத்து நான் படித்தது "லயன் நியூ லுக் ஸ்பெஷல் (28 ஆவது ஆண்டு மலர்)" புத்தகத்தின் காமிக்கான லக்கிலுக்கின் "பனியில் ஒரு கண்ணாமூச்சி", இதை படிக்கும் போது லக்கி அதை செய்ய வேண்டும், இதை செய்ய வேண்டும் என்று எதையும் நான் எதிர்பார்த்திருக்கவில்லை. என் எதிர்பார்ப்பு (!!) பொய்யாகவில்லை. டால்டன் சகோதரர்களை பிடிக்க இவர் செய்ய முயற்சிகள், தப்பிக்க அவர்கள் செய்யும் காமெடி முயற்சிகள் என்னை ரொம்ப ஈர்த்தன. இந்த முறை லக்கியை எனக்கு பிடித்து விட்டது. அதே வேகத்தில் அவரின் "வானவில்லை தேடி"யையும் படித்து முடித்து விட்டேன்.இதை நான் ஊரில் இருந்த போது படித்த காரணத்தில் இன்னொரு புக் என்னிடம் இல்லை. பெங்களூருவில் இருந்தது. சரி கருப்பு-வெள்ளையில் உள்ள பழைய காமிக்களை படிப்போம் என முதலில் படித்தது "மனித வேட்டை". வண்ணத்தில் இல்லாத அந்த படங்கள் எனக்குள் வண்ண வண்ண எண்ணங்களை எழுப்பி விட்டன. அதன் இன்னொரு காமிக் மரண முரசுவும் எனக்கு பிடித்து இருந்தது. 

கடைசியாக நான் படித்தது "Surprise ஸ்பெஷல்". என்னை கட்டிபோட்ட புத்தகம் இதுதான். "என் பெயர் லார்கோ" & "யாதும் ஊரே ! யாவரும் எதிரிகள் !!" என்ற இந்த புத்தகத்தில் இருந்த இரண்டு காமிக்களுமே தொடர் போல இருந்தது. எனவே முழு மூச்சாக படித்து முடித்தேன். ஒரு நிறுவன தலைவரின் மரணமும் அதன் அடுத்த தலைவராக வரவேண்டிய லார்கோவுக்கு நிகழும் பிரச்சினைகளுமே கதை, அதை மிக அருமையாக படம் காட்டி இருந்தார்கள். இதில் எனக்கு லார்கோவை மிகவும் பிடித்து விட்டது.நான்கு புத்தகங்களுமே பழைய கருப்பு-வெள்ளை காமிக்களை கொண்டிருந்தன. அவற்றில் முக்கியமாக சொல்ல வேண்டியது "கொலைகார பொம்மை, இரும்புக் கை மாயாவி vs டாக்டர் மாக்னோ" மற்றும் முன்பு சொன்ன மனித வேட்டை. அதிலும் கொலைகார பொம்மை மாஸ். 

மொத்தத்தில் இந்த நான்கு புத்தகங்களும் என்னை ஈர்த்து விட்டன. அவற்றை பனிரெண்டு வயது சிறுவன் ஒருவன் மனநிலையில் படித்த போது மிகவும் பிடித்த எழுத்தாளரின் எழுத்து நம்மை கட்டிபோடும் அளவுக்கு இருந்தது உண்மை.  நான் விரும்பி படிக்கும் புத்தகங்களின் பட்டியலில் காமிக்கையும் இப்போது சேர்த்துள்ளேன். 

எப்போதும் குதூகலமான குழந்தை பருவ நினைவுகளுக்கும் இவை இழுத்து சென்றன. இப்போது புரிகிறது கார்த்திக் எப்படி தன் பதிவுகளை மிக நகைச்சுவையாக எழுகிறார் என்று. 

இந்த புத்தகங்களை பத்திரப்படுத்தி வைத்துள்ளேன், தொடர்ந்து வாங்கவும் முடிவு செய்துள்ளேன். அவற்றையும் பத்திரப்படுத்தி வைக்க விரும்புகிறேன். கண்டிப்பாக வருங்காலத்தில் அவை பயன்படும் என்ற நம்பிக்கை உள்ளது. 

அதோடு உங்களுக்கு ஒரு வேண்டுகோள், உங்களுக்கு குழந்தைகள் இருந்தால் தொலைக்காட்சியில் இருந்து அவர்களின் கவனத்தை மாற்ற இது போன்ற புத்தகங்களை வாங்கி தாருங்கள். இவை அவர்களின் வாசிக்கும் ஆர்வத்தை தூண்டும், ஒரு தோழனாக இருக்கும், பன்முகத் திறமையை வளர்க்க உதவும்.   

குழந்தைகள் இல்லை என்றால் நீங்கள் வாங்கி படிக்க முயற்சி செய்யுங்கள், என்னைப் போல நீங்களும் உங்களை குழந்தையாக உணர்வீர்கள். 

காமிக்ஸ் வாங்க விருப்பம் உள்ளவர்கள்: இந்த படத்தை பார்க்கவும்

சில காமிக் ப்ளாக்ஸ்ராணி காமிக்ஸ் ரசிகர்களுக்கு - ராணி காமிக்ஸ்

லயன்/முத்து காமிக் ஆசிரியர் விஜயன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் இப்போதைய குழந்தைகளை ஈர்க்க நீங்கள் இப்போதையை நாயகர்களை கொண்ட காமிக்களை வெளியிடலாம், அது அவர்களுக்கு வாங்கும் ஆர்வத்தை அதிகரிக்க செய்யும். குழந்தை என்று சொன்னது என்னை போல இருபதை கடந்தவர்களையும் சேர்த்து.  :-)

படங்கள் - ப்ளேட் பீடியா

15 comments:

 1. அருமை நண்பரே! என் தொந்தரவு தாங்கமால் காமிக்ஸ் படித்ததிற்கு என் மனமார்ந்த நன்றி! அதை பதிவாகவும் இட்டதிற்கு மிக மிக நன்றி! ஒரே ஒரு திருத்தம்! நீங்கள் படித்த காமிக்ஸ் கதைகளில் ஒரு சிலவை வேண்டுமானால் குழந்தைகளுக்கானதாக இருக்கலாம்! ஆனால், லார்கோ, ரிப்போர்டர் ஜானி, பிரின்ஸ் போன்றவர்களின் கதைகள் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் படிக்க வேண்டிய சரக்கு! :) இந்தியாவைப் பொறுத்தவரையில் காமிக்ஸ் என்பது குழந்தைகளுக்கு மட்டும் என்ற தவறான மனப்பாங்கே இளைஞர்களை / பெரியவர்களை காமிக்ஸ் பக்கம் ஈர்க்காமல் இருக்கின்றது! இது மாறும் சமயம் மீண்டும் ஒரு காமிக்ஸ் பொற்காலம் மலரும்!

  மிக்க நன்றி பிரபு! :)

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் லார்கோ, ரிப்போர்டர் ஜானி இரண்டு பேரும் என்னை ஈர்க்க காரணம் நீங்கள் சொன்னதாக கூட இருக்கலாம்.

   Delete
  2. //ஆனால், லார்கோ, ரிப்போர்டர் ஜானி, பிரின்ஸ் போன்றவர்களின் கதைகள் இளைஞர்கள் மற்றும் பெரியவர்கள் படிக்க வேண்டிய சரக்கு!//

   அப்போ எனக்கில்லையா? :( :( :(

   நமக்கு லக்கி லுக் தான் சரி வருவார்...

   Delete
  3. நீங்கள் அடுத்ததாக காமிக்ஸ் வாங்கினால் தவறாமல் Wild West Special-ஐ வாங்கி முதல் கதையான "எமனின் திசை மேற்கு"-ஐப் படிக்கவும்! நான் சொன்னதன் அர்த்தம் விளங்கும்! ஆனால், பதிவை முதலில் படிக்க வேண்டாம்! ஸ்பாய்லர்கள் அடங்கிய பதிவு அது! :)

   Delete
  4. @Abdul:
   //அப்போ எனக்கில்லையா? :( :( :(//
   நீங்கள் மகா பெரியவர் என்பதாலேயா?! ;)

   Delete
  5. அடுத்த மாதம் வாங்கலாம் என்று நினைத்துள்ளேன். கண்டிப்பாக இதையும் வாங்கி விடுகிறேன்.

   Delete
 2. // லக்கி அதை செய்ய வேண்டும், இதை செய்ய வேண்டும் என்று எதையும் நான் எதிர்பார்த்திருக்கவில்லை. என் எதிர்பார்ப்பு (!!) பொய்யாகவில்லை//
  கலக்குறீங்க! :)

  ReplyDelete
 3. நல்லா எழுதிருக்கீங்க சகோ.! நானும் என் காமிக்ஸ் அனுபவத்தை எழுதணும் போல...

  காமிக்ஸ், கதைகள் படிப்பதினால் கற்பனை சக்தி வளரும்.

  ReplyDelete
 4. சரிதான் தம்பி.அந்தந்த வயதுக்கேற்ற மனநிலை போல்தானே ஆர்வமும், விருப்பமும் இருக்கும்.

  ReplyDelete
 5. சரிதான் தம்பி.அந்தந்த வயதுக்கேற்ற மனநிலை போல்தானே ஆர்வமும், விருப்பமும் இருக்கும்.

  ReplyDelete
 6. ரொம்ப அற்புதமா விவரிச்சு இருக்கீங்க...நானும் போன முறை சென்னை சென்ற போது, 3 காமிக்ஸ் வாங்கி வந்தேன். டெக்ஸ் வில்லரின் தலைவாங்கி குரங்கு, அப்புறம் வேறு ரெண்டு காமிக்ஸ்..
  உண்மையில் நீங்க சொல்லுவது போல் காமிக்ஸ் படிக்கும் போது எனக்கும் எனது சின்ன வயசு ஞாபங்கள் வந்தன, நான் என்னோட பள்ளி பருவத்தில் வெறும் ராணி காமிக்ஸ் மட்டுமே படித்து வளர்ந்தேன், ஏன்னா அது தான் விலை 2 ரூபா.. ரெண்டு ரூபா தேத்தவே ரொம்ப கஷ்ட பட்ட காலம் எல்லாம் உண்டு. முத்து காமிக்ஸ், லையன் காமிக்ஸ் எல்லாம் அந்த காலத்தில் காஸ்ட்லி புக்ஸ்..எனக்கும் நீங்கள சொல்லுவது போல் லையன் காமிக்ஸ் ஹீரோக்கள் எல்லாம் கொஞ்சம் அந்நியமாக தான் தெரிந்தார்கள்..இப்பொழுது படிக்க படிக்க பழகி விட்டார்கள்..

  ReplyDelete
 7. உங்கள் காமிக்ஸ் மீண்டும் துயிர்த்தெழுந்திருப்பதற்கு வாழ்த்துகள், பிரபு. தமிழ் அல்லாத மற்ற மொழி காமிக்ஸ்களிலும் உங்கள் தேடுதல்கள் நீள வேண்டும் என்பதே என் அவா.

  ReplyDelete
 8. பிரபு, அருமையான எழுத்துநடை. கார்த்திக் பதிவுகளில் உள்ள நகைச்சுவை பாணி உங்களுக்கும் வரும்போல?! இன்னும் எழுதுங்கள் நேரம் கிடைக்கும்போதெல்லாம்!

  ReplyDelete
 9. பிரபு, உங்கள் எழுத்துநடை அருமை. காமிக்ஸ் பற்றிய உளவியல்பூர்வமான அனுபவம் ரசிக்கவைத்தது. இன்னும் நிறைய காமிக்ஸ் அனுபவங்களை எழுத வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 10. நல்வரவு நண்பரே! நிறைய எழுதுங்கள்! ரசிக்க நாங்க இருக்கோம்(வாசன் கண் விளம்பரம் போல படிக்கவும்!

  ReplyDelete