Pages

Showing posts with label சுற்றுலா. Show all posts
Showing posts with label சுற்றுலா. Show all posts

Wednesday, October 10, 2012

Coffee Gudda - அருமையான ஒரு சுற்றுலா அனுபவம்

கல்லூரி IV க்கு பிறகு பத்து பேருக்கு மேல் சேர்ந்து சென்ற முதல் ட்ரிப் Coffee Gudda. கர்நாடக மாநிலம், சிக்மங்களூரில் மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் Mudigre தாலுகாவில் இருந்த Samse என்றே ஊரில் இருந்த இடம் தான் Coffee Gudaa. நீண்ட நாளாக திட்டமிட்டு இந்த மாத தொடக்கத்தில் சென்று வந்தோம். தனியார் நபர் ஒருவரின் காபி எஸ்டேட் அது. அவர்களே ரெசொர்ட் போன்று அமைத்து அழைத்து செல்கிறார்கள். 

அவர்கள் வெப்சைட் - CoffeeGudda

கடந்த வெள்ளி இரவு ஒரு அருமையான Travels ஒன்றில் கிளம்பினோம். ஆட்டம், பாட்டம் என்ற கனவுகளோடு கிளம்பியவர்களுக்கு பேருந்தில் மியூசிக் சிஸ்டம் இல்லை என்பது முதல் அதிர்ச்சி, கிட்டத்தட்ட இரண்டு மணி நேர பயணத்துக்கு பின் வண்டி ஒரு டோல்கேட்க்கு அருகில் நின்றுவிட்டது இரண்டாவது அதிர்ச்சி. டிரைவர் மீண்டும் போன் செய்து வேறு வண்டி வர மேலும் மூன்று மணி நேரம் ஆகியது. அதுவரை கிட்டத்தட்ட நடுகாட்டில் இருந்தோம். நான் நன்றாக தூங்கிவிட்டிருக்க, அடுத்த வண்டி வந்தபின் தான் விசயமே தெரிந்தது. 

மீண்டும் விடியற்காலை கிளம்பிய பயணம் 11 மணிக்கு மேல் தான் நாங்கள் வந்து சேர வேண்டிய இடத்தில் முடிந்தது. இடையில் இரண்டு இடங்களில் காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு தரக்கூடாது என்று பிரச்சினை செய்தவர்கள் எங்களை தடுத்து வேறு நிறுத்தினார்கள். வண்டியில் இருந்தவர்களில் நான் மட்டுமே தமிழ்நாட்டில் இருந்து வந்தவன் என்பது குறிப்பிடத்தக்கது.




காலை சென்று குளிக்க எல்லாம் நேரமின்றி பல் மட்டும் துலக்கி விட்டு சாப்பிட அமர்ந்த நொடியில் துவங்கியது எங்கள் ட்ரிப்பின் கொண்டாட்டம். அரசமர இலை போன்ற ஒன்றில் சில இலைகளை கோர்த்து அதில் வடிவம் ஏதும் இல்லாத இட்லி தரப்பட்டது. வெள்ளை வெளேர் என்று இட்லி சாப்பிட்டவர்கள், கிட்டத்தட்ட சாம்பல் நிறத்தில் இருந்த இட்லியை சாப்பிட்டவுடன் எது இட்லி என்று புரிந்தது. உடன் ரைஸ் புலாவும் தந்தனர். சாப்பிட்டு முடித்த பின் அவர்கள் கொடுத்த காபி. அட அட அட அது தாங்க காபி. அசத்தலாய் இருந்தது. அதுவும் காபி, டீ எப்போது வேண்டும் என்றாலும் கிடைக்கும் என்று சொல்லி விட்டனர். பசி என்ற ஒன்று இல்லாவிட்டால் காபி மட்டுமே குடித்து வந்திருப்பேன் நான். 

சாப்பாடு முடிந்த சில நிமிடங்களில் “இளநீர் அருவி” என்ற இடத்தை நோக்கி கிளம்பினோம். ஒரு திறந்த ஜீப்பில் கிளம்பிய சில கிலோமீட்டர்களில் ஆறு அடி நீளமுள்ள ஒரு கருநாக பாம்பு எங்களுக்கு வழிகாட்டி சென்றது. அருவிக்கு அழைத்து செல்ல வந்த ஒருவர் மலை மேல் ஏறும் முன் அட்டை பூச்சி கடிக்காமல் இருக்க டெட்டால் கொடுத்து காலில் பூசிக் கொள்ள சொல்லி அழைத்து சென்றார். ஐநூறு மீட்டர் தொலைவில் மலை மேல் இருந்த அருவிக்கு சென்ற போது புதிய பூமிக்கு வந்தது போல ஒரு உணர்வு. எங்கே, எப்படி குளிக்க வேண்டும் என்று அவர் சொல்ல ஆபத்தான அந்த இடத்தில் எந்த ஆபத்தும் இன்றி குளித்து முடித்தோம். மூலிகை வளம் நிறைந்த அந்த அருவியில் குளித்த பின் எதோ ஒரு புது சக்தி வந்தது போல இருந்தது. அவர் கன்னடத்தில் பேசியதால் அருவியின் பெயர் காரணம் தெரியவில்லை.



இங்கே மின்சாரம் கொடுக்க முடியாத இடங்களுக்கு மலையில் இருந்து விழும் அருவி நீரின் மூலம் மின்சாரம் எடுக்கும் வழியை அரசு அமைத்து தந்துள்ளது. மூன்று வருடங்களாக அதன் மூலம் மட்டுமே அவர்கள் மின்சாரத்தை பெற்று வருகிறார்கள்.

மீண்டும் தங்கி இருந்த இடத்துக்கு வந்த போது மதிய உணவாக சிக்கன், சாதம் என பீஸ்புல் ஆன மதிய உணவு கிடைத்தது. மாலை ஆகிவிட்டதால் அதற்கு மேல் எங்கும் செல்ல முடியவில்லை. சிலர் மட்டும் காபி எஸ்டேட், டீ எஸ்டேட் என்று சுற்றி பார்க்க கிளம்பினர். சிலர் மட்டும் கிரிக்கெட், பேட்மிட்டன், கோல்ப் என மாறி மாறி விளையாடி கொண்டிருந்தோம். 

இரவு ஏழு மணிக்கு அடுத்த விளையாட்டுக்கு தாவி அதை இரவு பதினோரு மணி வரை தொடர்ந்தோம். நீண்ட நாட்களுக்கு பிறகு ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்துடன் ஒரு இரவு கழிந்தது. இடையில் அதே இடத்துக்கு வந்திருந்த இன்னொரு குரூப்பில் ஒரு சிகரெட்டுக்கு நடந்த பிரச்சினையில்  முழு போதையில் இருந்த ஒருவர் தெளிவாய் இருந்த யாரோ ஒருவரின் காலை உடைத்து விட்டிருந்தார்.

காலை 7 மணிக்கு எழுந்து மறுபடி சாப்பிட வந்தால் காலை உணவாக கடுபு என்று நம்ம ஊர் கொழுக்கட்டை போல ஒன்றை சிறிய உருண்டையாக கொடுத்தனர். இது இனிப்பில்லை என்றாலும் அவர்கள் கொடுத்த குழம்புடன் குழப்பி சாப்பிட்டால் சுவை சொல்வதற்கில்லை. அடுத்து கொடுத்த சாவிகே (நம்ம ஊர் இடியாப்பம், பால்) மிக அசத்தல்.

இந்த முறை கலாசாவுக்கு (Kalasa) அருகில் உள்ள ஒரு மலைக்கு சென்றோம். இரண்டு மணி நேர ஆபத்தான பயணத்துக்கு பிறகு மலை உச்சியை அடைந்த போது சொர்க்கம் என்று சொல்வார்களே, அது இது தானோ என்று சொல்லும் அளவுக்கு ஒரு அருமையான இடத்தில் இருந்தோம். சுற்றிலும் மலை தான். பசுமை பசுமை பசுமை என்று எங்கெங்கும் பசுமை தான். சிலர் அங்கேயும் பீர் பாட்டில்களை குடித்து வீசி இருக்க, நம்ம ஆட்கள் தான் என்றாலும்   இப்படி ஒரு இடத்தில் இதை செய்யலாமா என்று வருந்தினேன்.



நீண்ட நேரத்துக்கு பிறகு மீண்டும் கீழே இறங்கி வந்து நாங்கள் இருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தோம். மணி மாலை மூன்று ஆகிவிட  மதிய சாப்பாடு  வந்தது நெய் சாதம், சிக்கன், பாயசம் என்று அருமையான உணவுடன் ஒரு லெமன் டீ குடித்து எங்கள் பயணத்தை முடித்தோம். அதற்குள் ட்ரிப் முடிந்து விட்ட வருத்தம் இருந்த போதிலும் மிக அருமையான ஒரு இடத்துக்கு வந்தோம் என்ற திருப்தி இருந்தது. அதிலும் இடத்தின் ஓனர் எங்களுடன் குரூப் போட்டோ எடுத்துக் கொண்டு, வண்டி வரை எங்கள் பைகளை எடுத்து வந்து வழியனுப்பினார்.



அந்த இரண்டு நாட்களும் இணையம், அலைபேசி [நெட்வொர்க் இல்லை] என்று இரண்டும் இல்லாமல் மிக மிக மகிழ்ச்சியாக இருந்தோம். மீண்டும் பெங்களூருவுக்கு வந்து இறங்கிய காலையில் தொடங்கியது இயந்திரத் தனமான பழைய வாழ்க்கை.......