எப்போதும் மலையாள படங்கள் ஏதோ ஒரு வகையில் மனதுக்கு நெருக்கமாக இருக்கும். இந்த முறை ஒரு மலையாள படத்தை தியேட்டரில் பார்க்க வேண்டும் என்று நினைக்கும் எண்ணத்தை தொடர்ந்து என் கணினியில் பார்த்த மலையாள திரைப்படங்கள் விதைத்தன.
என்ன படம் பார்க்கலாம் என்று நினைத்த வேளையில் பிருத்விராஜ், மம்தா மோகன்தாஸ் , ஸ்ரீனிவாசன் ஆகியோர் நடிப்பில் வெளிவந்து ஒரே வாரத்தில் 7 மாநில விருதுகளை வென்ற Celluloid திரைப்படத்தை தெரிவு செய்தேன். விருதுகளை விட படத்தை பார்க்க தூண்டிய முக்கிய காரணம் ஜெ.சி.டேனியல் என்ற மனிதர். அவர் தான் மலையாள சினிமாவின் தந்தை.
1920 களில் தொடங்கும் படம், ஜெ.சி.டேனியல்(பிருத்விராஜ்) மும்பைக்கு சென்று எப்படி படம் எடுப்பது என்று கற்றுக் கொள்வதில் ஆரம்பமாகிறது. அங்கிருந்து சொந்த ஊரான திருவிதாங்கூருக்கு திரும்பி தன் மனைவி ஜேனட்டிடம் (மம்தா மோகன்தாஸ்) தன்னுடைய திரைப்படம் குறித்த கனவுகளை விவரிக்கிறார்.
படத்திற்காக தன் சொத்துக்களை விற்று படமெடுக்க ஆரம்பிக்கும் டேனியல்க்கு பல தடங்கல்கள் வருகிறது. இதிகாச கதைகளை தவிர்த்து தனது சொந்த கதையை திரைப்படமாக்க நினைத்து விகதகுமாரன் (The Lost Child - தொலைந்த குழந்தை) என்ற பெயரில் படமெடுக்க ஆரம்பிக்கிறார், அவரே ஹீரோவாக நடிக்கிறார். எப்படி படமெடுக்கிறார், என்ன வரவேற்பு கிடைக்கிறது, இறுதியில் அவர் எப்படி மலையாள சினிமாவின் தந்தையானார் என்பது தான் மீதிக்கதை.
படத்தில் நடிக்க மும்பையில் இருந்து நடிக்க வரும் கதாநாயகி பெரிய பந்தா செய்ய அவரை நீக்கி விட்டு கிராம கூத்துகளில் நடிக்கும் ரோசம்மாவை (சாந்தினி) அழைத்து வருகிறார். தலித் சமூகத்தவரான ரோசம்மாவின் கதையும் நெகிழ்ச்சியுடன் சொல்லப்பட்டுள்ளது. அவர் பெயரை ரோஸி என மாற்றுகிறார் டேனியல்.
படமெடுத்து முடித்த பின் அதை திரையிடும் டேனியல் ஊரில் உள்ள பெரிய மனிதர்களை அழைக்கிறார், படத்தில் நடித்த ரோஸியும் அழைக்கப்பட்டு உள்ளார். பெரிய மனிதர் என்ற போர்வையில் உள்ளவர்கள் தியேட்டருக்குள் ரோஸி வந்தால் நாங்கள் வரமாட்டோம் என்று சொல்கிறார்கள். வேறு வழி இல்லாமல் ரோஸியை அடுத்த காட்சி பார்க்க சொல்கிறார் டேனியல். படம் திரையிடப்படும் போது தியேட்டருக்கு வெளியே ஏக்கத்துடன் நிற்கிறார் ரோஸி. கொஞ்ச நேரத்தில் நாயர் பெண்ணாக தாழ்ந்த சாதியை சேர்ந்த ரோஸி நடித்துள்ளதை கண்டவர்கள் அதை எதிர்த்து தியேட்டரை விட்டு வெளியேறுகின்றனர். வெளியே நிற்கும் ரோஸியை கண்டவர்கள் அவரை துரத்தி அடிக்க செல்கின்றனர். அவர்களிடம் இருந்து தப்பி தன் வீட்டுக்கு வரும் ரோஸியை தேடி இவர்களும் வீட்டுக்கு வந்து அவரது தாய், தந்தையை தாக்குகின்றனர். அங்கிருந்து தப்பியோடும் இடத்தில் முடிகிறது ரோஸியின் கதை.
கேரளாவின் முதல் கதாநாயகியான ரோஸி அவ்வாறு துரத்தப்பட்டதாலோ தானோ என்னவோ இன்று வரை கேரள நாயகிகள் அனைவரும் வேறு மாநிலங்களுக்கு நடிக்க வருகிறார்கள்.
படத்தில் நடிக்க டேனியல் வீட்டுக்கு வரும் ரோசம்மா தான் தாழ்ந்த சாதி என்ற எண்ணத்துடன் எல்லாவற்றையும் கூச்சத்துடன் எதிர்கொள்கிறார். மதியம் சாப்பிடும் போது வீட்டுக்கு வெளியே அமர்ந்து கஞ்சி குடிப்பது போன்ற காட்சிகள் காட்டப்படும் போது எந்த அளவிற்கான சமூக கொடுமை நடந்துள்ளது என்பதை நம் மனதில் பதிய வைக்கிறது இப்படம். ரோசம்மாவின் கூச்சம் போக்க பிரயத்தனப்படும் டேனியல் சினிமாவில் சாதி, மதம் எதுவும் இருக்கப் போவதில்லை, சினிமாவில் தாழ்ந்த சாதிக்காரனை உயர்ந்த சாதிக்காரன் ஆக்கலாம் என்று கூறும் காட்சிகளில் அவரின் சமூக மாற்றம் குறித்த எண்ணமும் வெளிப்படுகிறது. ஜேனட்டும் இதற்கு ஆமோதிக்கிறார்.
படத்திற்கு அங்கீகாரம் கிடைக்காத காரணத்தால் தற்போது தமிழகத்தில் உள்ள அகஸ்தீஸ்வரத்தில் வந்து தங்குகிறார் டேனியல். பின்னர் சென்னை வந்து பல் மருத்தவம் படித்து மருத்துவர் ஆகிறார். பின்னர் மதுரை, புதுகோட்டை பகுதிகளில் மருத்துவராக இருக்கிறார். அவரிடம் சிகிச்சை பெற வரும் பி.யூ.சின்னப்பா அவரின் சினிமா ஆசை அறிந்து அவரை மீண்டும் படமெடுக்க சென்னை அழைக்கிறார். அவருடன் சென்று மீண்டும் சேர்த்த சொத்தை எல்லாம் இழந்து மறுபடியும் அகஸ்தீஸ்வரத்துக்கு திரும்புகிறார் டேனியல்.
1966-இல் மலையாள சினிமாவின் முதல் படமெடுத்த டேனியல் குறித்து அறிய வரும் பத்திரிக்கையாளர் சேலங்காடு கோபாலகிருஷ்ணன் (ஸ்ரீனிவாசன்) அவரை சந்திகிறார். அவருக்கான அங்கீகாரம் பெற ராமகிருஷ்ணன் ஐயர் ஐ.ஏ.எஸ் அவர்களை அணுகுகிறார். பிராமணர் எடுத்த பாலன் தான் முதல் படம் எனவும், நாடாராகிய டேனியல் எடுத்த படத்திற்கு ஆதாரம் எதுவுமில்லை எனவும் அவர் சாதி வெறியில் சொல்லிவிட கோபமாக வெளியேறுகிறார் கோபாலகிருஷ்ணன் . ஏழ்மையில் வாடும் தன் குடும்பத்துக்கு அரசு ஏதேனும் உதவி செய்யுமா என மீண்டும் கோபாலகிருஷ்ணனிடம் கேட்கிறார் ஜேனட். இதற்கான அனுமதியும் மறுக்கப்படுகிறது அதே அதிகாரியால். 1975 - இல் டேனியல் மரணிக்கும் போது அவர் சாதாரண மனிதன் தான். அதே ஆண்டில் தான் இறந்துள்ளார் இவரது பட நாயகி ரோஸியும்(படத்தில் ரோஸியின் இறப்பு காட்டப்படவில்லை).
இப்போது கேரளா அரசு மலையாள சினிமாவில் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு ஜெ.சி.டேனியல் விருது என்று பெயரிட்டு உள்ளது. பி.கே.ரோஸி என்ற பெயரில் கேரள அரசு ஒரு சினிமா விருது வழங்கும் என்றும் அறிவித்துள்ளது.
திரைப்படம் குறித்த தன் கனவுகளை விவரிக்கும் காட்சியில் கண்களிலேயே தன் ஆசைகள் மொத்தத்தையும் காண்பிக்கும் டேனியல், இறக்கும் தருவாயில் தன் படம் குறித்த அதே கனவுகளோடு இறக்கிறார். இரண்டுமே மிக அருமையான காட்சிகள். படத்தில் டேனியலாகவே வாழ்ந்துள்ளார் பிருத்வி ராஜ்.
ஒரு சினிமாக்காரரின் வரலாற்றில் சாதிக்கொடுமை போன்ற விசயங்களை சமரசமின்றி சொல்லி உள்ளார் இயக்குனர் கமல். காட்சி அமைப்புகள், நடிப்பு, கலை, கேமரா என அனைத்திலும் முந்தைய நூற்றாண்டை கண்ணில் நிறுத்தி உள்ளது இவரின் டீம். மலையாள சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனரான இவர், நமக்கு "பிரியாத வரம் வேண்டும்" திரைப்படம் தமிழில் ஏற்கனவே அறிமுகம் ஆனவர்தான்.
படத்தில் மிக முக்கியமாக குறிப்பிட்டு சொல்ல வேண்டியது இசை. இசையமைப்பாளர் ஜெயச்சந்திரனின் பின்னணி இசை, பாடல் இரண்டுமே படத்தின் கதை போலவே நம்மை ஈர்க்கின்றன.
படத்தின் பாடல்கள்:
படத்தின் பாடல்கள்:
செல்லுலாய்ட் மலையாளிகள் மட்டும் பார்க்க வேண்டிய படமல்ல. சினிமா ரசிகர்கள் ஒவ்வொருவரும் கண்டிப்பாக காண வேண்டிய படம்.
விமர்சனம் அருமையாக உள்ளது சகோ.!
ReplyDeleteI enjoyed the review. Samy
ReplyDeleteபடத்தை பார்க்கும் ஆவலை தூண்டும்படியாக அமைந்தாலும் யதார்த்தமான நடையில் அமைந்த நல்ல விமர்சனம்! ரசித்தேன்!
ReplyDelete